Aug 4, 2017

இவ்வுல கென்றும் இனிமையதே!

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


என்னாற் பட்ட துயரெல்லாம்
     இன்றோ டொழிக! இன்முகமே
எந்நா ளும்நான் கண்டிங்கு
     வின்பம் காண மலர்முகமே!
கன்னல் கண்ணன் கனிமுகம்போல்
     கவின்பெற் றுயரினி மைபெறுக
இன்னல் இனிநான் காணேனே!
     இவ்வுல கென்றும் இனிமையதே!

Apr 20, 2017

கருதத் தெரிதல்

நேற்றிருந்த கருத்தோடு நானில்லை இன்று
நேற்றில்லாக் கருத்தோடு நானுள்ளேன் இன்று
நேற்றிருந்த கருத்(து)ஓடும் நிலைக்கருத்தைக் கொண்டு
வீற்றிருக்கும் செந்தமிழால் வேர்தேடும் நன்றே.

Jan 30, 2017

சல்லிக்கட்டுப் புரட்சி – தைப்புரட்சி

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)
காளையினங் காக்கவிளங் காளையருங் கன்னியரும்
நாளையுல கைக்காண நந்தாய்மார் வயிற்றிருக்கும்
வேளையிலும் அருங்கொழுந்து வேதனைகள் விட்டொழித்து
வேளையிது வென்றங்கே வேலையெலாம் விட்டொழித்து
நாளைநம தேயந்த நாட்டுமாட்டின் இனமறுப்பான்
கோளையொழிக் கக்கூடிக் கோலங்கொள் புதுமெரினா

(தாழிசை)
ஏனாகும் என்னாகும் என்றிருந்தார் செயலிழந்தோர்
தேனாகப் பாய்கின்ற செய்திபெறா வருத்தத்தால்
தானாக முன்னெடுத்துத் தனித்திறமை காட்டிநின்று
வானாக உள்ளத்தில் உருவெடுத்த மாணவர்கள்

பரந்தவுல(கு) இதுவாகும் பார்த்தறியும் அலைபேசி
கரந்தவுல(கு) உண்மையெலாம் கடிதில்வந்(து) எடுத்துரைக்க
அரசியலார் வேண்டாமல் ஆதரவும் வேண்டாமல்
சிரசெனநில் தலைவரையும் வேண்டாத மாணவர்கள்

பித்தனெனச் சொல்லாதீர் பிதற்றலெனச் சொல்லாதீர்
புத்தியுள்ள பெருமைமிகு பேராற்றல் வேராற்றால்
சித்தனெனச் சிந்தையினைச் சீர்செய்தே உரமேற்றி
எத்தனைநாள் ஆனாலும் எழுந்தோடா மாணவர்கள்

(அராகம்)
பெருவெளி இருளினில் சிறுதுளி எனவரும்
   ஒளியுமிழ் அலைமொழி மொழி
பெருந்திரள் ஒளியது பெருவெளி இருளினைக்
   குறுகுதல் எனச்செயும் வினை
வருதுயர் வடிவினை ஒருநொடிப் பொழுதினில்
   வெருளென விடிவெளி ஒளி
கருதுயர் அறிவியல் அகந்தனில் மிளிர்மதி
   இளைஞனை நினைந்துளம் தேன்

(அம்போதரங்கம்)
(நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம்)
நடிக்கின்ற கலையுணர்ந்தார் நற்காப்புக் காவலர்தம்
பிடிக்கஞ்சாப் பெருவீரர் போய்நின்றார் கடலருகே
அடியெடுத்து வைத்தாலோ அடுத்தவடி கடல்மீதே
நொடிப்பொழுதில் வைப்போமே நொந்தகல்வீர் நெருங்காதீர்

(நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்)
தன்னலந்தான் கருதாது தாமாக முன்வந்தார்
தன்பிள்ளை என்றேதோள் தாங்கியவர் முன்வந்தார்
இன்னலந்தான் மாணவர்கள் இன்னலிலும் முன்வந்தார்
என்னளந்தான் ஈசனவன் மீனவனாய் அவனானான்

(முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம்)
பெரு(கு)உப்பை உண்டோர் மானம்
தெருக்குப்பை களைந்தார் வானம்
எழுச்சிக்குச் சான்றாய் இங்கே
விழிப்புக்கும் சினந்தான் பங்கே
காவலர்தான் என்றார் பாரேன்
கயமையுளம் கொண்டார் நேரேன்?
உலகந்தான் வியந்தே காணும்
கலகந்தான் அறிந்தே நாணும்

