Jul 1, 2014

வரலாறு பேசணும்ல...

தரவு கொச்சகக் கலிப்பா

என்வீட்டுச் சிறுபூட்டே ஏனுடைந்தாய் எதிர்பாரா
தின்றென்னைச் செலவிட்டே இன்னுயிர்நீத் தனையெனக்குச்
சொன்னிறையாச் செலவீட்டு வஃதெவ்வா றுணர்ந்தாயோ?
என்றாலும் இத்தனைநாள் எனைக்காத்தாய் நீவாழ்க!
                                              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 19, 2014

அஞ்சுதல் அஞ்சாமை

குறள் வெண்பா

அஞ்சுதற்(கு) அஞ்சாது வாழ்பவன் வையத்தில்
துஞ்சிய யாக்கைக்(கு) இணை
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

வாசுதேவ கிருஷ்ணன்

கலிவிருத்தம்

இளையான் உள்ளம் இளையான் எனினும்
இளையாய் நிற்பன் இளையா யெண்ணி
இளையா யிகழா தேயுளம் இளைக
விளைய ளந்தான் விளைவாய் நிறைவான்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பொருள் :
இளையான் உள்ளம் - உள்ளம் சோர்வடைய மாட்டான்.
இளையான் எனினும் - பலராமனுக்கு இளையவன் என்றாலும் (பலராமன்
சொல்லைத் தட்டமாட்டாதவன் என்றாலும்)
இளையாய் நிற்பன் - காவல்காடாக, கட்டுவேலியாக, கவசமாக நிற்பவன்
இளையாய் எண்ணி - எண்ணிய இயற்றாத இகழ்ச்சிக்குரியவனாய் நினைத்து
இளையாய் இகழாதே - அற்பத்தனமாய் இகழ்ந்துவிடாதே
உளம் இளைக - கொண்ட எண்ணத்தைக் கைவிடுக
இளை அளந்தான் - பூமியை அளந்தவன்
விளைவாய் நிறைவான் - எங்கும் எதிலும் ஏற்படும் எல்லாமுமாய்
நிறைந்திருப்பவன்.

Jun 12, 2014

பொன்றுந்துணையுந் துணை

நேரிசை வெண்பா

ஒன்றாஅ உள்ளத் தழுந்தீஇ வேறொன்றும்
நின்றாஅ டாதூஉ நேர்வதென்ன? - பொன்றுந்
துணையும் துணைவரு மாஅத் துணையுள்
அணையும் அணைவரு மா
            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பிரித்தறிய:
ஒன்றா உள்ளத்து அழுந்தி வேறொன்றும் நின்றாடாது நேர்வதென்ன?
பொன்றுந்துணையும் துணைவரு மாத்துணை உள்ளணையும் அணை வருமா?


பொருள்:
பொருந்த இயலாது என்ற உள்ளத்தில் அழுந்தி, வேறு எதைப்பற்றியும் எண்ண இயலாத இந்தக் கைக்கிளையில் நிகழ்வதென்ன? கடைசி வரையில் துணையாக வரும் பெருந்துணை என எண்ணும் உள்ளத்தில் பொருந்திய இந்த எண்ணத்திற்குப் பொருந்த வேண்டியவை பொருந்துமா?

Jun 3, 2014

தமிழ்வரம்

கலிவிருத்தம்

உடற்ற ளர்ந்தனன் உடற்று ளத்தனன்
மிடற்று றைந்தன கடற்று வற்றினன்
தடுத்த போதியன் அடுக்குப் பாவினன்
எடுத்த தமிழினன் இனிய வமிழினன்
             - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.


