Feb 28, 2021
மணிக்குறள் - 35. மீத்தேன் திட்டம்
பாத்தேன் புகட்டுவார் பார் 341
மீத்தேன் எடுக்கின்ற மீட்சியிலாச் சூழ்ச்சியை
நீர்த்துவிடச் செய்தல் நலம் 342
மீத்தேன் எடுப்பதால் மீளா நிலமாகும்
காத்தல் நமது கடன் 343
ஈத்துவக்கும் ஈடில்லா இந்நாட்டை மீத்தேனால்
பேர்த்தெடுத்தால் பேரழிவு பார் 344
கேடாள மண்ணைக் கெடுக்கின்றார் அந்தோஒ
நாடாள வந்த நமன் 345
யாரோ பிழைப்பதற்காய் இந்நாட்டார் வாழ்வினை
வேரோ டழிக்கும் வினை 346
பரிசாம் இயற்கைப் படைப்பைத் தடுத்துத்
தரிசாக்கல் மூடத் தனம் 347
நெல்விளை நாடு நிலைகுலைந்து போவதோ?
கொல்கின்ற கொள்ளை வழி 348
பணமாக்கும் எண்ணம் படுதோல்வி யுற்றுப்
பிணமாக்கும் பேரழிவு நேர்ந்து 349
மூத்தோர் வழியில் முறையாய் விளைத்தலைக்
காத்தலே வாழ்வுக்குக் கண் 350
Feb 21, 2021
மணிக்குறள் - 34. உழைத்து உயர்
பிழைப்பினால் குற்ற உணர்வு 331
உழைப்பினால் ஈட்டும் உயர்செல்வம் என்றும்
தழைத்தோங்கும் மேன்மேலும் சார்ந்து 332
உழைப்பால் உயர்ந்தார்க்(கு) உறுதுயர் இல்லை
மழையெனச் சேரும் வளம் 333
உண்மை உளத்தோ(டு) உழைக்கப் பெருஞ்செல்வம்
வண்மை வழங்கும் வளர்ந்து 334
அறவழி ஓடி அரும்பணி யாற்றும்
நிறைவாளர் நீடுவாழ் வார் 335
உடலுழைப்பும் உள்ளத் துழைப்பும் விளையக்
கடன்படா வாழ்வமையுங் காண் 336
உழைக்கான் உடைமை உடைந்தழியும் காக்க
உழைப்பே உயர்ந்த உரம் 337
பிழைபடு நெஞ்சன் பிறன்பொருள் வௌவன்
தழைக்கா தழிவான் தளர்ந்து 338
பிழைப்பென்று சொல்லிப் பிழைசெய்யும் நெஞ்சன்
சிறப்பழிந்து செல்வான் சிறை 339
கையூட்டுப் பெற்றுக் கணக்கழிப் பாருக்கு
மெய்யூட்டும் காலம் வரும் 340
Feb 20, 2021
சைக்கிள் கார் பைக் ஆட்டோ
அசைசொல்லித் தந்தார் அறிவீர் - நசையுடனே
தண்டமிழின் ஆட்டோதத் தான்சபைக்குள் வந்தேனே
வண்டமிழின் வண்ணம் உணர்ந்து
இசையோடு பேசும் கிளியின் இனிய மொழிக்குக் காரணம் அதற்கு அசையைக் கற்றுத் தந்தவர் யார் (ஆசான்) என்பதனான் அறிக.
வளமை பொருந்திய தமிழின் வண்ணங்களையெல்லாம் உணர்ந்து விருப்பத்துடன் அக் குளிர்ந்த தமிழின் விளையாட்டுகளைப் பற்றி அறிவதற்காக (இந்தப் பைந்தமிழ்ச்சோலை) அவைக்கு வந்தேன் என்றவாறு.
பாங்காக ஓட்டுதற் பாடு.
Feb 14, 2021
மணிக்குறள் - 33. நட்பாய்ந்து நாடு
மறைவிலா வாழ்வுக்(கு) அணி 321
துன்பத்(து) உதவிய தூய மனத்தானின்
அன்பை அறிதல் அறிவு 322
தேர்ந்து தெளியும் திறனுடை நெஞ்சினை
ஆர்ந்தேற்றுக் கொள்ளல் அறிவு 323
நாடுவான் நாட்டத்தை நன்காய்ந்(து) அறிந்துபின்
கூடுவான் கோட லிலான் 324
செயலும் குணமும் தெளிவுற வாய்ந்து
நயக்க நனிவிருந்தாம் நட்பு 325
துணையென நில்லான் துணைநா டுவதோ
இணையிலாத் துன்புக்(கு) இடம் 326
இல்லாத துன்பம் இருப்ப தெனவாக்கும்
பொல்லானைத் தள்ளு புறம் 327
பொறாஅ தவனைப் புறந்தள்ளி நிற்பான்
உறாஅன் துயர உலை 328
கொள்ளற்க கோடுவான் நட்பினை எஞ்ஞான்றும்
உள்ளற்க ஊக்கமிலான் சொல் 329
உடன்பா டிலாத உளமுடை யாரைக்
கடந்து விடுதல் கடன் 330
Feb 13, 2021
சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
புனைபெயர்: தமிழகழ்வன்
படிப்பு: இளநிலை - தகவல் தொழில்நுட்பம், இளநிலை - தமிழிலக்கியம்
பணி: மென்பொறியாளன்.
