May 8, 2024

பேரிடியும் பெருமழையும்

திருவண்ணாமலையில் இன்று பேரிடியுடன் கூடிய செம்மையான மழை.

கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெய றலைஇய தண்ணறுந்
திருவண்ணாமலை ஆகியது.

எட்டுமே எட்டுமே 
எட்டுமே எட்டுமே
வான்மழை மண்ணகம்
எட்டுமே எட்டுமே

ஒன்றுமே ஒன்றுமே
ஒன்றுமே ஒன்றுமே
உள்ளகம் மழையினால் 
ஒன்றுமே ஒன்றுமே

ஆறுமே ஆறுமே 
ஆறுமே ஆறுமே
மண்ணகம் மழையினால்
ஆறுமே ஆறுமே

பத்துமே பத்துமே 
பத்துமே பத்துமே
பயிர்விளைச்சல் மழையினால் 
பத்துமே பத்துமே

Mar 26, 2024

பண்படலே பாதையாம் பார்

ஒருவிகற்ப நேரிசை அளவடி வெண்பா

பண்படா உள்ளமெலாம் பாடுபடும் பாடுபட்டுப்
புண்பட்டும் பண்படாப் புன்மையினாற் - புண்பட்டுப்
புண்பட்டுப் போயழியும் போதினிலும் பண்படா
பண்படலே பாதையாம் பார்

Mar 8, 2024

இனிய மகளிர் திருநாள் வாழ்த்துகள்

இன்னிசை வெண்பா

தாயாய்த் தமக்கையாய்த் தங்கையாய்த் தாரமாய்
வாயாரக் கூப்பிட வாய்த்த மகளாய்த்
தொழின்மேற்கொட் டோழியாய்ச் சொன்மகிழ்வீர் வாழ்க
எழின்மேற்கொட் டானை எடுத்து

Feb 13, 2024

தக்கவை

இன்னிசைக் குறள்வெண்பா

தக்கவைத் தார்கண்ணே தக்கவைத் தற்காய
தக்கவை தாமே வரும்

தக்க வைத்தார்கண்ணே - தகுந்தன கொண்டவரிடத்திலேயே
தக்க வைத்தற்கு - 
(அத்தகுதி சார் தொழிலை) நிலைநிறுத்திக் கொள்வதற்கு
ஆய -  ஆகிய
தக்கவை - தகுதிகள்
தாமே வரும் - தாமாகவே வரும்.
முன்னது இருக்கும் திறமை. பின்னது வந்தமையும் திறமை.

Feb 7, 2024

எண்ணம்போல் செயல்

நேரிசைக் குறள்வெண்பா

செல்லா மனத்தாற் செயலாகா சொல்லாத
சொல்லாற் படுங்காதற் சோர்வு

சொல்லாத சொல்லால் காதல் சோர்வு படும் - சொற்களால் வெளிப்படுத்தாது காதல் நிறைவேறாது. (அதுபோல)
செல்லா மனத்தால் செயலாகா - மனம் ஈடுபடாவிட்டால் செய்ய வேண்டிய செயல் நிறைவுறாது.

மனம்போல் வாழ்வு

மனம்போல் வாழ்வு
ஒவ்வொரு நாளும்

செய்யும் ஒவ்வொரு செயலிலும்
செல்லும் மனத்தின் ஆவலே
செய்யும் தன்மையைத் தேர்ந்தெடுக்கிறது

சில நேரம்
தேவையானதைச் செய்வோம்

சில நேரம்
தேவையற்றதைச் செய்வோம்

சில நேரம்
தேவையானது தேவையற்றதாகிவிடும்

சில நேரம்
தேவையற்றது தேவையானதாகிவிடும்

Jan 28, 2024

விழுவாய் எழுவாய்

நேரிசைக் குறள்வெண்பா

விழுவாய் பயனிலை வீணே எழுவாய்
எழுவாய் பயனிலை ஏற்று

Jan 26, 2024

புதுமனைப்புகுவிழா வாழ்த்துகள்


புதுமனைப் புக்குப் புத்துணர் வுற்றுக்
குதுகலத் தோடு குலந்தழைத் தோங்கும்
வளமும் நலமும் பெற்று
வாழ்கபல் லாண்டே! வாழ்கபல் லாண்டே!
                - தமிழகழ்வன்

Jan 23, 2024

ஊக்குக உம்மையே

தொடக்கமும் பாடு பொருளும் தொடுக்க
மடையுடைத்து வெள்ளம் வரும்     1

வருவெள்ளத் தாவல் வழியறியா தாயின்
பெருவெள்ளம் ஏய்த்து விடும்        2

விடாஅ முயற்சியான் வேறு படுத்தி
அடாதனசெய் வாரை அடக்கு        3

அடக்கம் புகழ்ச்சிக்(கு) அழகாம் மடக்கிக்
கடக்கப் பழகல் கலை                       4

கலைகட் குயிராய்க் கருதச் செறிவாய்
நிலைக்க மனத்தால் நினை          5

நினைப்புப் பிழைப்பைக் கெடுக்குமாம் என்ற
நினைப்பை நிலைகுலையச் செய்  6

செய்கை சரியில்லை சேர்க்கை சரியில்லை
வைவாய் வழுத்தட்டும் வாழ்         7

வாழ்வு முறையினை மாற்றி யமைத்தற்குப்
பாழ்வாய்ப் பழக்கங்கள் போக்கு  8

போக்கும் பொழுதெலாம் போதும் இனித்தொலை
நோக்கிப்பார் நோக்கா தன            9

நோக்கம் இலாத நொடிக்கும் அதனாற்சீர்
தூக்கி உயரம் தொடு                       10

Jan 20, 2024

உழவனின் நம்பிக்கை

நேரிசை இருவிகற்ப அளவடி வெண்பா

வெள்ளி முளைக்க விடியுமென நம்பியவர்
துள்ளி யெழுந்து தொடங்குவார் அள்ளக்
குறையா வமிழ்தாய்க் கொடுக்கின்ற விண்ணின்
நிறையா அவாஅ நினைந்து