தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா
தத்தாதன தத்தாதன தத்தாதன தத்தா - தனதந்தா
முத்தாகிய முற்றோதிய முத்தார்தமிழ் வித்தே
முட்டாகிய முற்றாதன முற்றோடொழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே - குறளன்றே
முத்தேயமும் மிக்காயிசை தைத்தார்மனம் உற்றே
செற்றேயிது குற்றேயடி எற்றேயுரை யுற்றும்
முப்பாலிணை எப்பாலுமில் அக்காலம தித்தே - கொளவென்றே
சித்தாவென முத்தாவென அத்தாவென மற்றே
சொத்தேயென மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காயொரு பற்றாயவர் முற்றாயவும் நற்றேன் - உணவென்றே
செற்றாரையும் நற்பாலரா நிற்பாரெனும் வித்தா
நெய்ப்பாரவர் தப்பானவை சுட்டாதிலை சற்றே
செப்பாதுள மெய்ப்பாடெது முற்றாவுல கிற்றே - அழகுஞ்சேர்
புத்தாகிய தெக்காலமும் பெற்றோர்நிலை யுற்றோம்
பொற்றாமரை நற்றாளிணை பெற்றேவுயர் வுற்றோம்
பொற்கோவிறை நற்பேருளம் பெற்றோமகிழ் வுற்றோம் – இணையின்றே
புற்றார்மனம் பித்தாயலை வுற்றேநிலை கெட்டால்
உற்றார்துயர் முற்றாவழி தெற்றாவில கிற்றே
பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே
கொத்தேயெது? கொக்கோதவ முற்றேயொரு முத்தே
அத்தேவழி நிற்றேநிலை சத்தாயொரு மித்தே
கொத்தாயென வித்தாயொரு முற்றானது தித்தே - வளமொன்றே
கொப்பூழொரு சிற்றாருயிர் கொத்தாகியு தித்தே
கைப்பாடுறு மக்கூழது துப்பாமமிழ் தத்தேன்
கொத்தாவது தப்பாதினி தப்பாலது முப்பால் - எனவென்றே
- தமிழகழ்வன் பிரித்தறிய:
முத்து ஆகிய முற்றும் ஓதிய முத்து ஆர் தமிழ் வித்தே
முட்டு ஆகிய முற்றாதன முற்றோடு ஒழி சத்தே
முப்பாலது நிற்பாலது வற்றாததும் எற்றே - குறளன்றே
முத்தேயமும் மிக்காய் இசை தைத்தார் மனம் உற்றே
செற்றே இது குற்றே அடி எற்றே உரை உற்றும்
முப்பால் இணை எப்பாலும் இல் அக்காலம் மதித்தே – கொளவென்றே
சித்தா என முத்தா என அத்தா என மற்றே
சொத்தே என மிக்கோர்மனம் எக்காலமும் பற்றே
தெற்காய் ஒரு பற்றாய் அவர் முற்று ஆயவும் நற்றேன் - உணவென்றே
செற்றாரையும் நற்பாலராய் நிற்பாரெனும் வித்தாய்
நெய்ப்பார் அவர் தப்பானவை சுட்டாது இலை சற்றே
செப்பாது உள மெய்ப்பாடு எது முற்றா உலகு இற்றே - அழகும் சேர்
புதுமை ஆகியது எக்காலமும் பெற்றோர் நிலை உற்றோம்
பொன் தாமரை நற்றாள் இணை பெற்றே உயர்வு உற்றோம்
பொன் கோ இறை நல் பேருளம் பெற்றோம் மகிழ்வு உற்றோம் – இணை இன்றே
புற்று ஆர் மனம் பித்தாய் அலைவு உற்றே நிலை கெட்டால்
உற்றார் துயர் முற்றா வழி தெற்றாய் விலகிற்றே
பொற்றாநிலை எற்றேயவர் பித்தேயழி வுற்றே - மனமொன்றே
கொத்தே எது? கொக்கோ தவமுற்றே ஒரு முத்தே
அத்தே வழி நிற்றே நிலை சத்தாய் ஒருமித்தே
கொத்தாய் என வித்தாய் ஒரு முற்றானது உதித்தே – வளமொன்றே
கொப்பூழ் ஒரு சிறு ஆருயிர் கொத்தாகி உதித்தே
கைப்பாடு உறும் அக்கூழ் அது துப்பாம் அமிழ்தத் தேன்
கொத்து ஆவது தப்பாது இனிது அப்பால் அது முப்பால் - என வென்றே
விளக்கம்:
முத்துக்களாகிய இலக்கணக் கூறுகளை முற்றும் உள்வாங்கியதால், அம்முத்துக்கள் நிறைந்த தமிழ் விதையே (திருக்குறளையும் இலக்கணத்தையும் சேர்த்துப் படிக்கும்போது நமக்கு ஒன்று புரிய வரும். என்னவென்றால் இலக்கணக் கூறுகளில் பெரும்பாலானவற்றை உள்வாங்கியவர் எடுத்துக் காட்டுகளைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே திருக்குறளைப் படைத்ததாகத் தோன்றும்). இந்நூலுக்கு முட்டுக்கட்டையாக இருந்த அரைகுறை அறிவுகளையெல்லாம் மொத்தமாக ஒழிக்கின்ற வளமை உடையதே மூன்று பால்களை உடையது.நிலைத்து நிற்கக் கூடியது. அதன் கருத்துக்கள் பலவும் காலத்தால் வற்றிப் போகாமல் இருப்பதும் ஆகிய நூல் என்னவோ? குறளல்லவா!
