Mar 15, 2014

சால்மோனெல்லா

கலிவிருத்தம்

சால்மோ னெல்லா சாமோ?` வென்று
காலெதிர் பார்த்துக் காத்திருக் கின்றாள்
பால்போ லுள்ளப் பான்மை கொண்டவள்
தாள்பணிந் தோடிப் பிழைத்துக் கொள்க.

                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள் :
சால்மோனெல்லா - ஒரு வகை நுண்கிருமி (பாக்டீரியம்)
சாமோ - சாகுமோ
கால் - காலம்
தாள் - பாதம்

தாவரத்தின் தவிப்பு

ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இதயத்து உயிர்க்காற்றுக்கு
ஏங்குவீர்
என்றறிந்தும்
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இவ்வுலகத்து இயன்றிடும்
மிதவெப்பம் கூடிட
அதிஅவதிப் படுவது
அறிவீர் ஆயினும்'
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?


எல்லாவற்றுக்கும்
ஏதோ ஒரு வழிகாணும்
எண்ணம் கொண்டிருப்பினும்
எனைமட்டும் கண்டுகொள்ள
ஏன் உங்கள் எண்ணம்
இடம் கொடுக்கவில்லை?


பச்சைப் பசேலெனப்
பார்க்க மட்டும்
பாரில் நான் வேண்டும்
பாவி மக்காள்!

                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தன்னம்பிக்கை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறந்திருபத் தாறாண்டு போன பின்பும்
      புரட்டகரா திப்பழக்கம் போக வில்லை
அறந்தழைக்க யென்வாழ்வில் அமைந்த நண்பர்
     அருங்கூட்டம் எனைச்சூழ்ந்தி ருக்கும் போதில்
மறத்தலைவன் எனப்பெருமை யானும் கொள்வேன்
     வருங்காலத் தேநிற்றேர்த் துகணே ரத்தும்
இறங்குமுக மினிவாரா யெண்ணம் கொண்டு
      எல்லாமும் பெற்றுய்ய இறைய ருள்வான்
!

பிரிவாற்றாமை, வலிமிகாமை

கலிவிருத்தம்

உள்ளம் பெய்தனன் வீடுடல் வில்லென
வுள்ளம் புதைதழும் புள்ளம் புதைத்தழும்
உள்ளம் புதைபிணி யுள்ளம் புதைபிணி
யுள்ளம் பொருள்வலி மிகுமா காண்கண்!
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
உள்ளம்பு எய்தனன் வீடு உடல் வில்லென
உள்ளம் புதைதழும்பு, உள்ளம் புதைத்து அழும்
உள்ளம் புதைபிணி, உள்ளம்பு தைபிணி
உள் அம்பொருள் வலி மிகுமா காண் கண்


பொருள்:
உடலானது வில்லாக இங்கிருக்க, உள்ளத்தை அம்பாக எய்தான். உள்ளத்தில் புதைந்திருக்கும் வடு (காதலால் ஏற்பட்ட வலி), தலைவியிடம் சொல்ல முடியாமல், உள்ளத்திலேயே அக்காதலைப் புதைத்து அழச் செய்கிறது.
தலைவியின் உள்ளமாகிய அம்பால் தைக்கப்பட்டு, அஃது அவனுடைய உள்ளத்தில் புதைந்த நோயாக மாறிவிட்டது;  உள்ளத்தில் இருக்கும் அழகிய அப்பொருள் மேலும் துன்பமுறுமா? வலிமை பெறுமா? கண்ணே! அறிவாயாக!

வீடு - விட்ட, தழும்பு - வடு, பிணி - நோய், வலி - துன்பம், வலிமை. உள்ளம்பொருள் - உள்ளத்திற்கு உரித்தான அழகிய பொருள்

இன்னொரு பொருள்:
புதைதழும்பு, புதைபிணி, தைபிணி - வலி (வல்லினம்) மிகாது
உள்ளம்பொருள் - உட்பொதிந்த அழகிய பொருள்.

