Mar 13, 2011

செய்யுளா? உரைநடையா?

காலமெலாம் கட்டிவந்த கவிதைகளில் தட்டிவராத்
தளைகளிடைத் தமிழ்க்கன்னி தனித்தன்மை பெற்றோங்கி
பொங்கிவரும் பூரிப்பால் பெருமைமிக வளர்ந்திருந்தாள்!
சிந்துவினைச் சொந்தமெனக் கொண்டவனப் பாரதியும்
தானெழுதி வைத்தவுரை நடைக்கவிக்குப் பொருத்தமதாய்         5
'வசனகவி' எனப்பெயரை வைத்தெழுதிப் போந்தார்.
'புதுக்கவிதை' என்றெழுத வில்லையவர் பண்பில்லை
இன்றெழுது வோரதனை ஏற்காமல் பெயர்வைத்தார்
திரைப்படத்தில் வசனங்கள் கூடவளம் பெற்றிருக்க
அவ்வசனம் போலவே அடிக்கொரு வார்த்தையென             10
அளந்தெழுதி வைத்துவிட்டு அதுகவிதை என்றால்
மதிப்பில்லை கவிதைக்கு, தமிழ்மகனுக் கெங்கிருக்கும்?
காளமேகம் அருணகிரி கண்டுவந்த தமிழ்மண்ணை
ஆளவந்து வழக்கமொழித்(து) அனைத்தையுமே மாற்றிவிட்டுத்
தமிழ்வளர வில்லையென நியாயங்கள் பேசிடுவார்               15
ஓசைநயம் ஒழுகுதமிழ் வடிவமைக்கத் தெரியாமல்
பேசுதமிழ்ப் போலவே பதம்சொல்லி வைத்துவிட்டு
உணர்வுகளே கவிதையென வசனங்கள் பேசிடுவார்!
உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதைமட்டும் கருவியில்லை
கவிதையிலே உணர்விருக்கும் கவினழகைக் காட்டிவிடும்          20
கண்டதெலாம் கவிதையெனக் கொண்டுவந்து விட்டாலோ
சிந்திக்க ஆளின்றிச் சீரழிந்து போயிடுமே!
திரிசொல்லைக் காணும்நம் பின்னோர்தாம் புரியாமல்
'என்னவிது?' என்றேதான் கேட்டிடுவார் என்சொல்ல?

Mar 3, 2011

விடையே தெரியாத விடியல்!

வாழ்க்கை...
விடையே தெரியாத விடியல்!
எண்ணங்கள் மட்டும்
எட்டாத உயரங்களையும்
எவ்வளவோ ஆழங்களையும்
குப்பைகளாய்க் குவித்துவைத்திருக்கும்.


இப்படியே செல்லும்
இந்த வாழ்க்கையில்
எத்துணைக்குத்தான் ஆசைப்பட முடியும்?
என்றெண்ணி,
இனி எந்த ஆசையும் வேண்டாம்
என்னும் போதினிலே
இறந்துவிடுகிறான் மனிதன்.


இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒருவகையில்
ஏதோ ஓர் ஆசைக்காய்
ஏங்குகிறது நெஞ்சம்.


ஆசை...
இன்பம் தேடல்
அடிப்படைத் தேவைகள்
தன்மானப் பிரச்சினைகள்
பண்பட்ட வாழ்க்கை
அஞ்சுதற்கு அஞ்சுதல்
என எவ்வகையிலும் இருக்கலாம்.


ஆக, ஆசையின் ஆளுகைக்குள்
அகப்பட்டவன் மனிதன்.
ஆசைப்பட்டவை கிடைக்கவும் செய்கின்றன.
ஆதலின் விடியல் எனலாமே.
விடை ஏது?
ஆசை ஏனெனத் தெரியாதபோது.

நிலையற்ற வாழ்க்கை

கால ஓட்டம்
காட்டாற்று வெள்ளம்!
கரைகளையும் அரித்துக்
கருவுக்குள் பதித்துத்
தான்மட்டும் செழிப்பாய்!
வாழ்க்கைப் போராட்டமோ?
உன்னைப் பொறுத்தவரையில் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில்
யாருக்கோ அடிமை நீ!


சஞ்சல நெஞ்சம்
சரித்திரக் களஞ்சியம்!
வாழ்ந்தேன் இங்ஙனம்
வீழ்ந்தேதான்!


