Jul 31, 2011

அழகுச் சிலை

அழகுச் சிலையொன்று - என்
அருகில் வந்ததே!
பழகுத் தமிழ்கொண்டு - விழிப்
பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
மனதில் ஒரு களம்கண்டாள்
கண்டதால் களர்நிலம்
விளைநிலம் ஆனதே!
ஒவ்வொரு விதைமுத்தாய்
விழுந்ததே முளைத்ததே
எண்ணத்தில் ஊறிய
என்சிறு கவிதையாய்!

பேசிய ஒரு வார்த்தையில்
புரிந்ததே அவள் நெஞ்சம்!
முல்லைப்பூ நகையினால்
முழுநிலா தோற்றதே!
புன்னகை சிந்திடும்
உதடுகள் தாமரை!
மழலையின் மொழியைப்போல்
கொஞ்சிடும் நாவினள்!

தேவதை அவள் தேவதை
அவள் கண்களின் நேரலை
கண்டதும் வெண்ணிலா
ஒளிக்கதிர் இழந்ததே!
மீன்களும் தம்மினம்
பூமியில் உண்டென
நோக்கின நோக்குங்கால்
அதிசயம் கண்டதே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காணுமோ காட்டாறு?

மேகம் தூதுவனோ?
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?

ஏவியவன் யார்?
கார்மேகம் அழுது
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?

ஏவியவன் இறைவனாய்
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?

காயம் பலவுண்டு
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?

குறிஞ்சியோன் முல்லைக்கு
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதற்காதலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
முதற்கா ரணமாய் விளங்கு மாற்றுக்
குணர்த்திடு வாயோ? உணர்வுரைப் பாயோ?
ஏக்கத் தண்ணீர்த் தேக்கத் தொட்டிலில்
அடைபட் டதனை மடைதிறந் தாற்போல்
வழிசெய் நதியாய்க் கடல்சேர்த் திடுவாய்!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தங்கத்திரு மங்கை (வஞ்சிப்பா)

குறளடி வஞ்சிப்பா

தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
மஞ்சன்தனைக் கொஞ்சுங்குழந்
தையோவென மெய்யாய்முறு
வல்தந்தவ னுள்ளம்புகுந்
தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளவள்
யானோ
சிறுபரு வத்தனன் சீருற
வுறுதுணை யெனக்கிங் கெனநிற் பாளோ?
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காற்றினிலே... பூங்காற்றினிலே...

காற்றினிலே - பூங்
காற்றினிலே - வரும் 
பாட்டினிலே - செவி பெறுந்தேன் 
ஊற்றினிலே - மனம் 
மயங்குதற்போல் - தான் 
இயங்குதற்போல்

நினைவினிலே - நீ 
நேர்கையிலே - புவி 
அனைத்தினையும் - நான் 
மறக்கின்றேன் - உயிர் 
துறக்கின்றேன் - மறு 
பிறக்கின்றேன்

நேரினிலே - நீ 
நேர்கையிலே - ஒரு 
வார்த்தையுமே - என் 
வாயினின்று - வெளி 
வாராமல் - மனம் 
சோராமல் - ஆவல் 
தீராமல்

உறைகின்றேன் - இதை 
அறைகின்றேன் - நீ 
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ

மொழி பகர்வாயோ?
நுதல் பகிர்வாயோ?
மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 25, 2011

இனியவன் பேசுகிறான்

என் நண்பா!
இன்னலிலும் இன்பத்திலும்
என்னை எப்படி எழுதிக் குவிக்கிறாய்!
என்பதனால்
உனக்குள் அடங்கியவன் நான்
என்று மட்டும் எண்ணிவிடாதே!
அடங்காதவன் நான்
ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டு
அமுதமாய் இனிக்கிறேன் உனக்கு

எல்லையற்றவன் நான்
அணுவை மட்டுமே அறிந்து
அன்பு கொண்டவன் நீ!
ஆற்றல் கொண்டவன் நீ!
ஆறுதல் கொள்பவனும் நீ!

