Sep 17, 2011

செந்தில்நாதன் - அகிலா (திருமண வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

உள்ளம் களிகூர உறவுத் திரள்சூழ
உள்ளும் செயல்யாவும் உளதாய் நிறைவேறச்
செந்தில் நாதற்குச் செந்தூர் எழில்முருகன்
வந்து பொழியருட்சேர் மன்றல் நலம்காண
அகிலம் உடைத்தான பரிசுப் பெரும்பேறு
முகிலின் அருட்போலும் முழுநில வதைப்போலும்
நிறைந்து பல்லாண்டு நிம்மதி மனமாண்டு
சிறந்து மகப்பேறு சீர்மை சொலவேண்டும்                             (1)
--------------------------------------
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எந்நாளும் பொன்னாளாய் இனித்திருக்க
  ஏற்றங்கள் எப்போதும் கைகொடுக்க
சந்தானம் மன்றுதிரு இராமலிங்கம்
  சிறந்தோங்கப் போற்றுதிரு மதிதுர்கா
சுந்தரமின் னொளிதோன்று வசிமுகிலும்
  ஜோதியொளிர் நலம்யாவும் ஒருசேர
வந்தோரும் வாழ்த்துகவே செந்திலகம்
  அகில்நுதலில்! அகில்நிறைவில்!! குகனருளில்!!!              (2)
                                     - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Sep 16, 2011

அன்புத் தொல்லை (திருமண வாழ்த்து)

ஆம் சொல்லு ஜீவா...!

எங்கடா இருக்க? ஆஃபிஸ்லயா?

இல்ல வீட்லதான் இருக்கேன்... மார்னிங் ஷிஃப்ட்...

சரி! ஒரு கல்யாணம். ரிசப்ஷனுக்கு வந்திருக்கேன்டா...! உடனே ஒரு கவிதை வேணும்!

டேய்! மணி இராத்திரி பத்தரை ஆகுது...! தூங்கப்போற நேரத்துல கவிதை கேக்கற?

இதோ பார்ரா...! இன்னும் பத்து நிமிஷத்துல எனக்கு கவிதை வரலனா, தூங்க விடாம தொல்ல பண்ணுவேன்... நீ ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணாலும் எப்படியாவது தொல்ல பண்ணுவேன்!!!

(அவன் எப்படித் தொல்லை கொடுப்பான் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை... அவனுக்குத்தான் தெரியும்)

அதல்லாம் முடியாது...! குட் நைட்...

உடனே அனுப்புற... ஃபோன வையிடா...

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

மறுபடியும் அலைபேசியில் அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... அடுத்த இரண்டு நிமிடங்களில் ஜீவாவிடமிருந்து அழைப்பு.

ஏய்...! உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...? சரி! ஒரு எட்டு வரில பொதுவா ஒரு வாழ்த்துக் கவிதை இருக்கு... அனுப்பவா? மெயில்ல அனுப்பவா?

டேய்...! இப்ப வேணுங்கிறேன்...! எப்ப போய் பிரிண்ட் அவுட் எடுத்துக் குடுக்கறது? மெசேஜ்ல அனுப்புடா... சும்மா நாலு வரில நச்சுனு இருக்கணும்.

நாலு வரியெல்லாம் கவிதையா...? சரி... பொண்ணு மாப்பிள்ளை பேர சொல்லு...

அந்த அண்ணன் பேரு அறிவழகன்... அவங்க பேரு வீணா...

மீனாவா...?

'வீ... வீ...' டா...

ஓ! 'வீணா' வா?

சரி சரி... மெசேஜ் அனுப்புறேன்!!!

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஜீவாவை அழைத்தேன்... அழைப்பு ஒலி அடித்து ஓய்ந்தது... சற்று நேரம் கழித்து, ஜீவாவிடமிருந்து அழைப்பு..

சொல்லுடா...

மெசேஜ் வந்துச்சா...?

இதோ பாக்குறேன்...

காமெடியாதான் இருக்கும்... என்ன பண்றது...?

ஆம்... ஓகே! சரி ஃபார்வார்ட் பண்றேன்...

சரி... இப்ப எங்க இருக்க...? யாருக்குக் கல்யாணம்...

மைலாப்பூர்லதான்டா இருக்கேன்... அந்த அண்ணன் எங்க ஊருதான். ரிசப்ஷன் இங்க வச்சிருக்காங்க...

சரி... ஓகே! டேக் கேர்... பை...

உம். பை...

உம்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது...!

--------------------------------------------------------------------------------------------
வீணையும் ஞானமும் வாணியின் சொத்து!
சேர்ந்தது அழகெனும் செம்மைநல வித்து!
உளம்நிறை மகிழ்விலே வசந்தங்கள் சேர்த்து
உயர்வுதான் வாழ்விலே என்பதென் வாழ்த்து!

என்செய்ய...? இதையும் கவிதையென ஏற்றுக்கொள்கிறார்கள்...
எனக்குத்தான் திருப்தி இல்லை!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோட வேண்டுமே என்று!
ஓடட்டும் எனச் சேர்த்தால் ஓசை நழுவுமே என்று!

