May 1, 2012

தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்

என் அலைபேசி மதுர கானத்தை (இப்படிச் சொன்னால்தான் இனிக்குமோ?) எழுப்பி, என் தூக்கத்தைக் கெடுத்தது. தட்டுத் தடுமாறி அலைபேசியைக் கண்டுபிடித்து, அழைப்பை ஏற்றேன். அழைப்பில் அலுவலகத் தோழி.

"சுப்பிரமணி, தூங்கிட்டு இருக்கிங்களா...?"

இந்த வாரம் எனக்கு இரவுப்பணி முறை. முடித்துவிட்டுப் பகலில் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்தேன். அதனால் இது வழக்கமான கேள்வியாகிப் போய்விட்டது.

"இல்ல பா...! முழிச்சுட்டேன் சொல்லுங்க..." வழக்கமான பதில்தான்.

"அந்த முரணாய் உருவான (junk) தகவலை வழங்கியிலிருந்து (server) அழிக்கச் (delete) சொல்லி விட்டார்கள். ஆனால் அதைப் பட்டியலிட (list) முடியவில்லை. எப்படி எடுப்பது? கட்டளையை (command) எப்படிப் பயன்படுத்துவது? வழக்கமான கட்டளையைக் கொடுத்தால், தகவல் (data) வரமாட்டேங்குது. 'பொருள் அல்லது தகவல்' (object) காணவில்லை என்று பிழை சுட்டப்படுகிறது."

"அந்த முரண் தகவல் அப்படி அப்பாவித்தனமாய் நிரலியால் (program) உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால், அதன் முழுப்பெயரையும் கட்டளைக்குள் பயன்படுத்தித் தகவலை எடுங்கப்பா..."

என் தோழிக்கும் எப்படிக் கட்டளையைப் பயன்படுத்துவது என்று தெரியும். ஆனால் அந்த முரண் தகவலைக் காண்பவர் சற்றுக் குழப்பமடைவர். இப்படி ஒரு முரண் தகவல் உருவாகி இருக்கிறது என்று அடையாளம் கண்டு, அதை எங்களது மேலதிகாரிகளுக்கு அறிவித்து இருந்தேன். அந்த முரண் தகவல் ஏன் உருவானது என்ற ஆய்வுக்குப் பின், அதனை அழிப்பதற்கான ஒப்புதல் (approval) இன்றுதான் கிடைத்தது. அந்த முரண் தகவலை எப்படிப் பட்டியலிடுவது என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் என்னை அழைத்தாள் தோழி.

மணி நண்பகல் 12:36. அலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே படுத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது. நாம் பள்ளியில் படிக்கும்போது, ஆசிரியர்களில் சிலர், 'தூக்கத்தில் எழுப்பிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லணும்'னு சொல்லி சொல்லி அடிப்பாங்களே... அது இப்போதுதான் பயன்பட்டு இருக்கிறது...

சரி, எழுந்து பண்டிக்குச் சிறிது உண்டி கொடுத்து, அப்படியே இந்தத் தகவலையே வலையத்தில் ஏற்றிவிட்டு உறங்குவோம்.

கூற்று

இசைநன்று - ஔவை கூற்று

இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை

இயைபுத்தொடையத் தேடும் முயற்சியில் இயைபு மறந்துபோய், போதும் இது இக்காலத்திற்கு என்றாகிவிடும் நிலை.


மறைதமிழ் - வினைத்தொகை

முன்னமே வடமொழிக்கலப்பால் எது தமிழ், எது வடமொழி என்று பிரித்தறிய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். வடமொழி கலந்த தமிழில் பேசுவதும், பாடுவதும் பெருமையாக எண்ணப்பட்ட காலங்களும் உண்டு. (இவ்வரிகளில் கூட தமிழ்ச்சொற்கள் எத்தனையோ? தமிழுக்கு மட்டுமே தெரியும்).

ப்ரபுட தேவ மாராஜர் உளமு மாட வாழ்தேவர் பெருமாளே!

என்ற அருணகிரியார் காலமாயினும் சரி,

வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?
மாறன் அம்போ? நீள் விழியோ? மதுர கானமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதர் காலமாயினும் சரி.