கவிஞர் அழைப்பு (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)
சுடராய் மின்னும் தமிழ்க்குதிரில்
சுழலும் இவரின் பணியெல்லாம்
இடர்கள் சுமையைக் கொடுத்தாலும்
எழிலாய் இதழ்கள் பளபளக்கும்
மிடுக்காய்க் கவிதை மழைபொழிவர்
விருப்பாய்க் கேட்க வாருங்கள்
அடுக்காய்ப் பாக்கள் ஒளிரட்டும்
அரங்கம் அதிர்ந்து நிற்கட்டும்
பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வருக
தண்டமிழ்க் கவிதை தருக
தமிழ் வாழ்த்து
அன்னைத் தமிழே! அமிழ்தாய் இனிப்பவளே!
உன்றன் அருளால் உயிர்வாழ்வேன் - என்றும்
இயக்குங் கதிரே! இருந்தென்றன் நாவில்
நயக்கும் படிமொழிய நாட்டு
ஆசான் வாழ்த்து
பாமணியால் பண்புடைத்தால் பைந்தமிழச் சோலையினால்
மாமனித! மன்னவனே! மாமணியே வாழியவே!
கவியரங்கத் தலைமை வாழ்த்து
தூயநற் பாக்களால் துன்பம் துடைக்கின்ற
மாயஞ்செய் நிர்மலா மாதவத்தாள் வாழியவே!
அவையடக்கம்
தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்
யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!
கதவைத் திறந்து வை
எல்லை இலாத வெளியெங்கும் உம்முடைய
எல்லை விரித்தலுக் கேற்பனசெய் - முல்லை
அரும்பி அழகாகும் அம்மாலை போலத்
திருந்துக எண்ணத்தைத் தேர்ந்து 1
தேர்ந்தன எண்ணங்க ளாய்மட்டும் நில்லாமல்
ஆர்ந்தின்னும் சொல்லில் அமைத்தலொடு-நேர்ந்து
செயலாய் முறையாய்ச் செதுக்கத் திடமாய்
முயல்வாய் முயற்சி முதல் 2
முதலொடு திட்டம் முழுதும் வரைந்து
பதமாய்ப் பகுத்துப் பழக - விதமாய்க்
குறுக்கம் நெடிதெனக் கொள்க குறிக்கோள்
நறுக்கிச் செயலாற்று நன்கு 3
நன்கு விரிவுசெய் நல்லறிவை நானிலத்தின்
நன்மை விரிவுசெய் நாடியது - பொன்னும்
பொருளும் பெரிதுசெயப் போராடா தேயங்(கு)
இருளே இருக்கும் இரி 4
இரிப்பாய் முதலில் இதுவேண்டா இன்றென்
அரிப்பாய் அரிக்கும் பழக்கம் - சிரிப்பாய்த்
தொடங்கின்றே இல்லை தொடலாகா என்றும்
வடம்பிடிப்பாய் தேர்நகர வாய்ப்பு 5
வாய்ப்புகள் வாய்ப்பதில்லை வாய்திறவாதாருக்கு
வாய்ப்புகள் தானே வருவதல்ல - போய்ப்புகல்
போய்ப்புகல் இவ்விரண்டும் பொய்யாக்கா துன்வாய்ப்பை
ஏய்ப்புகள் ஏமாற்றி ஏறு 6
ஏற்றமே உன்வாழ்வில் எள்ளளவும் ஐயமில்லை
மாற்றம் மனக்கத வைத்திறக்க - ஊற்றாய்
உலக நலன்போற்றும் உன்றன் அறிவுக்(கு)
உலகம் தலைவணங்கும் ஓர்ந்து 7
ஓர்ந்துயரும் நோக்கம் உடைத்தாயி னுன்வாழ்வில்
ஆர்ந்துயரும் ஆக்கம் அதன்வழியில் – தேர்ந்தமைந்(து)
எல்லாம் இயங்குமுன் எண்ணம் வழிநடத்த
எல்லார்க்கும் நீயாவாய் எல். 8
வாழ்த்துப்பா ! (பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்)
நல்ல வழிகள் பற்பலவும்
நயமாய் உரைத்தார் வெண்பாவில்
வெல்லும் உலகில் வாழ்வதற்கு
விரைந்து வாய்ப்பைத் தேடென்றார்
எல்லை இலாத வெளியெங்கும்
எல்லை வகுத்துச் செய்யென்றார்
சொல்லிச் சென்ற செம்மலுக்குத்
தூவி விடுவோம் நல்வாழ்த்து
Feb 7, 2021
மணிக்குறள் - 32. இன்சொல் உரை
இன்சொல்லே இன்பம் தரும் 311
நயம்படப் பேச நலனாகும் நாடான்
இயம்புவ தெல்லாம் இழிவு 312
இன்சொலால் அன்றி இதயம் இணையாது
வன்சொலால் இல்லை வனப்பு 313
வன்சொல் லுரைப்பார்க்கு வாழ்வில்லை தாழ்வில்லை
இன்சொல் லுரைப்பார்க்குத் தான் 314
வெல்வது போல்தோன்றி வேட்ட பொருளீந்து
கொல்வது வன்சொல் கொடை 315
உடனிருந்து கொல்லும் உயர்விலா வன்சொல்
மடநெஞ்சே வேண்டாதே மாற்று 316
நாவினிக்கப் பேசும் நலனுடை நெஞ்சினைப்
பாவினிக்கப் பாராட்டும் பார் 317
என்செய லாயினும் என்றும் நலம்பெற
இன்சொல் லுரைத்தலே ஈர்ப்பு 318
அன்புடையார் வாயமிழ்தம் ஆகுவ(து) இன்சொல்லே
நண்புடையார் நாட்டமும் அஃது 319
சொல்லும் முறைமையால் சோர்வகற்றி எஞ்ஞான்றும்
வெல்லும் வழியளிப்பால் வேள் 320