எழும்போதெல்லாம்
என்னை என்ன செய்யமுடியும்?
என்கிற மமதை!
உன்பார்வையில் தன்னம்பிக்கை!
வாழ்ந்துவிட்டுப் போ!


விழும்போதெல்லாம்
விதியின் விளையாட்டு
வினை யாரை விடும்?
வீண்தத்துவம்!
ஆனால், அதுதான் ஆறுதல்.


யாவரும் எப்போதும்
ஒரே நிலை
என்பது நிலையில்லை!
மாற்றிப்போட்டவை வகுத்துத்தரும்
புதுப்பாதைகள்!
நிலையானது என எண்ணிச் செய்வது
சில காலங்களுக்கு நிலையானது.
ஆனால்,
அது என்றும் நிலையானது இல்லை.

Mar 1, 2011

பிதற்றல்

ஒன்றுமில்லை என்றுசொல்ல
இலக்கண மரபுகளையும்
இன்னிசைச் சந்தங்களையும்
இடையூறென்னும் துன்பங்களுக்கு
ஏன் ஆளாக்க வேண்டும்?


ஏதோ எழுதுவோம்
எண்ணங்களை!
இன்னும் தெளிவாய் அறிந்திராததைத்
'தெள்ளுதமிழ்' என்று சொல்லிக்கொண்டு
'செம்மொழி' எனும் போலிமகுடம் சூட்டிப்
பிதற்றல்களாய்ப் பதிவு செய்கிறேன்


காதல்கூடக் கரைந்துவிடும் வலியா?
மனிதனின் மனம்
எண்ணங்களின் கலவையாய்க்
குழம்பிப் போயிருந்தால்,
தர்க்கங்களின் தாக்குதல்களுக்கு
உள்ளாகியிருந்தால்,
அறிவுச் சுடரில் கருகிப் போயிருந்தால்,
மாறிமாறி வரும்
மழையும் வெயிலும் போலிருந்தால்
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


கரைந்துவிடுமானால் அது
காதல் அன்று
என்று வாதிட்டால்
காலங்காலமாய்
நெஞ்சங்களில் ஊறி,
இனி அழிக்கவே முடியாது என்றெண்ணி
உயர்ந்த காதல்,
உறுதிக் காதல்,
உத்தமக் காதல் என்று
பேரெடுத்தால்கூட,
மாறும் மனம் உள்ளவரை
காதல்கூடக் கரைந்துவிடும் வலிதான்!


இது வெறும் பிதற்றல்...
கவிதை என்று சொல்லிக்
கண்மூடித்தனமாய் இருந்துவிடாதே!
பாவம் தமிழ்!

Feb 27, 2011

இக்காலத் தமிழும் தமிழனும்

தளைகட்குள் தளைப்படாத
எளிய தமிழ் என்றதும்
எதை எண்ணியும் கவலை கொள்ளாமல்
எண்ண ஓட்டங்கள்
ஓங்குமலை மீதிருந்துப் பாய்ந்துவரும் அருவியெனப்
பொங்கிப் பெருகிப் பேராறாய் உருவெடுத்து,
விரிசோலை வளப்படுத்தலைப்போல்
ஒடுங்கிப்போய் ஒளிந்திருந்தவை
ஒளிபெற்று வெளிப்படுதல் உயர்தமிழே! உன்னால்தான்!
உனையன்றி யாரெனக்குப் பேராற்றல் தந்திடுவார்!
இப்படித்தான் இக்காலத் தமிழும் தமிழனும்

புதுக்கவிதையாம்...

இப்போதெல்லாம்
இதற்கென்று
சிந்திப்பதில்லை.
எண்ண ஓட்டங்களை
எல்லைப்படுத்தி
எழிலுறச் செய்வதில்லை.

இத்தகு சீரழிவுக்கு
நீதான் காரணம்!
எதைப்பற்றியும் கவலையில்லை
இதுதான் இக்கால உலகம்!
எல்லைமீறிப் போய்விட்டாய்!
இனிமையும் போய்விட்டது!
உன்னுள்ளும் என்னைத் தேட முடியுமா?

நீ ஆள வந்துவிட்டாய்!
நான் காணாமல் போகிறேன்...

என்னாட்சியில்
இனிமை என்ன குறைந்துவிட்டது?
என் ஆட்சியின் பலன்
எல்லாருக்கும் எட்டுவதில்லை!
அரிதின் முயன்றோர்க்கு
எளிதில் இடந்தருவேன்!