இப்போது இன்னும் ஒருபடி மேலேறி, தமிங்கிலம் (தங்லிஷ்) என்னும் கொடுமை

'Why this கொலவெறி'

Mar 30, 2012

அருணா நாகராஜன் (பிறந்தநாள் வாழ்த்து)

குறளடி வஞ்சிப்பா

பொற்றாமரை நிற்றாமரைப்
பொழிலோவியம் எழிற்காவியம்
நற்பேருளம் உற்றாயுனைக்
கற்றார்கவிப் பொற்கோவிறை
உற்றேநலம் பெற்றேயுயர்
செஞ்சொற்றிறம் கொஞ்சுந்தனி
அஞ்சேலென நெஞ்சுக்குரை
பல்லாண்டிவண் நல்லாசியோ
டெல்லாமுறு நல்லாயிவள்
எனவாங்குப்
பிறந்த நாணல் வாழ்த்து
சிறந்த குறளடி வஞ்சி வாழ்த்தே!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Mar 27, 2012

கார்த்திகேயன் DBA (பிறந்தநாள் வாழ்த்து)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாற்றிசையும் நாற்றிசையை நாற்றி சைந்து
       நலம்பரப்பும் வளம்நிறைக்கும் இனிய வாழ்க்கை
போற்றுரையே! போற்றுரையைப் போற்று கின்றேன்
      பேறுபதி னாறுமெனும் பெற்று வாழ்க!
காற்றிகையும் கார்த்திகையன் காணும் முன்பே
      கடந்தோடும் பெயர்கேட்டே நீடு வாழ்க!
ஆற்றுமொழி காட்டுவிழி அனைத்து மிங்கே
     அதிநுட்பம் காட்டுவழி யாகும் வாழ்க!
---------------------------------------
கலிவிருத்தம்

தேமலர் பொழியொளிர் கார்த்திகை வாழ்த்தொடு
தாமரை உந்தியில் தாங்கியார் உளம்நிறை
மாமனி தன்னென மாநிலம் போற்றிட
யாமுள நிறைவொடு வாழ்த்துவம் இந்நாள்!
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Feb 27, 2012

மார்கழி

பாரெங்கும் பனிமூட்டமாய்ப்
பச்சைப் பசுமையாய்ப்
பகலவன் வரக் காத்திருக்கத்
துயில்கலையும் விண்மீன்கள்
துள்ளி எழுந்து ஒளிவீசித்
துன்பம் விலக்குதல் போல்

உயர்ந்த எண்ணங்கள்
உள்ளத்தில் ஊற
உயர்குரம்பில் தடம்பதித்துச்
செல்லும்போது அங்குச்
செழித்தோங்கு உயர்பனையைச்
சிறுபுல் நுனிப்பனி காட்ட

உயர்வும் தாழ்வும்
உலகில் எங்குளது?
உளத்திலே உளது...
உளத்தால் ஒன்றுபட்டு
உயர்செய்கை செய்வோம்

தோப்பிலே சிறுகுருவி
திந்தியுந் தொந்தன
தீந்தமிழ் பாட
எங்கேயுளது என
எட்டும் தூரம்வரை
இருவிழிகளால்
துழாவியே விடிந்த பொழுது
தூய்மைச் சூழலை
நினைவுக்குக் கொண்டுவரத்
துளிப்பனியாய்த் தலைநனைக்கத்
துன்பமெலாம் பறந்தோடித்
துவாரக புரி வரதனைத்
தொழுது செல்லும்
'நாரா யணனே
நமக்கே பறைதருவான்'
தேன்றமிழிசை செவியேறித்
தானும் தனதடி நகர்த்தி
ஆவலில் அகிலம் மறந்தேன்
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jan 11, 2012

கடல், கல்வி

ஆம்... சொல்லு பா...!

சுப்பிரமணி, கவிதை வேணுமாம்.. கல்வி, கடல்-ங்கற தலைப்புல.

ஆ... (அதிர்ச்சி..), எப்ப வேணுமாம்.

இப்பவே வேணும், நாளைக்குப் பள்ளிக்கூடத்துல கவிதைப் போட்டியாம்.
எட்டு வரியில வேணுமாம்.

மரபுக்கவிதையா? புதுக்கவிதையா?

சின்ன புள்ள கேட்குது, பத்தாவது தான் படிக்குது. எதோ புரிய மாதிரி எழுதிக் கொடுப்பா...

சரி எழுதிட்டு கால்(call) பண்றேன்.

ஓகே பா... பை.

வீட்டில் வேறு ஒரு பிரச்சினை பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அரைகுறை மனத்தோடு சிந்திக்கத் தொடங்கினேன்.