எனைத்தேட வைத்தாள்

அடி அந்தாதி

எனைத்தேட வைத்தாள் நிதமும்; 
நிதமும் நினையாமல் நின்று;
நின்ற சொல்லேது? நில்லாமல் போகும்; 
போகும் வழிதான் உணரேன்;
உணவும் உறக்கமுமெப் போது?
போது நெஞ்சில் கரைந்து போனதை;
போனது போனதுதா னெனப்போதனை
எப்போதிணை என்னெஞ்சே இப்போதினை;
தினைமாவுந் தேனுமாய்த் தேர்நெஞ்சம்
தேர்நெஞ்சம் அதுதாங்கும் பூங்கொடி
பூங்கொடி தேடாள் எனை.
                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்படி

நேரிசை வெண்பா

ஆதி யெதுவென் றகழ்ந்திடிலேன் அந்தமிழே!
பாதியில் வந்தனன் பற்றுக்கொண் – டோதி
நெறியினின் றுன்முறை மையறியப் புக்கும்
வறியன் வழிமுறை சொல்.                                     1


என்றமிழின் ஆதி யெதுவென்று தானெண்ணிச்
சென்றவுளம் சென்றளவும் சேராமல் – நின்றயர்ந்(து)
அன்று முதலறிந்த அத்தனையும் இங்கில்லை
என்றுதொல் காப்பிய மோது.                                   2

                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

அப்பு கார்த்திகேயன் (பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

தேன்மொழிச்சொல் செல்வவுளம் தேர்ந்தமுறை ஆர்ந்துமனம்
வான்மொழிச்சொல் வையமெலாம் பரந்தொலிக்க வார்த்தெடுத்த
தேன்மெழுகைம் பொற்சிலைநேர் திருவாள இராசனென
வான்சிறப்பு வசிபோல வளத்துடனே வாழியவே!                       1

---------------------------------
வாழிய என்னுள வேந்தே!
வாழிய நின்சொல் தேன்தேன்
!
ஆழிய நின்மொழி யாண்டே

வாழிய உலகுபல் லாண்டே!                      1
மறவேன் அந்தத் தருணம்
மச்சி பசிக்கிற தென்றான்
என்வைத் துள்ளாய் என்றான்
'
வாய்வைத் துள்ளேன்' என்றனை            2


யனவிளை யாட்டது வயிற்றை

இரணமாக் கியதே அன்று
என்செய் தனையென நான்கேட்க
'
சயனட் டிகயன ழட்டினனே'                     3
நானெதிர் பார்க்கலை அவ்வுரைப்பு
வானதிர் பேரொலி என்சிரிப்பு
நினைவோ பெருங்கடல் இங்கெழுத்தாய்
நிற்பதோ சிறுபனி எனின்இமயம்            4


நிறைவால் என்மனச் சிறையுற்று

நிலைக்கும் நிதமும் கறையற்று
வாழ்க வீரெண் பேறுற்று
நிம்மதி நீர்மைச் சீருற்று                              5
                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நூற்கவியை யாப்பேனோ?

தரவு கொச்சகக் கலிப்பா

யாதொன்றும் அறியானா னேனென்றும் தான்றோன்றாத்
தீதென்றும் உணரானா னேனென்றும் வீடாயோ
போதேதே னேபோதும் போதாயெண் ணாயாகின்
யாதானும் மனத்தானே நூற்கவியை யாப்பேனோ?

                                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய :
யாதொன்றும் அறியான் ஆனேன் என்றும் தான்றோன்றாத்
தீதென்றும் உணரான் ஆனேன் என்றும் வீடாயோ?
போதே! தேனே போதும் போதாய்! எண்ணாய் ஆகின்
யாதானும் மனத்தானே நூற்கவியை யாப்பேனோ?


பொருள்:
எதுவும் அறியாதவன் ஆனேன் என்றும், சுயமாய்ச் சிந்தனையில் எதுவும் தோன்றாமல், தீமை என்றும் உணராதவன் ஆனேன் என்றும் அறிந்து, என்னை விட்டு விலகாது இருப்பாயோ? பூவே! தேனே! நீ என்னை விட்டுப் போவாய் ஆயின், என்னை நினைக்காதிருப்பாய் ஆயின், என் மனத்தில் இன்பம் நிரம்பி, எப்படி நான் கவிதைகளை இயற்றுவேன்?