உழைப்பின் பலனை ருசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
அணுவணுவாய் ரசித்தவர்கள்
என் தலைமுறையினர்!
என்னுள்ளே ஏகப்பட்ட
ஆளுமைப் பிரிவுகள்
என்னை நன்றாய் உணர்ந்தவர்களை
எப்போதுமே கைவிடுவதில்லை நான்!
உனக்கு என்ன இருக்கிறது?
உன்னை ஆள்பவர்க்கும் ஆய்பவர்க்கும்
அவ்வளவு ஆழத் தோண்டுதல்கள்
தேவையில்லை!
உரித்துவைத்த வாழைப்பழம் நீ!
உண்மையைச் சொன்னால்
எல்லாருக்கும் நீ 
எளிதில் கிடைப்பவன்தான்!

ஆனால்,
உன்னைப் பற்றியே உணராத சிலர்
உணர்ந்துவிட்டதாய்
உண்மையென உரைத்தே
வீணாய் அறிவிழந்து போய்விட்டார்கள்!
சிந்தனைத் திறனைக் குறைத்துவிட்டாய்!
உன்னைத் திரும்பச் சொல்லவும்
திணருவார்களே!
அப்போது தெரியும் என்னருமை!
ஆனால், ஒன்று கூறுகிறேன்
என்வேரால் விரிந்த ஆலில்லை நீ!
அந்நியத்தின் தாக்கம் நீ!
உன்னையும் விட்டுவைக்கவில்லை அவர்கள்
அவ்வளவே!
வாழ்ந்துவிட்டுப் போ!

Jan 30, 2011

பகற்கனவுகள்

நிலைமண்டில ஆசிரியப்பா

வயற்காட் டிடையே வளம்நிறை வீட்டில்
கயற்கண் ணுடையாள் கணவன் புதல்வன்
புதல்வி நால்வர் நலத்தொடு வாழும்
இதமிகு வாழ்வை இனியன் விரும்பி
இருப்பான் போலும் இதயத் திருத்தி              5
ஒருநாள் இரவில் உறக்கம் கொண்டவன்
மறுநாள் வைகறை மணியைந் தளவில்
சிறுபற வைகளின் சிதறொலி கேட்டுச்
சிந்தையில் ஓடிய கனவில் சேர்த்துச்
சொந்த மாய்நிலம் கொண்டதன் நடுவே         10
அழகிய வீட்டை யமைத்து நெற்பயிர்
கழனியில் செழித்தல் கண்டுபே ரின்பம்
கொண்டவன் கண்களை மெதுவாய்த் திறந்தான்
கண்டவை எல்லாம் கனவுகள் தாமென
மனத்தைத் தேற்றிச் செய்வன செய்ய           15
தனதடி நடத்தினான் வழக்கம் போலவே

ஏழைக் குடும்பம் இனியனின் குடும்பம்
ஏழாம் வகுப்பில் படிக்கின் றானவன்
தங்கை ஐந்தாம் வகுப்பில் தலைவி
தங்கம் போன்றே மதிக்கத் தகுந்த                 20
இளசுகள் இரண்டும் படிப்பில் கெட்டி
முளைக்கும் போதே ஞானம் புகுந்ததோ?
பெருமை கொள்ள முடியும் அவர்களால்
இருப்பினும் மின்னிணைப் பில்லாக் குடும்பம்
பின்னர் எப்படிப் படிக்க முடியும்?                 25
அன்றைய பாடங்கள் முடிக்க முடியும்?
எல்லாப் பிள்ளைகள் போல வர்கள்
செல்லார் மாலை விளையாட் டுக்கு
காலையும் மாலையும் படிப்பே கதியாய்
மாலை முடிந்தும் இரவில் விளக்கொளித்            30
தீபம் அவர்கட் குறுதுணை யானது
பாபம் தொலைத்தான் இறைவன் இதனால்
ஆசிரி யர்தம் அறிவுரை யாவும்
மாசினை நீக்கிப் பண்ப டுத்த
வருத்த வளைவேய் போல வர்கள்                35
திருத்தம் கொண்டொரு நிலைப்படு மனமாய்ச்
செய்செயல் தன்னில் சிறந்து விளங்கினர்
செய்பண் பட்டால் விளைச்சல் மிகுமே!
தந்தையும் தாயும் அந்தந்த நாளின்
வருவாய் கொண்டு வயிற்றுண வுக்குப்            40
பாடு பட்டுப் படிக்கச் செய்தனர்
ஏடெழுத் தறிகிலர் ஏழைய ரானோர்