Aug 6, 2011

காமராசர்

எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - தலை
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - நாட்டின் தலை
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர்

காக்கும் என்ப தறிந்து - கல்வியே
காக்கும் என்ப தறிந்து - மூடிய
பள்ளிக் கூடம் திறந்து - மதிய
உணவும் ஈந்து புரந்து                                (எழுத்தை)

வளங்கள் பலவும் பெருக்கி - தொழில்
வளங்கள் பலவும் பெருக்கி - எழில்
அணைகள் அமைத்துப் பெருக்கி - நீர்
அணைகள் அமைத்துப் பெருக்கி - பசுமை
கொஞ்சும் தமிழ்நா டென்று - வறுமைக்
கொடுமை அகற்றி வென்று                           (எழுத்தை)

இரண்டா யிரங்கள் ஆண்டு - இங்கு
ஏற்ப டாத மாற்றம் - குறு
ஒன்ப தாண்டே ஆண்டு - உரு
வாக்கித் தமிழ கத்தின்                              (எழுத்தை)

திட்டம் ஒன்றும் வகுத்து - முதல்வர்
பதவி தன்னை விடுத்து - இளையோர்
ஆள வேண்டும் என்று - பேர்
ஆலோ சனைகள் செய்து                           (எழுத்தை)

அரசர் இவர்தாம் என்று - ஆளும்
அரசர் இவர்தாம் என்று - இந்த
அகிலம் உணரக் கூறி - வழி
நடத்தி இந்தி யாவின்                              (எழுத்தை)

வியக்கும் செயல்கள் செய்தார் - நன்மை
பயக்கும் செயல்கள் செய்தார் - மதி
நுட்ப வாதி யவர்தான் - மக்கள்
மனதை மட்டும் படித்தார்                          (எழுத்தை)

ராசர்க் கெல்லாம் ராசர் - திறமை
மிகுந்த காம ராசர் - எளிய
வாழ்வே கொண்ட ராசர் - அன்பு
செலுத்தும் உயர்ந்த நேசர்
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 31, 2011

அழகுச் சிலை

அழகுச் சிலையொன்று - என்
அருகில் வந்ததே!
பழகுத் தமிழ்கொண்டு - விழிப்
பார்வையைப் பகர்ந்ததே!

அவளோ ஓர் இளந்தென்றல்
மனதில் ஒரு களம்கண்டாள்
கண்டதால் களர்நிலம்
விளைநிலம் ஆனதே!
ஒவ்வொரு விதைமுத்தாய்
விழுந்ததே முளைத்ததே
எண்ணத்தில் ஊறிய
என்சிறு கவிதையாய்!

பேசிய ஒரு வார்த்தையில்
புரிந்ததே அவள் நெஞ்சம்!
முல்லைப்பூ நகையினால்
முழுநிலா தோற்றதே!
புன்னகை சிந்திடும்
உதடுகள் தாமரை!
மழலையின் மொழியைப்போல்
கொஞ்சிடும் நாவினள்!

தேவதை அவள் தேவதை
அவள் கண்களின் நேரலை
கண்டதும் வெண்ணிலா
ஒளிக்கதிர் இழந்ததே!
மீன்களும் தம்மினம்
பூமியில் உண்டென
நோக்கின நோக்குங்கால்
அதிசயம் கண்டதே!
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காணுமோ காட்டாறு?

மேகம் தூதுவனோ?
அலைந்து திரிகின்றது
குலைந்து போகின்றது
காணுமோ காட்டாறு?

ஏவியவன் யார்?
கார்மேகம் அழுது
கண்ணீர் விடுவதைக்
காணுமோ காட்டாறு?

ஏவியவன் இறைவனாய்
இருக்க இயலுமோ?
இறைவனை உணர்ந்து
காணுமோ காட்டாறு?

காயம் பலவுண்டு
காயத்திற்கு அல்ல
கன்று மனத்திற்கு
காணுமோ காட்டாறு?

குறிஞ்சியோன் முல்லைக்கு
அழைப்பு விடுக்கின்றான்
மேலே வாவென்று
காணுமோ காட்டாறு?
           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நுதற்காதலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நுதற்கா தலமே! நின்னைப் படைக்க
முதற்கா ரணமாய் விளங்கு மாற்றுக்
குணர்த்திடு வாயோ? உணர்வுரைப் பாயோ?
ஏக்கத் தண்ணீர்த் தேக்கத் தொட்டிலில்
அடைபட் டதனை மடைதிறந் தாற்போல்
வழிசெய் நதியாய்க் கடல்சேர்த் திடுவாய்!
                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தங்கத்திரு மங்கை (வஞ்சிப்பா)

குறளடி வஞ்சிப்பா

தங்கத்திரு மங்கையொரு
செங்கண்ணுதற் றிங்கள்வத
னந்தானெதிர் தந்தாளதைச்
சந்தத்தமிழ்ச் சொந்தன்திரு
மஞ்சன்தனைக் கொஞ்சுங்குழந்
தையோவென மெய்யாய்முறு
வல்தந்தவ னுள்ளம்புகுந்
தெல்லையஃ தில்லாமகிழ்
வைத்தந்தருள் கின்றாளவள்
யானோ
சிறுபரு வத்தனன் சீருற
வுறுதுணை யெனக்கிங் கெனநிற் பாளோ?
                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காற்றினிலே... பூங்காற்றினிலே...