சேர, சோழ, பாண்டிய நாடுகளாகிய மூன்று நாட்டினரும் மனமார மிகவும் புகழ்ந்து பாராட்டினர். சிலர் இது இரண்டே அடிகளை உடைய குறுமை உடையது எனப் பகைமை பாராட்டினர். ஆனாலும் அக்காலத்திலேயே முப்பாலுக்கு இணை எந்தப் பாக்களும் இல்லை என்று ஏற்றுக்கொண்டு மதித்தனர்.
சித்தரே, முத்தியின்பம் தருபவரே, தந்தையே, மற்றும் எங்களின் சொத்தே எனத் திருவள்ளுவரை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் எக்காலத்திலும் மாறாத பற்றுடையராகின்றனர். தென்புலத்தாரும் வணங்கத்தக்கவரே என்று அவர் கூறிய கருத்து, குமரிக் கடலை முழுதும் ஆராய முனையும் ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல தேன்போன்ற இனிய உணவாகும்.
சினந்து பகைமேற் கொண்டாரையும் நல்லவராய் நிலைக்கச் செய்யும் விதையாகச் செய்வார்; அவர் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இல்லை. திருக்குறளில் சொல்லப்பபடாத மெய்ப்பாடுகள் உள்ளனவா? இது இன்னும் முழுமையாக உணராத உலகில் இன்றும் அழகும் சேர்க்கின்றன. (தமிழ் மரபில் எட்டு மெய்ப்பாடுகள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகியன)
திருக்குறளைப் படிக்கப் படிக்க எந்தக் காலத்திலும் புதிது புதிதாகப் பொருள் புரிந்துகொள்ளும் நிலையை அடைந்தோம். திருவள்ளுவரது பொற்றாமரைப் பாதங்களை வணங்கி உயர்வடைந்தோம்.
பொன் போன்ற இறைவனாகிய திருவள்ளுவரின் நன்மை செய்யும் பெருமை மிக்க உள்ளத்து உணர்வுகளைப் பெற்றோம்; மகிழ்வு உற்றோம். அவருக்கு வேறு யாரும் இணையில்லை.
எறும்புப் புற்றினைப் போன்று ஏராளமான எண்ணங்களைத் தாங்கிய மனம் பித்துப் பிடித்து அலைந்து தன் நிலைமை கெடும்போது, அந்தத் துயரம் அடைந்தவர் அதன் உச்ச நிலைக்குச் செல்லாமல் தெளிவடைய வழிகாட்டித் துயரத்தை விலக்குவது திருக்குறள். பொறாமை என்ற பித்து நிலை அழிந்து, மனம் ஒன்றச் செய்வது திருக்குறள் (பொறாநிலை சந்தம் நோக்கிப் பொற்றா நிலை என வந்தது).
கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற குறளுக்கேற்ப நின்றால் வாழ்க்கை வளமாகும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதே என்ற குறளை எண்ணி மகிழ்கிறோம். இனியதாகிய அப்பால் அது முப்பால் எனத் தப்பாமல் கொத்திக்கொள்வோம்; வென்று காட்டுவோம்.