கல்வி

உள்ளம் உயர்வுபட உலகம் விரலில்விழக்
கொள்ளும் செயல்யாவும் குறைவு ஏதுமின்றித்
திறமை வெளிக்கொணர்ந்து திண்மை உழைப்புயர்ந்து
சிறப்பு பெற்றிடுதல் சீர்மைக் கல்வியினால்
ஒருங்கமை மனம்பெறுதல் உயர்ந்த கல்வியினால்.


கடல்

நிலவளம் நன்மைபெற நீலவளம் தரும்கொடையே
கலைவளம் கவினுறவே கணக்கரிய பொருளீவாய்                 1

விண்ணீர் விரைந்துவந்து மண்ணீர் எனமாறும்
ஓயாத சுழற்சிக்கு உயரா தாரம்நீ                                                        2

இயலும் இவ்வுலகில் எவ்வகை விளைவுக்கும்
ஏது என்னென்றால் அழகிய கடல்நீதான்                                        3

உன்னுள் உள்ளவை எண்ணவும் கணக்கரிது
உன்னுள் உறைந்தவையால் உள்ளமும் கனத்துரிது.                4
               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Jan 3, 2012

உயிரினமும் உயிரில்லினமும்

மனிதன் என்பவன் யாவன்? மனிதம் என்பது யாது?
உயிரினமாகவும் உயிரில்லினமாகவும் கருதுவதற்கான ஏது எது?

வெவ்வேறு பண்புகளைக் கொண்ட ஒவ்வொரு பொருளும் தனிமமாகவோ அல்லது சேர்ந்த ஒரு மூலக்கூறாகவோ இணைந்து, ஏற்பட்ட பொருட்கள், வெவ்வேறு நிலைகளின்கீழ் வெவ்வேறு மாற்றங்கள் பெற்ற, ஒரு பொருளாய் உருவாவதுதான் உயிரினமும் உயிரில்லினமும்.

இயற்கையின் பார்வையில் மனிதனும் ஒரு வேதிப்பொருள்தான். அஃதாவது உயிரில்லினம். மனிதனின் பார்வையில், மற்ற பொருட்களினின்றும் மிகவும் வேறுபட்டு, மிகவும் உயர்ந்துள்ளதோர் உயிரினம்.

யார் கண்டார்? இயந்திர மனிதர்களை உருவாக்கத் தெரிந்த மனிதனுக்கு, இயற்கை மனிதர்களைச் செயற்கையாய் உருவாக்கத் தெரியாமலா போய்விடும்? இங்கு நான் குறிப்பிடுவது, அடிப்படை மூலக்கூறாகிய ஒரு 'செல்'லிலிருந்து, உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையன்று; முற்றிலும் வேதி மூலக்கூறுகளை எவ்வெவ்வளவு தேவையோ அவ்வவ்வளவில் அமைத்து, முற்றிலும் செயற்கையாய் உயிரினம் தோற்றுவிக்கப்படும் முறையை.  இங்ஙனம் உருவாக்கிய பின், ஆயுட்காலங்களையும் நியமிக்கலாம்.

Jan 2, 2012

உள்ளம்

உள்ளம் உள்ளுவது உயர்வானதாய் இருக்கட்டும். உள்ளும் உள்ளத்து எண்ணத்தின் அளவு யாது? உள்ளுவோரின் உணர்வினூடே உறைந்த அளவே உள்ளலின் அளவு.

இறைவன் இருப்பதாய் எண்ணிக் கொள்வான் உள்ளம், ‘இறைவன் செயலால் இயன்ற இவ்வுலகம், இறைவன் விதித்த விதியின்படியே இயங்கும், மயங்கும்’ என இயல்பாய் எண்ணும். 

இறைவன் யார்? என்பான், இயன்ற அளவே எண்ணி, ‘இயற்கையின் வசமாய் இயல்பின்படியால் எதுவும் இயங்கும்’ என எண்ணுவான். 

இறைவன் இல்லை என்பான், இருக்கும் அறிவின்பொருட்டு, ‘இஃது இயன்றது, இதனால் இஃது இயலும்’ என்பான். 

எண்ணம் எதுவாயினும், எண்ணத்தின் அளவு போற்றத்தக்கது. இயல்பில் எண்ணத்தின் அளவை, எண்ணிச் சொல்லலாகாது. ஒப்புமை கொண்டே அளக்க இயலும்.