என் பரிமாணம்
உனக்குப் புரியாது
உன் எண்ணங்களின்
எல்லை வரையே
என்னை வரைவாய்!

எழுத்தே என்வேர்!
எல்லைப்படுத்தி ஆண்டவர்க்கும்
எல்லை இல்லை என்றும்
எல்லாம் நானென்றும்
உணர்ந்தவர்க்கும்
அவரவர் விருப்பம்போல்
அளவில்லா இன்பத்தை
அள்ளிக்கொடுக்க முடியும் என்னால்

இச்சிறு வாழ்க்கையில்
இத்தனைக் கோளாறுகளையும்
இத்தனை இன்னல்களையும்
எனக்கு இழைப்பதாய் எண்ணி
உனக்குள் கோட்டை கட்டி
என்னை
உள்ளடக்கம் செய்யாதே!

எனக்கொன்றும் இழிவில்லை
எப்படி வேண்டுமானாலும்
எந்தப் பரிமாணத்திலும் வாழும்
நிலையானவன் நான்!
நிலையற்றவன் நீ!

அஹிம்சையும் அடக்குமுறையும்
அப்பாற்பட்டவை எனக்கு
பிரளயமும் யுகமும்கூட
பொருட்டல்ல எனக்கு
எழுத்தும் மொழியும்கூட
எல்லையல்ல எனக்கு

உனக்குள் திடமாய்
உறைந்துள்ளேன் என்று
நீ எண்ணினால்
உனக்கே சொந்தமானவன் ஆகமாட்டேன்
உனக்கும் சொந்தமானவன் நான்

எல்லா உயிர்களுள்ளும்
இருக்கும் எண்ணம்
நம்மை மீறிய சக்தி - கடவுள்
நானும் கடவுள்தான்!
உள்ளங்களில் வாழ்ந்து
உலகைக் கடந்து வருபவன் நான்!
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 15, 2011

மாற்றமும் கூற்றமும்

ஏமாற்றம் என்மாற்றம்
எல்லாம் முடிய கூற்றம்
ஆற்றல் என்ப தாற்றம் எனவே
தோற்றிய நெஞ்சம் பின்னர் எங்ஙனம்
ஆற்றம் மாற்றம் ஆற்றும்?
தேற்றம் உளத்தின் தோற்றம்
காற்றில் கலந்த கவலை ஏற்றம்
ஆற்றம் இல்லா தாற்றல் இல்லை
பின்னர் எங்ஙனம் ஏற்றம்?
வாழ்க்கைச் சேற்றில்
வாழ்வே சோற்றில்
மாற்றம் ஆற்றில்
கூற்றம் ஈற்றில்
        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 3, 2011