வெண்டைக்காய்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வெண்டைக்காய்த் தரைகட்டு பனிக்கா லத்தே
      வெளிர்முகத்தாய் உளமுழுதும் போரா டித்தான்
தண்டைகாய் இன்னலெலாம் இன்ன லந்தான்
      தளிர்நெஞ்சத் தூணுக்குள் துணுக்காய்த் துஞ்சும்

அண்டைகாய் அண்டங்காக் காய்காய்ந் தென்னை
      அண்டியென்ன செய்திடூஉம் அஃதொன் றில்லை
கண்டைகாண் கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து
      காண்டையா வெனவெல்லாம் காண்பன் நன்றே!
                                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள்:

வெண்டைக்காய் - வெண் தைக்காய் - தூய தை மாதத்தின்பொருட்டு,
தரைகட்டு பனிக்காலத்தே - தரையைக் கட்டும் பனிக்காலத்தில்,
வெளிர்முகத்தாய் - முகம் வெளுத்துப்போகுமாறு
போராடித்தான் - பண்படுத்தி
தண்டைகாய் - தண் தை காய்  - குளிர்ந்த, எனக்குள் தைத்து(புகுந்து),
என்னைக் காயும் (நிம்மதி இழக்கச் செய்யும்)

இன்னலெலாம் -  துன்பமெல்லாம்
இன்னலந்தான் - இனிமை தரும் நலமாக மாறிவிட்டது.
தளிர்நெஞ்சத் தூணுக்குள் - உறுதிவாய்ந்த, ஆனால் தளிர்போன்ற
மென்மையான உள்ளத்தில்

துணுக்காய்த் துஞ்சும் - சிறிதாகப் பரவி உறைந்த
அண்டைகாய் அண்டங்காக்காய் காய்ந்தென்னை அண்டி - என் அருகே இருந்து, அண்டங்காக்காய் என என்னால் பழித்துரைக்கப்படும் அளவுக்கு என்னைத் துன்பப்படுத்தும் செயலைச் செய்து,
என்ன செய்திடூஉம் அஃதொன்றில்லை - என்ன செய்துவிட முடியும்? அஃது ஒன்றுமில்லை.
கண்டைகாண் - கண் தை காண்  - கண் காண் தை - கண்ணாகக் காண வேண்டிய அளவுக்குத் தைத்த (உள்ளத்தில் புகுந்த)
கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து - செயலெல்லாம் பொறுப்புடன் செய்து
காண்டையா என எல்லாம் - காண் தையா - விளங்காது, உருப்படாது என
எண்ணப்பட்ட அனைத்தும்

காண்பன் நன்றே - நன்றாக விளங்கச் செய்வேன்

தரைகட்டு - இரண்டாம் வேற்றுமைத் தொகை
கட்டு பனி - வினைத்தொகை
தைகாய் - வினையெச்சத் தொகை (தைத்துக் காயும்)
தைகருத்து - வினைத்தொகை

தூய தை மாதத்தின்பொருட்டுத் தரையைக் கட்டும் பனிக்காலத்தில்,
உறுதிவாய்ந்த, ஆனால் தளிர்போன்ற மென்மையான உள்ளத்தில் சிறிதாகப் பரவி உறைந்த, அதாவது, குளிர்ந்த எனக்குள் புகுந்து, முகம் வெளுத்துப் போகுமாறு, என்னை நிம்மதி இழக்கச் செய்த துன்பமெல்லாம் உள்ளத்தைப் பண்படுத்தியதால், இனிமை தரும் நலமாக மாறிவிட்டது. என் அருகே இருந்து, அண்டங்காக்காய் என என்னால் பழித்துரைக்கப்படும் அளவுக்கு, என்னைத் துன்பப்படுத்தும் செயலைச் செய்து, இனி என்னை என்ன செய்துவிட முடியும்? அஃது ஒன்றுமில்லை. கண்ணாகக் காண வேண்டிய அளவுக்கு உள்ளத்தில் புகுந்த செயலெல்லாம் பொறுப்புடன் செய்து, விளங்காது, உருப்படாது என எண்ணப்பட்ட அனைத்தும் நன்றாக விளங்கச் செய்வேன்.

Dec 28, 2013

படர்கைக்கிளை போமோ?

