Jun 4, 2013

நீயும் நானும் (வஞ்சி விருத்தம்)

யாமாமா நீயா மாமா?
நீயாமா நானீ யாமா?
நானானே நீநீ யாமே!
நானேனோ நீயா யாமே!

                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
யாம் ஆமா? நீ யாம் ஆமா?
நீயாம் ஆமா? நான் நீயாம் ஆமா?
நான் நானே! நீ நீயாமே!
நான் ஏனோ நீயாய் ஆமே?

பொருள்:
நீ நானாக ஆக முடியாது, நான் நீயாக முடியாது;
நான் நானாகத்தான் இருக்க முடியும், நீ நீயாகத்தான் இருக்க முடியும்.
ஆனால் நான் ஏனோ நீயாகத் துடிக்கின்றேன்?

வாழ்க எம் கோ! வாழ்க எங்கோ!

தரவு கொச்சகக் கலிப்பா

விண்டவழ்மீன் என்றொளிரும் விலையில்லா மாணிக்க!
வெண்பறவைக் கூட்டினிலே வெளியீட்டு மேலாண்மைத்
தொண்டுயர்வு பண்புயர்வு தொடுங்குறிக்கோள் மனமுயர்வு
கொண்டகுழு நன்றாண்டுக் கோவிலென நீவாழ்க!

                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Apr 14, 2013

உயர்வாகை - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நேரிசை வெண்பா

அயர்வறியாத் தண்டமிடம் ஆன்றபெரு மக்கள்
துயர்நீங்கித் திண்மை நிலைபெற்(று) - உயர்ந்து
கயமைத் தனத்தார்க் களைந்தினிது சூடும்
உயர்வாகைப் புத்தாண்டே வா!

                                - தமிழகழ்வன் சுப்பிரமணி

தண்டமிடம் - தண்+தமிழ்+தம்

Apr 12, 2013

Subramani with Ponmani in Germany!

கலிவிருத்தம்

எண்ணத்(து) அலைகள் எப்போதுங் கண்ணில்
வண்ண மலர்கள் வாஞ்சையொடு நெஞ்சில்
கன்னல் மொழிகள் காதோரம் ஒலிக்கும்
சென்னியும் பாதமும் சிரமத்தில் தவிக்கும் 


தும்மல் இருமல் தனித்தன்மை பெறூஉம்
செம்மல் விம்மல் ஒருசேரத் துடிக்கும்
அம்மல் லலல்ல லள்ளல்செய் நெல்லும்
எம்முனைப் புந்தான் எண்ணத்திற் காதல்
                       - தமிழகழ்வன் சுப்பிரமணி

Mar 2, 2013

ஆற்றும் கடமை அடுத்த அடி

நேரிசை ஆசிரியப்பா

ஆற்றி யென்னுளம் தேற்றி யானெனை
போற்றி என்மன மாளும் இறைவனை
ஏற்றத் தாழ்வில் இறங்கி வாழ்வில்
ஆற்றலை அள்ளி அகத்துள் தள்ளி
காற்றலை வரிசைக் கவின்மிகு காலில்
ஏற்றொரு வெளியீட் டினிமே லாண்மை
ஆற்றும் கடமை அடுத்தடி
ஊற்றென உலகம் உலவட் டும்மே!
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Feb 22, 2013

என்தமிழ்

கலிவிருத்தம்

என்றமிழ் என்றமிழ்ந் திருந்தேன் என்றமிழ்
இன்றமிழ்ந் திருளுல கென்றமிழ்? வினவுதே!
நன்றிலை இன்றமிழ் இஃதிலை என்னுளம்
கொன்றுமிழ் சினத்தினைக் காத்திட என்செய?
                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
என்தமிழ் என்று அமிழ்ந்து இருந்தேன். என்தமிழ் இன்று இருளுலகு அமிழ்ந்து என்ன தமிழ்? என என்னுள்ளம் வினவுதே! நன்று இல்லை. இன்தமிழ் (இனிய தமிழ்) இஃது இல்லை. என்னுள்ளம் என்னைக் கொன்று உமிழும் கோபத்தை அடக்கிக் காத்துகொள்ள என்ன செய்வேன்?