(இருசீர் ஓரடிப் பதினாறு அம்போதரங்கம்)
முன்மொழிந்தோர் தோள்வாழ்க
நின்றெழுந்தோர் வாள்வாழ்க
அன்றளித்தார் கொடைவாழ்க
வென்றளித்தார் படைவாழ்க
ஒன்றிணைந்தார் நலம்வாழ்க
ஒன்றிணைதார் வளம்வாழ்க
கன்றினைஈ ஆவாழ்க
காளைவளர் உளம்வாழ்க
நடுக்குப்பத் தார்வாழ்க
கொடுக்குங்கைத் தூண்வாழ்க
கலையொழுக்கம் நலம்வாழ்க
நிலைவழக்கக் களம்வாழ்க
பண்பாடும் உளம்வாழ்க
பண்பாடும் நாவாழ்க
கொன்றழித்தார் கரம்வீழ்க
நின்றழிதார் புலம்வீழ்க

(தனிச்சொல்)
எனவாங்குச்

(ஆசிரியச் சுரிதகம்)
சல்லிக் கட்டுத் தடையை உடைக்க
அல்லும் பகலும் அயரா(து) உயர்ந்த
நல்ல உள்ளத் தார்தம் புகழைச்
சொல்லில் அடக்கிச் சொல்லல் ஆகுமோ?
தெங்கி னைப்போல் தான்தரும் நன்மைக்(கு)
இங்கே எழுந்த தைப்புரட்சி
எங்கும் என்றும் இனியும் எழுமே!

Jan 17, 2017

சோலைகவியரங்கம் 4 - புதுமைப் பொங்கல் பொங்குக

கவியரங்கத் தலைமை
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளி முத்து 

கவிஞர் அழைப்பு - வள்ளி முத்து
பலமுள் இருக்குமாம் பால்முகமும் காட்டும்
சிலநாரொ ளிக்கவுள்தித் திக்கும் - புலவோரே.!
நேரகழ்ந்து பார்த்தால்தான் நீரறிவீர் தீம்பலவும்
வேறல்ல சுப்ரமணி என்று

குமிழுடையும் சொற்களின்றி கொள்கைசூழும் பாவேந்தி
அமுதமன்ன பாக்களூடே ஆழ்கருத்தை ஆளுகின்ற
தமிழகழ்வ.! அருங்கவியே.! தைப்பொங்கல் பாடவாரும்.!
இமிழ்கடலாய் ஒலிக்கட்டும் இதயமீதில் இப்பொழுதே.!


தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து, அவையடக்கம்
பைந்தமிழ்ப் பாவுக் கடிமைசெய்
   பாவலர் ஆவல் வாழியவே
பைந்தமிழ்ச் சோலைக் கவியரங்கப்
   பாவலர் தலைவர் வாழியவே
பைந்தமிழ்ச் சோற்றை உண்டுள்ளம்
   பண்படும் நோக்கம் வாழியவே
பைந்தமிழ் சிறிதே உண்டவன்யான்
   பார்வையில் பிழைதீர்த்(து) அருள்வீரே!

பழைமை காக்கும்
புதுமைப் பொங்கல் பொங்குக

எதுபுதி(து) என்றன் மனத்தினிலே
   ஏறிய வேதனை; இன்றுள்ளம்
வெதும்பி உழவன் சாகின்றான்
   விளைச்சல் இன்றி நமக்கெல்லாம்
புதுமைப் பொங்கல் என்பதென்ன?
   புதிதாய்ப் பொங்க என்னுளது?
புதுப்பா னையில் புத்தரிசி
   பொங்கு வோமா இவ்வாண்டு?         1

புதுப்பித்து வாழ்வோம் என்ற
   புதுப்பித்துப் பிடித்தல் நன்றே
புதுப்பித்தல் என்ப தென்ன?
   பழைமையை மறந்தி டாமல்
புதுப்பானை ஆனால் கள்ளோ
   பழையதே என்று சொல்லப்
புதுமையைச் செய்தல் தானே
   பழைமையை மறத்தல் ஏனோ?        2

பழைமை அறிய முயல்கின்ற
   பாதை தன்னில் புதுமையினைத்
தழைக்கச் செய்வோம் நல்லுலகைத்
   தாங்கி நிற்கும் தூணாவோம்
பழைமை என்றால் என்னென்று
   பகுத்துக் காணாப் புற்றனத்தை
வழமை யாகக் கொள்கின்ற
   மடமைத் தனத்தைக் கைவிடுவோம்    3

பழைமைப் பொங்கல் பொங்கிடுவோம்
   பழனம் பண்பட் டிடவியற்கை
வழங்கும் இன்ப வளங்காப்போம்
   மழைநீர் சேர்த்து மண்காப்போம்
உழவைக் காப்போம் உயிர்காப்போம்
   உலகைக் காக்க முன்னெழுவோம்
வழமை மறவா திருந்தேநாம்
   வரும்பின் தலைமு றைகாப்போம்        4

Dec 6, 2016

இறையில் அமைதியுற... - இரங்கற்பா

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி இறையில் அமைதியுற வேண்டுகிறோம்.