தேங்காயும் நானும்

நிலைமண்டில ஆசிரியப்பா

தேங்காய் ஒன்றை என்கைக் கொடுத்துப்
'பாங்காய் இரண்டு பாக மாக்கு'
என்றார் அன்னை இரண்டாய் உடைத்தே
சின்னத் துண்டுகள் இரண்டை உண்டேன்
தொண்டை 'கரகர' என்றது, தேங்காய்                    5
உண்டால் அங்ஙனம் இருக்கும் எனநான்
எண்ணினேன் சிறிது நேரம் சென்றபின்
கொண்டேன் தும்மல் அளவும் இன்றி
சளியும் பிடித்த(து) உடல்கன கனத்தது
துளிர்த்தன எண்ணங்கள் என்ன டாஇது?                 10
தெங்கம் பழத்தால் சளிபிடித் திடுமோ?
தெங்கம் என்றதும் தோன்றின நினைவுகள்
எப்போதோ படித்த இலக்கியப் பாடல்கள்
தப்பேதும் இன்றிச் சிந்தைக் கெட்டின
'அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம்'மற்றும்           15
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்'என்றும் ஓடின
இன்னொரு நிகழ்வு முன்னொரு நாளில்
எந்தை தந்தார் ஒருதேங் காயை
உடைத்துவா என்றார் உடைத்ததும் அதனை             20
உற்று நோக்கினேன் உளத்துள் உதித்தது
'கொண்டைப் பூவுடையாய்! குளிர்வெண் மையகத்தாய்!
தண்ணீர் மைகுன்றாத் தனியறத் தோடுயர்ந்தாய்!
கண்ணும் மூன்றுடையாய்! காணும் விழாவெல்லாம்
பண்டை முதலிருந்து பார்க்கும் தேங்காயே!'             25
அதனைத் தந்தையிடம் காட்ட வியந்தார்
'அழகாய்க் கவிதை புனைந்தனை அந்த
அழகன் சஷ்டியன் பெருமையை என்சொல'
'இப்படிப் பட்ட தேங்காய் எனக்கு
யெப்படி இந்தத் துன்பம் தந்தது?'                      30
என்றே எண்ணி வியந்திடும் போது
ஒன்றுதோன் றியது 'நம்தந் தைதான்
நாட்டு வைத்திய ராச்சே! அவரிடம்
கேட்டால் புரியும்' கேட்டேன் சொன்னார்
'தேங்கா யால்சளி பிடிக்கா தானால்                   35
தூங்கும் சளியைக் கிளர்ந்தெழச் செய்யும்'
மறுநாள் ஆங்கில மருத்துவர் ஒருவரை
அணுகி அவரிடம் கேட்டேன் சொன்னார்
தேங்காய் உண்டதால் சளிபிடித் ததுவோ?
இருக்கா தப்பா இளநீர் கூட                        40
சிலசம யங்களில் சளிபிடிக் கச்செயும்
வெயிலில் சென்றுபின் உடனே குடித்தலால்
தண்ணீர் கூடச் சளிபிடிக் கச்செயும்
என்றார் எதனை யான்நம் புவது?
தெரிந்தால் உரையும் தெரிந்துகொள் கின்றேன்         45
தேங்காய் தின்றால் சளிபிடித் திடுமோ?
என்றுநான் எண்ணிக் கொண்டிருக் கையில்
குதர்க்க மாய்ச்சில எண்ணங்கள் தோன்றின
ஓ!தேங் காயை உடைத்தத னாலோ
தண்டனை கொடுத்த திந்தத் தேங்காய்?              50
இல்லை யே!அதன் பிறவிப் பயனை
அடைய நானும் உதவியுள் ளேனே!
பின்னே ஏனிது? புரிய வில்லை
என்னன்னை சொன்னார் 'சென்ற வாரம்
ஊருக்குச் சென்றோ மன்றோ? அந்த                55
ஊர்த்தண் ணீருனக் காக வில்லை'
சிரிப்பு வந்த(து) 'அப்படி யோ?'என
'ஆமஃ தூறித் தானதன் வேலையைக்
காட்டும்' என்றார் நம்பி விட்டேன்
இதனொடு நின்று விடவில்லை இன்னும்              60
சிந்தித் தேன்பின் சொன்னேன் 'அம்மா
அந்தத் தேங்காய் எந்தமரத் துக்குச்
சொந்தமோ அந்த மரமோ எந்த
மண்ணைச் சேர்ந்ததோ அந்த மண்ணின்
தண்ணீர் தானெனக் காக வில்லை                  65
அஃதூ றித்தான் வேலையைக் காட்டுது'
இன்னும்சிந் தித்தேன் ஒன்றுதோன் றியது
தேங்கா யோ?இது தெங்கம் பழமோ?
காயொரு பருவம் பழமொரு பருவம்
காயென்றும் பழமென்றும் ஒரேபரு வத்தில்           70
பெயர்பெற்ற பொருளிது மட்டும் தானோ?
என்னுடல் மட்டும் விழுந்து கிடக்க
என்சிந்தை அடங்காமல் சிந்தனை செய்தது...         73
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 13, 2011

செய்யுளா? உரைநடையா?

