Feb 7, 2024

எண்ணம்போல் செயல்

நேரிசைக் குறள்வெண்பா

செல்லா மனத்தாற் செயலாகா சொல்லாத
சொல்லாற் படுங்காதற் சோர்வு

சொல்லாத சொல்லால் காதல் சோர்வு படும் - சொற்களால் வெளிப்படுத்தாது காதல் நிறைவேறாது. (அதுபோல)
செல்லா மனத்தால் செயலாகா - மனம் ஈடுபடாவிட்டால் செய்ய வேண்டிய செயல் நிறைவுறாது.

மனம்போல் வாழ்வு

மனம்போல் வாழ்வு
ஒவ்வொரு நாளும்

செய்யும் ஒவ்வொரு செயலிலும்
செல்லும் மனத்தின் ஆவலே
செய்யும் தன்மையைத் தேர்ந்தெடுக்கிறது

சில நேரம்
தேவையானதைச் செய்வோம்

சில நேரம்
தேவையற்றதைச் செய்வோம்

சில நேரம்
தேவையானது தேவையற்றதாகிவிடும்

சில நேரம்
தேவையற்றது தேவையானதாகிவிடும்

Jan 28, 2024

விழுவாய் எழுவாய்

நேரிசைக் குறள்வெண்பா

விழுவாய் பயனிலை வீணே எழுவாய்
எழுவாய் பயனிலை ஏற்று

Jan 26, 2024

புதுமனைப்புகுவிழா வாழ்த்துகள்


புதுமனைப் புக்குப் புத்துணர் வுற்றுக்
குதுகலத் தோடு குலந்தழைத் தோங்கும்
வளமும் நலமும் பெற்று
வாழ்கபல் லாண்டே! வாழ்கபல் லாண்டே!
                - தமிழகழ்வன்

Jan 23, 2024

ஊக்குக உம்மையே

தொடக்கமும் பாடு பொருளும் தொடுக்க
மடையுடைத்து வெள்ளம் வரும்     1

வருவெள்ளத் தாவல் வழியறியா தாயின்
பெருவெள்ளம் ஏய்த்து விடும்        2

விடாஅ முயற்சியான் வேறு படுத்தி
அடாதனசெய் வாரை அடக்கு        3

அடக்கம் புகழ்ச்சிக்(கு) அழகாம் மடக்கிக்
கடக்கப் பழகல் கலை                       4

கலைகட் குயிராய்க் கருதச் செறிவாய்
நிலைக்க மனத்தால் நினை          5

நினைப்புப் பிழைப்பைக் கெடுக்குமாம் என்ற
நினைப்பை நிலைகுலையச் செய்  6

செய்கை சரியில்லை சேர்க்கை சரியில்லை
வைவாய் வழுத்தட்டும் வாழ்         7

வாழ்வு முறையினை மாற்றி யமைத்தற்குப்
பாழ்வாய்ப் பழக்கங்கள் போக்கு  8

போக்கும் பொழுதெலாம் போதும் இனித்தொலை
நோக்கிப்பார் நோக்கா தன            9

நோக்கம் இலாத நொடிக்கும் அதனாற்சீர்
தூக்கி உயரம் தொடு                       10

Jan 20, 2024

உழவனின் நம்பிக்கை

நேரிசை இருவிகற்ப அளவடி வெண்பா

வெள்ளி முளைக்க விடியுமென நம்பியவர்
துள்ளி யெழுந்து தொடங்குவார் அள்ளக்
குறையா வமிழ்தாய்க் கொடுக்கின்ற விண்ணின்
நிறையா அவாஅ நினைந்து

Jan 14, 2024

இனிய போகி நாள் வாழ்த்துகள்

தரவு கொச்சகக் கலிப்பா

பாரெங்கும் பனிமூட்டம் பகலவனோ கதிர்நீட்டி
ஏரெடுத்துப் பார்க்கின்றான் எழுந்திருங்கள் எழுந்திருங்கள்
காரென்னும் பெரும்பொழுது கழிந்ததுபோல் பழஞ்சிந்தை
வேரெடுத்துச் சீர்தூக்கி வேண்டாத யாங்களைவீர்

பாடென்று நினைந்தவற்றைப் பலவாறாய்ச் சிந்தித்துக்
கேடென்று நீரறிந்தால் கிளப்புங்கள் இனிவேண்டா
வீடெல்லாம் நனிநோக்கி வேண்டாத குப்பைகளை
நீடென்று காக்காமல் நீக்குங்கள் போகியன்றே

Dec 31, 2023

காந்தி ஆசிரியர் - இரங்கற்பா



காலத்தால் அழியாத
காவியமாய்க் கவிமழையாய்
வாழத்தான் விளைந்தவரே
வாழ்வாங்கு வாழ்ந்தவரே!

வருத்தவளை வேயரசர்
மாமுடியின் மேலாம்
கருத்துமழை வழிகாட்டிக்
கண்கலங்கச் சென்றவரே!

ஆங்கிலமும் அருந்தமிழும்
அமுதாக்கிக் கற்பித்தீர்!
தீங்கிரிக்க நாடெல்லாம்
திருக்குறளை எடுத்துரைத்தீர்!

திருக்குறளில் கணிதவியல்
தேர்ந்தெடுத்துச் சொன்னவரே!
திருக்குறளே பெருந்தவமாய்த்
தொழுதெழுந்து வாழ்ந்தவரே!

கணக்குப் பிணக்கறுத்து
மணக்குமெனக் காட்டியவரே!
வணங்குவோம் எம்வாழ்வைச் 
செதுக்கியவரே! ஆசானே!
                                     - கண்ணீருடன் 
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Nov 10, 2023

மனிதம்

மனிதம்
என்பது மட்டுமே
அடையாளம்

மற்ற உயிர்களினின்று
வேற்றுமைப்படுத்தும்
அடையாளம்

நாடு இனம்
மதம் மொழி
வகுப்பு குலம்குடி
இன்னும்
எத்தனையோ பெயர்கொண்டு
எப்படியெல்லாம் அடையாளம்கொண்டு
பிரிந்து பிரிந்து மனிதம் இழந்து
படைமேற் கொண்டு போர்செய்து
படைத்த வரலாற்றால்
மனிதம் மறந்த மனம்

இவை எல்லாம் துறந்து
மனிதத்தோடு மனம் ஒன்றுவது
எந்நாளோ?

Nov 4, 2023

போரை நிறுத்துவீர்

நிலைமண்டில ஆசிரியப்பா

உலகம் உவத்தல் உடைத்தா காது
நிலைஇய தன்மை நீடிக் காது
கலகம் கலகம் காணின் எங்கும்
பன்னூ றாண்டுகள் பாரில் வாழ்ந்தும்
நன்னூல் அறங்கள் நாணும் படியாய்ப்
பக்குவம் பெறாஅது பண்பிற் சிறவாது
கொலைவெறி கொண்டார் கொடுங்கோன் மறவர்
ஒன்று படாஅ உள்ளங் கொண்டார்
நின்றெதிர் புரியும் நெடும்போர் காணீர்
இனமென மதமென மொழியென வகுப்பென
எத்தனை பிரிவுகள் எத்தனை பிரிவுகள்
இயற்கையான் அழிவுகள் போதா வென்று
பகைமை பூண்டு படைமேற் கொண்டு
கொன்று குவிக்கும் கொடுமை காணீர்
யாரை நோவதி யாரை நோவதி
யாரை நோவதோ? யாங்கா ணேமே.