தரவு கொச்சகக் கலிப்பாக்கள்

அவனவளைக் கண்டுரைத்தான் அவளுள்ளம் கவர்ந்ததெனத்
தவழுள்ளத் தெண்ணமெலாம் தவிப்புடனே சொல்லிவிட்டான்
கவலைகொளச் செய்தானோ? களிப்புறவே செய்தானோ?
கவலையிலை அதைப்பற்றிக் கவனமெலாம் அவள்மீதே                   1

அவள்நம்ப வில்லையதை அடுத்தடுத்து என்னென்றாள்
அவள்நெஞ்சம் நம்பும்வரை அதுகனவோ எனநினைந்தாள்
கவலைமிகச் சூழ்ந்திடவே கவனமெலாம் ஒருபொருட்கே
தவநிலையைப் போன்றவளைக் கவர்ந்திழுத்துச் சென்றதுவே        2


எந்தெந்த வழியுளதோ அந்தந்தத் தடையெல்லாம்
சிந்தையிலே கொணர்ந்தவளும் தீரமுடி வெடுத்திடவே
நிந்தித்தாள் தன்னெஞ்சை நீதியெது அவளுள்ளப்
பந்தமுறைப் போராட்டம் பற்பலவும் செய்துவிட்டாள்                          3


பின்னரொரு முடிவெடுத்துப் பின்வாங்கி விடலாமே
என்னுன்றன் முடிவென்றாள் அவன்தவித்தான் இப்போது
என்சொல்வான் என்பதுவே அவனறிய முடியாமல்
சொன்னதுவே சரியென்றான் அச்சொல்லும் பயனில்லை                  4


இங்ஙனமாய்ச் சென்றிருக்க அவனுள்ளம் எப்போதும்
கங்கனங்கட் டிக்கொண்டுக் காத்திருந்த தவள்மொழிக்கு
அங்கவளும் இங்கவனும் என்முடிவு செய்தாலும்
பொங்குள்ளம் எல்லாமும் மறந்தேதான் போய்விடுதே                       5


முன்னிலையாய்ப் படர்க்கையிலே உள்ளவரைக் கொணர்காலில்
முன்னிலையில் உள்ளவரைப் படர்க்கைநிலை கொளச்செய்யத்
தன்மையினை முன்னிலையை இருவேறு படர்க்கைபொருள்
என்றுகொணர்ந் துளமுரைத்தாள் என்னறிவுப் பெண்மையவள்!     6


அவ்வுயர்வுப் பேரெண்ண அலைகளிடைத் தவழுணர்வைச்
செவ்வாய்ம லர்ந்தருளித் தன்றோழி தானறியச்
செவ்வியசீர்ப் பெருக்காக சிந்தையெலாம் எடுத்துரைத்தாள்
அவ்வியப்பைத் தாங்கொண்ணா வத்தோழி தான்கேட்டாள்              7

உண்மையிலே அவனுன்னை உள்ளமதில் வைத்திருக்கும்
திண்மைநிலை அறியக்கேள் அஃதுண்மை தானென்றால்
கண்ணுக்குள் மணியாகத் தாங்கிடுக தாங்கிடுவன்
கண்மணியே கவியின்பம் வேறுமொழி எனக்கில்லை                        8


அதைஎங்ங னம்கேட்க முடியுமென அவளுமந்தக்
கதையெல்லாம் அவனிடமே உளமாரப் பகிர்ந்திட்டாள்
அதைவிடவும் வேறென்ன அகிலத்தில் அவனுக்கு
விதையூன்ற வேண்டுமெதும் வேண்டாமே வேண்டாமே!                9


படர்க்கைப் பொருள்கொள்ளப் படர்கா தற்சொல்லப்
படர்கைக் கிளைபோமோ படநெஞ் சுரைப்பாயே!
அரிவை அறிவாயோ? அவனுள் ளறிவாயைத்
தெரிவா னவனெ்றே தெரிய வுரைப்பாயே!                                             10


என்பதுவே அவன்மொழியாய் அவனுள்ளம் உரைக்கிறது
இன்பமதும் துன்பமதும் அவள்மொழியில் தானுளது
என்றுமவன் காத்திருப்பான் என்மொழிதான் அவளுரைப்பாள்
என்பதற்காய்! வாழ்கதமிழ்ப் பெருமகனே! பெருமகளே!                   11
                                                           - தமிழகழ்வன்  சுப்பிரமணி சேகர்