Jan 19, 2013

மா வண்டு ஏன் மா வண் தேன் தேடி

நேரிசை வெண்பா

காவருங்கா லுள்ளத்தைக் கல்லாய் 
அடைத்துப்பின் 
ஏவல்லி ஏங்காதே இன்னாதே - மாவண்டேன்
மாவண்டேன் றேடி மலையாதும் காணாது
நோவது நீயறி வாய்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி 

ஏ வல்லி! கா வருங்கால் உள்ளத்தைக் கல்லாய் அடைத்துப் பின் ஏங்காதே இன்னாதே
மா வண்டு மா வண் தேன் மலை யாதும் தேடிக் காணாது நோவது ஏன்?  நீ அறிவாய்           - தமிழகழ்வன் சுப்பிரமணி

Jan 9, 2013

முள்ளம்பன்றி

கலி விருத்தம்

முள்ளம் பன்றித் தைக்கும் முதலே!
கொள்ளென் பென்றி ருப்பார் அன்பர்
வள்ளு வன்றன் வண்சொல் போலவ்
வுள்ளன் பன்றி வேறென் வேண்டும்?
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
முள் அம்பு அன்றித் தைக்கும் முதலே!
கொள் என்பு என்று இருப்பார் அன்பர்
வள்ளுவன்தன் வண்(மை) சொல் போல்
அவ்வுள்ளன்பு அன்றி வேறு என்(ன) வேண்டும்?

என்பு - எலும்பு

Jan 4, 2013

முத்து முகிற்பா (பிறந்தநாள் வாழ்த்து)

இன்னிசை வெண்பா

முகிற்பா முகிழ்ப்பால் முகப்பால் சிரிப்பாள்
திகைப்பாள் தவிர்ப்பாள் திடுமென்(று) அதிர்வாள்
எதற்கா யெனநான் வினாதற்(கு) உரைப்பாள்
பதின்க வனத்தா ளவள்.                         1

நேரிசை வெண்பா                   

பேச்சுப் புலியே! பிறர்பேச என்னாவாய்?
கீச்சுக் கிளியாய்க் கிடப்பேனே! - மூச்சுப்
பிடித்தே பகர்வாள் பிடித்தன வெல்லாம்
பிடிக்கா தனபுலம்பு வாள்.                             2

“இன்பொருள் இவ்வுல கத்தில் ‘ம’கரத்தில்
அன்னை அவட்கடுத்(து) அம்முகில்” - சொன்னதற்(கு)
உள்ளம் நிறைத்தனை! என்றே உரைத்தனை!
வெல்லுஞ்சொல் வேறில்லை யே.                       3

புத்தக மேபடித்(து) எந்நாளும் பண்பட்டுப்
புத்தகம் பெற்றுயரு மாபடிப்புப் - புத்தகமே!
வித்தக மேதைய லால்வேறென்? புத்தகச்
சித்தகம் செய்தாயை சொல்.                           4

மடமிது! ‘பால்வழு’ நன்(று)அன்(று)என்(று) எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா! - அடடாவஃ(து)
என்னென்று சொல்லவா ‘டா’வென்றால் ‘டா’வில்லை
‘அன்புள்ள அம்மணி’ யே!                            5

தமிழ்த்தோழி தானயத் தானையவள் தன்னேர்
அமிழ்தாழி யாகின் குரலாள் - உமிதாங்(கு)
அரிசிவமாய்க் காக்கும் அருந்தகையாள் வையம்
பெரியதோ? இல்லை அவட்கு.                         6

முத்து முகில்மழை முத்தம் தரதரை
வித்து பெறுவரம் ஒட்டியதே - கத்து
கடலெனச் சிற்ற ருவிதனைச் செய்யும்
திடமுள செம்மை யினாள்.                            7

நாணல் நதிக்கொரு நன்னண்பன் நாடொறும்
நாணல் எனவாழ்த் திடும்பிறந்த - நாணல்வாழ்த்(து)
என்றோழி! வாழ்கநீ டூழி! யுளமுழுதும்
இன்பக் கடலாழ்ந் திரும்.                             8
                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 14, 2012

இராஜகீழ்ப்பாக்கம் - M51G

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்றலையில் இன்றெழுதி வைத்துள் ளதேயான்
    இன்மழையில் மகிழ்வோடு நனைவேன் என்றே
என்னூரில் எனைத்தாண்டி எதிர்த்தி சையில்
     ஈரிரண்டு பேருந்து சென்றா லுந்தான்
ஒன்றுகூட செல்லாது என்னே ரத்தில்
     யான்செல்லும் திசை நோக்கி உதவி இல்லா
இன்னாவீ போக்குவரத் துள்ள வூர்தான்
     இராஜகீழ்ப்பாக் கந்தானான் என்ன செய்வேன்?
                                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என் தலையில் இன்று எழுதி வைத்துள்ளதே; யான் இனிய மழையில் மகிழ்ச்சியோடு நனைவேன் என்றே; என் ஊரில் எனைத் தாண்டி எதிர்த் திசையில் 4 பேருந்துகள் சென்றபின்பும், ஒன்று கூட நான் செல்லும் திசைநோக்கிச் செல்லவில்லை; உதவி இல்லாத, துன்பம் தரும் போக்குவரத்து உள்ள ஊர்தான் இராஜகீழ்ப்பாக்கம். நான் என்ன செய்வேன்?

ஈ போக்குவரத்து - வினைத்தொகை