காலமெலாம் கட்டிவந்த கவிதைகளில் தட்டிவராத்
தளைகளிடைத் தமிழ்க்கன்னி தனித்தன்மை பெற்றோங்கி
பொங்கிவரும் பூரிப்பால் பெருமைமிக வளர்ந்திருந்தாள்!
சிந்துவினைச் சொந்தமெனக் கொண்டவனப் பாரதியும்
தானெழுதி வைத்தவுரை நடைக்கவிக்குப் பொருத்தமதாய்         5
'வசனகவி' எனப்பெயரை வைத்தெழுதிப் போந்தார்.
'புதுக்கவிதை' என்றெழுத வில்லையவர் பண்பில்லை
இன்றெழுது வோரதனை ஏற்காமல் பெயர்வைத்தார்
திரைப்படத்தில் வசனங்கள் கூடவளம் பெற்றிருக்க
அவ்வசனம் போலவே அடிக்கொரு வார்த்தையென             10
அளந்தெழுதி வைத்துவிட்டு அதுகவிதை என்றால்
மதிப்பில்லை கவிதைக்கு, தமிழ்மகனுக் கெங்கிருக்கும்?
காளமேகம் அருணகிரி கண்டுவந்த தமிழ்மண்ணை
ஆளவந்து வழக்கமொழித்(து) அனைத்தையுமே மாற்றிவிட்டுத்
தமிழ்வளர வில்லையென நியாயங்கள் பேசிடுவார்               15
ஓசைநயம் ஒழுகுதமிழ் வடிவமைக்கத் தெரியாமல்
பேசுதமிழ்ப் போலவே பதம்சொல்லி வைத்துவிட்டு
உணர்வுகளே கவிதையென வசனங்கள் பேசிடுவார்!
உணர்வுகளை வெளிப்படுத்தக் கவிதைமட்டும் கருவியில்லை
கவிதையிலே உணர்விருக்கும் கவினழகைக் காட்டிவிடும்          20
கண்டதெலாம் கவிதையெனக் கொண்டுவந்து விட்டாலோ
சிந்திக்க ஆளின்றிச் சீரழிந்து போயிடுமே!
திரிசொல்லைக் காணும்நம் பின்னோர்தாம் புரியாமல்
'என்னவிது?' என்றேதான் கேட்டிடுவார் என்சொல்ல?

Mar 3, 2011

விடையே தெரியாத விடியல்!

வாழ்க்கை...
விடையே தெரியாத விடியல்!
எண்ணங்கள் மட்டும்
எட்டாத உயரங்களையும்
எவ்வளவோ ஆழங்களையும்
குப்பைகளாய்க் குவித்துவைத்திருக்கும்.


இப்படியே செல்லும்
இந்த வாழ்க்கையில்
எத்துணைக்குத்தான் ஆசைப்பட முடியும்?
என்றெண்ணி,
இனி எந்த ஆசையும் வேண்டாம்
என்னும் போதினிலே
இறந்துவிடுகிறான் மனிதன்.


இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு கணமும்
ஏதோ ஒருவகையில்
ஏதோ ஓர் ஆசைக்காய்
ஏங்குகிறது நெஞ்சம்.


ஆசை...
இன்பம் தேடல்
அடிப்படைத் தேவைகள்
தன்மானப் பிரச்சினைகள்
பண்பட்ட வாழ்க்கை
அஞ்சுதற்கு அஞ்சுதல்
என எவ்வகையிலும் இருக்கலாம்.


ஆக, ஆசையின் ஆளுகைக்குள்
அகப்பட்டவன் மனிதன்.
ஆசைப்பட்டவை கிடைக்கவும் செய்கின்றன.
ஆதலின் விடியல் எனலாமே.
விடை ஏது?
ஆசை ஏனெனத் தெரியாதபோது.