இரங்கற்பா

வஞ்சி விருத்தம்

அடங்கா மாரி அலைக்கழிக்கத்
தடங்கால் மாரி தலையொழிக்க
நடுகால் மாறிக் காலொழிக்க
வடக்கால் மாறத் தென்னெங்கே?


கலி விருத்தம்

எடுப்பது கையில் இயற்செங் கோலது
கெடுப்பது வஞ்ச வறுமைக் காலது
படுப்பது பகைவர் கைகொள் வாளது
தடுப்பது தடுக்கும் தின்மை தானது


வற்றறு பொற்றடத் துற்றநீர் அற்றென
உற்றவர் பெற்றவர் அற்றென உற்றவர்
பற்றறுந் தற்றவர் கற்றறிந் துற்றவர்
மற்றெவர் கொற்றவர் பொற்றவத் துற்றவர்


நற்றாயெனப் பெற்றாயுயர் நற்றாளிணைப் பொற்றாமரை
பெற்றேவளர் முற்றாவிதை முற்றாவினை கற்றோமினி
மற்றாருளர் பெற்றோமுனை அற்றாயுயிர் பெற்றார்பிறர்
பொற்றேர்வலப் பற்றேவளர் சற்றேவளர் சற்றேவலர்
                                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jun 20, 2016

திருமண வாழ்த்து - சுப்பிரமணி ஆனந்தி

சந்தக் கலிவிருத்தம்

அன்பின்விழி ஆன்றோர்மொழி ஐயன்வழி ஔகத்(து)
இன்பங்கொள ஈதல்வசி என்னும்படி ஏற்றம்
உன்னுங்கவி ஊக்கங்கொள ஒன்றித்தரும் ஓசை
தன்னில்சகி மன்னன்வழி நண்ணுங்கனி ஞான்று

அப்பிருமணி அகிலத்தினில் அரியனபெரும் யாவும்

ஒப்பிலிமணி என்றேநிலும் ஒண்ணித்தில நகையாள்
செப்பிடுமணி ஆனந்தியின் எண்ணங்கொளும் உள்ளம்
சுப்பிரமணி உறுகென்றுயர் உள்ளத்தொடு வாழ்த்தும்
                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 26, 2016

திருமண விழா அழைப்பு ஓலை - சுப்பிரமணி ஆனந்தி

(நேரிசை வெண்பா)
வாழிய வையகம் வாழிய செந்தமிழ்
வாழிய ஞாயிறு மாமதி - வாழிய
கோள்களும் மீன்களும் கொள்கை உலவிட
ஆள்தவர் ஆள்க அறம்                                                              1


(நேரிசை ஆசிரியப்பா)
அழகன் முருகன் அருள்மழை பொழிக
தழைக்கச் செய்குல சாமிகள் வாழ்க
பருவத மாமலை தருவளம் திகழும்
பருவத இராசன் குலத்தே நிகழும்
திருமண விழாவிது தேர்நாள்
வருவது பின்னே அறிவீர் தாமே.                                              2


(சந்தக் கலிவிருத்தம்)
திருவள்ளுவ ருள(ம்)வாழ்ந்திடு திகழீரிரு வைந்நூற்(று)
ஒருநாற்பது பின்னேழென ஒளிராண்டினி லொன்றி
வருதுன்முகி எனுவெம்முக வைகாசியி னான்கைந்(து)
இருமூன்றென வறிவன்புத னியனாளது திருநாள்                  3


புலர்திரளொளி புனர்வசுவது புரிவினையென நேர்நில்
நிலவதுவளர் பிறைநான்கென நிகழ்நாளது சேர்நில்
இலங்காங்கில வாண்டுரையென ஈராயிரத் தீரெட்(டு)
உலகோருளம் கொளும்நாள்எது? ஜூன்திங்களில் எட்டு        4


அணிசேர்கதிர் அகிலந்தனை அடியொற்றிடுங் காலை
மணிநெற்கதிர் வருதலையென மணந்திடுமரு வேளை
மணியாறதை அடித்தேவரு மவ்வொன்றரை மிதுனம்
பணியேறிடுங் கனிநாளதே அருவேளைய தென்று                 5