இப்படி யான இக்குடும் பத்தின்
இனியன் எண்ணும் எண்ணங் கள்தான்
பகற்கன வென்றேன் பலிக்கா தென்றிலை         45
பகலிற் காணும் பல்வகைக் காட்சிகள்
பெறூஉம் பல்வகை அனுப வங்கள்
எண்ண ஓட்டத் தோடையில் செல்கையில்
வண்ணக் கனவுக ளாக மின்னிட
அவற்றில் ஒன்றுள் மனத்தில் அழுந்திட          50
அவன்முன் கண்ட விடியற் கனவாம்.

எழுந்தவன் இன்னிசை கேட்டனன் இனிமை
எழும்படி யாகப் பறவைகள் பாடின
அழுந்தின அவன்றன் அடிகள் குரம்பில்
விழுந்தே கிடந்த சிறுபனித் துளிகள்                        55
சிதறி ஓடின சில்லென் றுரைத்தன
இதமாய்த் தோன்றின இனியன் நினைவில்
இச்சிறு பனித்துளி அப்பனை காட்டும்
அச்செறி வுடையஃ தத்திருக் குறளெனும்
எண்ணங்கள் ஓடின இலக்கியம் பாடின                   60
வண்ணம் என்னும் வகைப்பாட் டுணர்ந்தான்
முத்துப் பனித்துளி எனும்போ தினிலே
'முத்தைத் தருபத் தித்திரு நகை'யெனும்
அழகிய தமிழைப் பாடிச் சென்றான்
மழையால் நெஞ்சம் நிறைந்தே நடந்தான்              65

Dec 26, 2010

ஏன் தோற்றுப்போனேன் நான்?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏன்தோற்றுப் போனேன்நான் என்மீ துனக்கு
     
யெள்ளளவும் விருப்பமிலை என்ப தாலோ?
'நான்மாற மாட்டேன்'என் றேநீ சொன்னாய்
      நானினைத்தேன் 'மனிதமனம் தானே மாறும்'
ஆனாலென் எண்ணமெல்லாம் தவிடு பொடியாய்
       ஆகியதுன் னொருவார்த்தை கேட்ட கணமே
ஏனென்னை நம்புகிறாய்? ஏமா றாதே!
       எனையுன்றன் நினைவினின்று நீக்கென் றாயே!

எனக்கினியும் உரிமையிலை உன்னை நினைக்க
      என்தோழி தன்கடமை நன்றாய்ச் செய்தாள்
உனக்கென்றன் மீதில்லா விருப்பம் தன்னை
      உணர்ந்துகொண்டு வுண்மையொன்று ரைத்தாள் பாரேன்
'உனக்குமந்த தைரியந்தான் வரவே யில்லை
      உடன்படித்த நண்பனைஏன் புண்ப டுத்த?'
எனநினைத்தாய் அவள்செய்தாள் நட்பின் கடமை
      எனைமிகுதிக் கண்மேற்சென் றிடித்து ரைத்தாள்

அவள்கேட்ட வம்மூன்று கேள்வி கள்தான்
      அம்பைப்போல் என்னுளத்தைத் துளைத்தெ டுக்க
தவம்போன்று வுனைநினைந்த என்றன் வாழ்க்கை
      தவறென்றும் வழிமாறும் என்று ரைக்க
அவமெனக்கு மனப்பேச்சைக் கேட்ட ழிந்தேன்
      அறிவுக்கண் திறந்தாளே! மூன்றே வார்த்தை
'கவலையே மாற்றந்து ரோகம்' என்றாள்
     முதலுனக்கு யிடையெனக்குக் கடைபி றர்க்கு

என்செய்ய? தேவதையே! முருகா! என்றேன்
      எல்லாமே இன்றமிழ்ச்சொல் விளையாட் டாக
என்பிதற்றல் இலக்கணம்பொ ருந்து கவிதை
      எனப்பதிந்தே யெனைப்பார்த்து யெள்ளி நகைக்கும்
என்னாகும்? என்செய்வாய்? என்றக் கறைதான்
      இனியார்மேல் யான்கொள்வேன் இன்னும் ஒன்று
என்னெதிர்கா லக்குறிக்கோ ளாக நிற்கும்
       ஆற்றுமொழிக் கென்னுரைப்பேன் அஃதுன் பெயரே!

எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! இனியும்
       எள்ளளவும் உனைத்துயரப் படுத்த மாட்டேன்
தங்காது யென்மனதில் உன்னைப் பற்றித்
       தான்கொண்ட எண்ணங்கள் முயற்சி செய்வேன்
தங்களுடை வாய்மொழியாம் 'நன்றி'  தன்னைத்
       தான்செலுத்தப் பெருங்கடமை அருணா வுக்கு
எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
       எங்கிருந்தா லும்வாழ்க நன்றாய்! பெண்ணே!
                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 6

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!) - குட்டிச் சாத்தான்”, என்று சொன்னதும் சிரித்து விட்டான் துரை.

“என்னடா இது?”

“அன்று அந்தப் புலம்பு புலம்பினாய், தேர்ச்சி பெறுவேனான்னு. உன்னைச் சமாதானப் படுத்தவே எங்களுக்குப் போதும் போதும்’னு ஆகிடுச்சு. அவ்வளவு தொல்லை பண்ணிட்டு,  இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கியே,  அதனாலதான்” என்றான் ஸ்னோவின்.

‘யார் யாரோ என்னென்னமோ எல்லாம் சாதித்துவிட்டு எத்தனையோ பெரிய பட்டமெல்லாம் பெறுகிறார்கள். எனக்கும்கூட இப்படியெல்லாம் பட்டப்பெயர் வைக்க ஆட்கள் இருக்கிறார்களே’ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் துரை.

துரை இப்போதெல்லாம் யாரிடமும் கோபித்துக் கொள்வதில்லை. இரவீந்தர் முன்பைவிட மிகவும் பிடித்துப் போன நண்பனாகிவிட்டான். அவனிடம் முன்பு தான் கோபித்துக் கொண்டதை எண்ணி அவ்வப்போது வருத்தப்படுவான். இனிமேல் யாரிடமும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று தனக்குள் ஓர் உறுதிகொண்டான். இப்போது யார் எவ்வளவு கேலி செய்தாலும், துன்பப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது.

"டேய்! வாங்கடா சாப்பிடப் போலாம். Time ஆயிடுச்சு"
எல்லாரும் சென்றார்கள்.

சே! செம talent ra."
"யார டா சொல்ற?"

சச்சின தான்டா."
"ஆமாம் டா, அவர் 16 வயசுலயே கிரிக்கெட்டுக்கு வந்த மார்க்கண்டேயன்"
"செம கலக்கு கலக்குறார் டா, இந்த God of Cricket"
"தென் ஆப்பிரிக்கா கூட ஆடுறது னா, திருநெல்வேலி அல்வா சாப்படறது மாதிரி னு போட்டிருந்தாங்க பாத்தியா பேப்பர்ல"
". . ."
ஸ்னோவினும் கார்த்தியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

சிவ பூஜையில் கரடி புகுந்தது.
"ஸ்னோவின்,  எனக்கு ஒரு புதுப்பெயர் வைத்திருக்கிறேன். ‘வெண்பாரதன்’. எப்படி இருக்கிறது?”

“நல்லாதான் இருக்கு, நீயும் உன் தமிழும், திருந்தவே மாட்டியா?” என்றான் ஸ்னோவின்.

“சரி, இப்ப இந்தப் பெயர் வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?”, கேட்டான் கார்த்தி.

“இனிக் கவிதைகளை இந்தப் பெயரிலேயே எழுதப் போகிறேன். முதலில் இந்தப்பெயரில் ஒரு மின்னஞ்சல் உருவாக்கப் போகிறேன்” என்றான் துரை.

ஸ்னோவினுக்கு உள்ளுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘பரவாயில்லை. இவன் பிழைத்துக்கொள்வான். கணினி ஆதிக்கக் காலத்தில், கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவனும் ஒரு காரணம் ஆவான்’

வெண்பாரதன் இப்போது ஒரு குறள்வெண்பா எழுதினான்.
             
               ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே;தான் பெற்ற
                 தமிழும்நண் பர்களும் தான்’
                                               (கதை முடிவுறும். தமிழ்ச்சிந்தனை தொடரும்)

Nov 27, 2010

அமிழ்தினும் ஆற்ற இனிதே! - பகுதி 5

செமஸ்டர் தேர்வுகள் ஒவ்வொன்றாய் முடிந்து கொண்டிருந்தன. கடைசித் தேர்வு எழுதிய அன்று மட்டும் மாணவர்கள் கலங்கிவிட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக எதிர்பாராத கேள்விகளே மிகுதியாகக் கேட்கப் பட்டிருந்தன. பாவம், நம் துரையின் நிலைமையும். தேர்வு முடிந்ததும் வழக்கம்போல் ‘உம்’மென்று இருந்தான்.

“என்ன துரை? ஏன் ஒருமாதிரியாய் இருக்கிறாய்?”, கேட்டான் கார்த்தி.

“இல்ல அப்பு,  தேர்வு சரியாவே எழுதலை,  அதான்”.

“அது ஒன்றும் பிரச்சினை இல்லை, கேள்வித்தாள் கடினமாக இருப்பதால், பெரும்பாலும் ‘பாஸ்’ பண்ணி விட்டுடுவாங்க, கவலைப்படாத”, என்றான் கார்த்தி.

தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில், அவரவர்கள் சொந்த ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். என்ன இருந்தாலும், நம் துரையின் முகம் வாடிப்போய்த்தான் இருந்தது.  ஸ்னோவின் சொல்லாத சமாதானமே இல்லை. நம் துரையும் கடவுளிடம் வேண்டிக் கொண்டான். ‘முருகா, நான் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், உனக்குப் பாமாலைகள் சூட்டுகிறேன்’.

விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களைப் பதற்றம் சூழ்ந்தது. முடிவுகளைத் தெரிந்துகொள்ளும்வரை, அவர்களின் உயிர், அவர்களிடம் இல்லை.

‘முருகா, முருகா ...’ என்று உச்சரித்துக் கொண்டே இருந்தான் துரை.

“மச்சி, என்னோடது ரெண்டு ஊத்திக்கிச்சு, உன்னோடது?”

“பாவி ரெண்டுதானா, நான் நாலு வச்சிருக்கேன் டா”

அங்கங்கே கேட்ட குரல்கள் இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தின.

“ஏ!  நான் பாஸ் ஆயிட்டேன்”, ஸ்னோவின் கத்திக்கொண்டே கூட்டத்தினின்றும் ஓடிவந்தான்.

“அப்பா! நானும் பாஸ்”, சொன்னான் கார்த்தி.

“துரை, என்ன ஆச்சுடா? ஏன்டா கலங்கிப் போய் இருக்க?”

“நான் இன்னும் பார்க்கவே இல்லடா...”

“அறிவுக்கொழுந்து! இரு வர்றேன்.”

சற்று நேரம் கழித்து, ஸ்னோவின் திரும்பி வந்தான். “டேய்,  நீ பாஸ் ஆயிட்டே!”

“குள்ளப்பய...! என்னா சீனப் போடுது”, செல்லமாய்க் கடிந்தான் ஸ்னோவின்.

மகிழ்ச்சி கொள்ளவில்லை துரைக்கு. ‘நானும் பாஸ் ஆயிட்டேனா?’.

அன்றிரவே ஆரம்பித்தான் பாமாலை சூட்ட,

'முதலைத் தருவான் முருகன் ...'

மறுநாள் எல்லா மாணவர்களும் துரைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

“துரை! வாழ்த்துகள்! நீதான் வகுப்பிலேயே இரண்டாவது மதிப்பெண் வாங்கியிருக்கிறாய்!”, ஆசிரியர் சொன்னார்.

ஆம், அன்று ஸ்னோவின் சொன்னது இன்று உண்மையாகிப் போய்விட்டது. இவனை எண்ணி, ஸ்னோவினும் கார்த்தியுமே இவனைவிட மிகவும் மகிழ்ந்தார்கள்.

“துரை!  நீதானே எல்லாருக்கும் ஏதாவது ஒரு பெயர் வச்சிட்டிருக்கே! இப்போ நான் உனக்கு ஒரு பெயர் வச்சிருக்கிறேன்”, என்றான் ஸ்னோவின்.

“என்ன பெயர்?”, ஆவலானான் துரை.

“மைக்ரோ டெவில்! (Micro Devil...!)”.