காற்றினிலே - பூங்
காற்றினிலே - வரும் 
பாட்டினிலே - செவி பெறுந்தேன் 
ஊற்றினிலே - மனம் 
மயங்குதற்போல் - தான் 
இயங்குதற்போல்

நினைவினிலே - நீ 
நேர்கையிலே - புவி 
அனைத்தினையும் - நான் 
மறக்கின்றேன் - உயிர் 
துறக்கின்றேன் - மறு 
பிறக்கின்றேன்

நேரினிலே - நீ 
நேர்கையிலே - ஒரு 
வார்த்தையுமே - என் 
வாயினின்று - வெளி 
வாராமல் - மனம் 
சோராமல் - ஆவல் 
தீராமல்

உறைகின்றேன் - இதை 
அறைகின்றேன் - நீ 
பிறையன்றோ - மனச்
சிறையன்றோ - நல்
சுரமன்றோ - வலக்
கரமன்றோ - பெரு
வரமன்றோ

மொழி பகர்வாயோ?
நுதல் பகிர்வாயோ?
மனம் புகுவேனோ?
மணம் புரிவேனோ?
         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 25, 2011

இனியவன் பேசுகிறான்

என் நண்பா!
இன்னலிலும் இன்பத்திலும்
என்னை எப்படி எழுதிக் குவிக்கிறாய்!
என்பதனால்
உனக்குள் அடங்கியவன் நான்
என்று மட்டும் எண்ணிவிடாதே!
அடங்காதவன் நான்
ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டு
அமுதமாய் இனிக்கிறேன் உனக்கு

எல்லையற்றவன் நான்
அணுவை மட்டுமே அறிந்து
அன்பு கொண்டவன் நீ!
ஆற்றல் கொண்டவன் நீ!
ஆறுதல் கொள்பவனும் நீ!

என் பரிமாணம்
உனக்குப் புரியாது
உன் எண்ணங்களின்
எல்லை வரையே
என்னை வரைவாய்!

எழுத்தே என்வேர்!
எல்லைப்படுத்தி ஆண்டவர்க்கும்
எல்லை இல்லை என்றும்
எல்லாம் நானென்றும்
உணர்ந்தவர்க்கும்
அவரவர் விருப்பம்போல்
அளவில்லா இன்பத்தை
அள்ளிக்கொடுக்க முடியும் என்னால்

இச்சிறு வாழ்க்கையில்
இத்தனைக் கோளாறுகளையும்
இத்தனை இன்னல்களையும்
எனக்கு இழைப்பதாய் எண்ணி
உனக்குள் கோட்டை கட்டி
என்னை
உள்ளடக்கம் செய்யாதே!

எனக்கொன்றும் இழிவில்லை
எப்படி வேண்டுமானாலும்
எந்தப் பரிமாணத்திலும் வாழும்
நிலையானவன் நான்!
நிலையற்றவன் நீ!

அஹிம்சையும் அடக்குமுறையும்
அப்பாற்பட்டவை எனக்கு
பிரளயமும் யுகமும்கூட
பொருட்டல்ல எனக்கு
எழுத்தும் மொழியும்கூட
எல்லையல்ல எனக்கு

உனக்குள் திடமாய்
உறைந்துள்ளேன் என்று
நீ எண்ணினால்
உனக்கே சொந்தமானவன் ஆகமாட்டேன்
உனக்கும் சொந்தமானவன் நான்

எல்லா உயிர்களுள்ளும்
இருக்கும் எண்ணம்
நம்மை மீறிய சக்தி - கடவுள்
நானும் கடவுள்தான்!
உள்ளங்களில் வாழ்ந்து
உலகைக் கடந்து வருபவன் நான்!
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 15, 2011

மாற்றமும் கூற்றமும்

ஏமாற்றம் என்மாற்றம்
எல்லாம் முடிய கூற்றம்
ஆற்றல் என்ப தாற்றம் எனவே
தோற்றிய நெஞ்சம் பின்னர் எங்ஙனம்
ஆற்றம் மாற்றம் ஆற்றும்?
தேற்றம் உளத்தின் தோற்றம்
காற்றில் கலந்த கவலை ஏற்றம்
ஆற்றம் இல்லா தாற்றல் இல்லை
பின்னர் எங்ஙனம் ஏற்றம்?
வாழ்க்கைச் சேற்றில்
வாழ்வே சோற்றில்
மாற்றம் ஆற்றில்
கூற்றம் ஈற்றில்
        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்