‘சாகும் நாள் தெரியின், வாழும் நாள் நரகம்’ என வழக்குள்ளது. 2012-ஆம் ஆண்டின் பிறப்பில், இதுவும் உண்மை என எண்ணும் உள்ளம், ஆசைகளே அடைக்கலம் எனப் புகுந்த நெஞ்சம், கலக்கங்களுடனே கழிக்க வேண்டியதுதான். 

'எது நடந்தாலும் எனக்கென்ன கவலை? இருக்கும் வரையில் இயல்பாய் வாழ்வேன், இன்பமோ துன்பமோ எனக்கில்லை' என்ற உள்ளம் நிம்மதியோடு வாழும். 

இன்னும் ஓர் உள்ளம், இன்னும் ஒருபடி மேற்சென்று, 'இயற்கைச் சீரழிவில் சிக்கி, இன்னும் வேகமாய் நிம்மதி இழந்துகொண்டிருக்கும் இப்பூமித்தாய் புதுப்பொலிவு பெறவோ, இன்னொரு பூமி எங்கோ உருவெடுக்கவோ, உருவெடுத்து உயிரினமும், உயிரில்லினமும் மறுசுழற்சி பெறவோ, இயற்கையின் இயல்போ அல்லது இறைவனின் எண்ணமோ' என எண்ணும். 'இவ்வுலகம் மறைந்து போயினும், சிறுபகுதி சிதைந்து போயினும் நன்றுதான்' என எண்ணும். 

இறைபொருள், அதனுள் உறைபொருள், மற்றவர்க்கு மறைபொருள் என்பதன் எண்ணங்களை, அவ்விறைபொருள் தவிர அடுத்த பொருளுக்கு எங்ஙனம் எட்டும்?

Dec 27, 2011

கவலை

நேரிசை ஆசிரியப்பாக்கள்

கவலை தெளிவைக் குலைக்கும் தீநோய்
தெளிவு குலைவ தாவது மறதி
மறதி மேற்கொண் டோடுவ தமைதி
அமைதி யில்லா வாழ்வஃ
தமைந்தோன் வாழான் அறிகு வாயே!                     1

எவ்வெவற் றின்று கவலை நீங்கும்
அவ்வவற் றின்றே ஆக்கம் ஓங்கும்
இலையெனும் போதோ அகலும் கவலை
இயலுதல் கடத்தி நடத்தூ உம்மே
அவ்வழி நடத்தலும் மறதி யாகிச்
செவ்வழி தொலைத்த வீரன்
உய்வழி யறியா துழன்றிடு வானே!                           2

கவலை கண்ணு றங்க விடாது
கண்ணு றங்கினும் கனவில் விடாது
கவலை இருவகை கிட்டாக் கவலை
கிட்டிட வேண்டும் இலட்சியக் கவலை
முன்னது வீணே பின்னது தானே
கவலை நிலையைத் தாண்டிக்
குறிக்கோள் என்க குவலயத் தானே!                         3
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Nov 27, 2011

சாம தான பேத தண்டம்

எதிரியைப் பணிய வைக்க நான்கு படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன. அவை சாம, தான, பேத, தண்டம் என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.

'தங்கமலை இரகசியம்' படத்தில் இவை கையாளப்பட்டன. ஒவ்வொரு முறையைக் கொண்டும் ஒவ்வொரு வகையான எதிரியைக் கையாள்வதாகக் காட்டியிருந்தார்கள்.

சாமம் - இன்சொல் கூறல், சமாதானம் பேசுதல்,
தானம் - தானம் கொடுத்து வழிக்கு கொண்டு வருதல்
பேதம் - ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல்
தண்டம் - தடியால் அடித்துக் கனிய வைத்தல், தண்டனை கொடுத்தல், யுத்தம் செய்தல்

இவை நான்கும் தோற்றுப் போகுமா? என்பது என் ஐயம். 'மன் மதன் அம்பு' படத்தில் நான்கும் தோற்றுப்போய், தகிடு தத்தம் செய்து (நாடகமாடி, ஏமாற்றி) வெல்வதாகக் காட்டியிருந்தார்கள். 'தங்கமலை இரகசியம்' படத்தின்படி எதிரியிடம் பொய்சொல்லி, ஏமாற்றி வெல்வதாகச் சொல்லப்பட்டது பேத முறைப்படி.