(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஞ்சி லொன்று தீஅவ் வூராம்
நெஞ்சி லொன்றிட நேஎர் வீடாம்
திருவண் ணாமலை மாவட் டந்தனில்
திருவி ளங்கிடு தென்மகா தேவ
மங்கலந் த
ன்னில் வாழ்ந்தி ருந்த
நாட்டு வைத்தியர் சோதிட ரென்று
நாட்டு புகழ்நல் வேந்தர் ஆகிய
குமார சாமி சின்னம்மாள் மகனார்
பள்ளி கொண்டாப் பட்டில் வாழும்
நல்ல சோதிடர் நாட்டு வைத்தியர்
நல்லிசை யுல(கு)அறி பம்பை யோடு
பொற்சி லம்பு நடனத் தோடு
தொல்தெருக் கூத்தென்று பலகலை அறிந்த
வித்தகர் சேகர் பூமா தேவி 
இவர்த மக்கமை இளைய மகனாம் 
சுப்பிர மணியெனும் திருவளர் செல்வன் 
மன்னும் தமிழகழ் மனத்தே ரினனே!                                       6

(குறளடி வஞ்சிப்பா)
விழிமாநகர் விழுப்புரம்தனில்
எழிலாய்நிலும் ஓரூராம்
மேல்மலையனூர் தனில்வாழும்
ஆல்போல்குலந் தழைத்திடவே
அருள்கொடையங் காளம்மன்
திருக்கோயிலின் முன்னாள்அறங்
காவலர்எனப் புகழ்கொண்ட
சுப்பிரமணி பூசாரி
அவர்தம்துணை ஆண்டாள்
அம்மாள்இவர் தம்புதல்வர்
அரும்வாணிகர் கைதேர்ந்த
சமையற்கலை யாளரவர்
பம்பைதனை இசைக்கின்ற
பல்கலையறி பூசாரி
பாலுவென்பார் அவர்துணைவி
புஷ்பாஇவர் தம்முடைய
இளையமக ளாம்நகையாள்
ஆனந்தி
என்னும் திருவளர் செல்வி
மன்னும் மதிவத னத்தாள் தானே!                                         7


(நேரிசை ஆசிரியப்பா)
அவரை
இருவீட் டினரும் ஒருங்கே கூடிச்
சுற்றமும் நட்பும் சூழ நின்று
மேல்மலை யனூரில் சிவனருள் திருமண
மண்டபந் தன்னில் மணவணி காண
முறைமை தழுவி முடிவு செய்தனர்
அவ்வழித் தாங்கள் தங்கள் சுற்றமும்
செவ்வழி நட்பும் சேர்ந்திட வந்து
மணவணி காணும் மக்களைக் கல்வி
அறிவு வீரம் ஆற்றல் வெற்றி
அழகு நுகர்ச்சி ஆயுள் நல்லூழ்
இளமைநோ யின்மை நன்மக்கள் நெல்பொன்
பெருமை புகழெனும் பேறுகள் பதினாறு
பெற்றுப் பெருவாழ்வு வாழ்கென
உற்ற மகிழ்வின் உளம்வாழ்த் துகவே!                                  8
                      -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 13, 2016

காவடிச் சிந்து

அன்புச்செல் லத்தாயே போற்றி! - அம்மா
ஆண்டவன் என்றேதான் தோற்றிச் - சொல்லா
அரும்பாடெனுந் துயர்யாவையும்
துரும்பாக்கிடும் பெருந்தாயவள்
அன்பே - அவள் - பண்பே


இன்பத்தே எந்நாளும் நானும் - நலம்
ஈவதே உன்பால்நான் காணும் - பெரும்
ஈடிணையில் பேறதனில்
பாடிடுவன் ஆடிடுவன்
இணங்கி - உனை - வணங்கி

                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

May 12, 2016

முத்தந்தரச் சொற்றந்தனை

சந்தக் கலிவிருத்தம்

முற்றந்தர முற்றந்தர முத்தந்தர முத்தே

சொற்றந்தனை சட்டென்றெனைத் தொக்குங்கலை யுற்றே
மற்றொன்றினை பற்றென்றவை வற்றென்றனை எற்றே
சுற்றங்கலை கற்றங்கலை தொற்றங்குல கற்றே
                                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

காவடிச் சிந்து/ கா வடிசிந்து

வந்தவினை நொந்துமிக ஓடும் - தமிழ்
வாழ்ந்திருக்கும் இந்தவுல கோடும் - கடல்
வந்திழுத்துப் போயிடினும் செந்தமிழச் சங்கதனை
வழங்கும் அது முழங்கும்.


எந்தமிழென்(று) ஏத்துகிற வரதர் - பணி
ஏற்றவரும் பைந்தமிழ மரபர் - அவர்
ஏற்றிவைக்கும் தீபவொளி போற்றிவைக்கும் தீந்தமிழை
எங்கும் வளம் பொங்கும்!
              - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்