பொருள்:
உடல் தளர்ந்தனன் - உடல் தளந்ந்தான்
உடற்று உளத்தனன் - வருந்தும் உள்ளம் கொண்டான்
மிடற்று உறைந்தன கடற்று வற்றினன் - தொண்டையில் உறைந்த தண்ணீரானது வறண்டுபோகும் காட்டைப் போல் ஆனவன்.
தடுத்த போது இயன் - காதலை மறுத்த பெண்ணை நினைத்துக் கொண்டிருப்பவன்.
அடுக்குப் பாவினன் - அழகாய் அடுக்கிப் பாடும் பாவினங்களால்
எடுத்த தமிழினன் - பாடும் தமிழன்
இனிய அமிழ் இனன் - (ஆதலின்)இனியவை அமிழ்ந்திருக்கக் கூடியவன்

கடறு - காடு
மிடறு - தொண்டை
போது - பூ

May 10, 2014

முப்பெருங் கலைமகள்கள் வாழ்க!

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மேலோங்கு வெளியீட்டு மேலாண்மைக் குடும்பத்தின்
     முத்தான இரத்தினங்கள் முகிழ்த்தெழுந்த குடும்பத்தின்
வாலான கடைக்குட்டிப் பாப்பாக்கள் செய்தவருஞ்
     சாதனைகேள் தோழர்காள் தோழீகாள் வாருங்கள்
வாழ்த்திடுவோம் வாயார நெஞ்சாரக் கலைவாணி
     மாவருளைப் பெற்றிட்ட பிஞ்சுள்ளக் குழந்தைகாள்!
வாழ்க!பெறும் பதினாறு பேறுகளைப் பெற்றிட்டு!
     வாழ்கதவ வுள்ளத்துக் கல்வியினாழ் தொட்டிட்டு!
                                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 8, 2014

கண்ணாவுக்குக் கண்வலி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணா!உன் கண்வலியைக் கண்டே உள்ளம்
    கொண்டபதைப் பெல்லாம்நான் என்ன சொல்வேன்
கண்ணெவ்வா றுள்ளதெனக் கேட்ட தற்குன்
    கண்ணைநி ழற்படமெ டுத்த னுப்பிக்
கண்கலங்க வைத்தனையஃ தாரோ என்றென்

   எண்ணத்தில் தோன்றியதை எழுத்தில் சேர்க்க
கொண்டவழ குத்தேவ தைத்தாய்! என்னே!
   கொஞ்சுமெழிற் சொல்லாலே விடைப கர்ந்தாய்!

                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 5, 2014

வஞ்சம்

நேரிசை வெண்பா

அஞ்சுதலுக் கஞ்சாத வஞ்சமுள நெஞ்சத்த!
செஞ்சதுனைக் கொஞ்சமுமு றுத்தாது - பஞ்சமிலாத்
துஞ்சுமிரு ளுள்ளத்தால் கள்ளமெலாம் வெல்லமெனத்
தஞ்சாத னைக்கூறு தான்.

May 3, 2014

How do I understand Paging Space

எனக்கு மேலே ஏதோ ஒரு சத்தி, 
என் மனத்தில் ஏற்படும் பல்லாயிரத் துணுக்குகளுக்கான சிந்தனைகளை என் மூளை என்னும் RAM-ல் ஏற்றி, 
அவ்வப்போது, மறக்கக்கூடாத சில எண்ணங்களை ஆழ்மனம் என்னும் Paging space பகுதிக்குத் தள்ளி, 
ஒரு கணப்போதில் இத்தனை செயல்களை மட்டும்தான் இவனால் தாங்க முடியும் எனக் கணக்கிட்டு, 
அத்தனை செயல்களை மட்டும் இயக்கும் வல்லமையைத் தந்து, தேவையானவை, தேவையற்றவை எனத் தருணத்திற்கேற்பப் பிரித்தாளும் வல்லமையைத் தந்து,  
இந்த இயங்கு தளத்தை (Operating System) இயக்க வைக்கும் 
அந்தச் சத்தியை (Operator) என்னவென்று சொல்வது? 

உணர்ந்தபின் ஒன்றுமில்லாதது, 
உணராத வரையில், உயர்வானதுதான்!!!

My Dreams

Oh! my sweet dreams!
With all my thinking streams.
What a powerful guide!
And a truthful raid...
Sometimes you are frightening
Making me with brightening
Thoughts, something to write
With the mindful delight.
Whatever I think in real life,
While I'm sleeping very rife.
Oh my sweet dreams
With all my thinking streams...