Aug 15, 2014

பிரிவு

கலிவிருத்தம்

என்றுந் தனிமை யென்றுன் றனிமை
ஒன்று ரைக்கு மொன்றா நாழிகை
என்ற னுள்ளங் கொன்று வாழும்
இன்று ணைவன் இலனோ என்க

            - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

என்றும் தனிமையென்று உன்றன் இமை
ஒன்று உரைக்கும் ஒன்றா நாழிகை
என்றன் உள்ளம் கொன்று வாழும்
இன் துணைவன் இலனோ என்க.

Aug 12, 2014

இழப்பும் அச்சமும்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், 

தொலைந்த தென்றதோ ருண்மையினும்
    தொலைக்கப் போகிறோம் என்பதனால்
தொலைத்து விடுகிற வாழ்வினிலே
    தோய்ந்த வச்சமென் செய்வேனோ?
தொலைத்தல் தோல்வியும் வெற்றியுமாய்த்
    தொலைந்த தொலைவத னுள்ளடங்கும்
குலைக்கச் செய்வது மதன்வேரில்
       குடியி ருக்குமப் பயந்தானே
                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


மா-விளம்-காய்

Aug 7, 2014

சுபத்திரா (பிறந்தநாள் வாழ்த்து)

பஃறொடை வெண்பா

சுபத்திரா வாழ்க; சுகத்துடன் வாழ்க
சுபமாஅ யெச்செயலும் செய்துயர்ந்து வாஅழ்க
என்றன்றங் கையென்றும் இன்ப முறவாழ்க
நன்றென்றும் நின்வாழ்வில் சூழ வலம்வருக
அன்பாழி முத்தா யகங்குளிர வாழ்கவுயர்
பண்பாலே பேர்நிறுத்திப் பார்போற்ற வாழ்க
ககரமே யென்றால் கருப்பட்டி முன்னே
வகரமே யென்றால் வழித்துநக்கென் றோதும்
இலகுமனத் தாள்வாழ்க வின்முகத்தாள் வாழ்க
குலம்வாழ்க வாழ்க வினிது.

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 5, 2014

கைக்கிளை

கலிவிருத்தம்

கைக்கிளை யேதங் கைக்கிலை யேசிந்
தைக்கிலை துன்பம்? தங்கிளை என்பன்?
மெய்க்கிளைப் பேறிடச் செய்க்குழைப் பாம்வீண்
பொய்க்குரைப் பேனே! நானே! நலமே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:

கைக்கிளையே தம் கைக்கு இலையே (கைக்கிளை ஏதம் கைக்கு இலையே)
சிந்தைக்கு இலை துன்பம்? தம் கிளை என்பன் ?
மெய்க்கு இளைப்பு ஏறிடச் செய்க்கு உழைப்பாம் வீண்
பொய்க்கு உரைப்பேனே! நானே நலமே!

கைக்கிளை - ஒருதலைக் காதல்
ஏதம் - குற்றம்
தங்கைக்கிலை - தம் கைக்கு இலை
சிந்தைக்கிலை - சிந்தைக்கு இலை
இலை - இல்லை என்பதன் இடைக்குறை
தங்கிளை - தம் கிளை
கிளை - உறவு
மெய்க்கிளைப்பு - மெய்க்கு இளைப்பு
செய்க்குழைப்பாம் - செய்க்கு உழைப்பாம்
செய் - நிலம், துறை
செய்க்கு - துறைக்கு, நிலத்திற்கு, களத்திற்கு
பொய்க்குரைப்பேன் - பொய்க்கு உரைப்பேன்

இஃது என் வாழ்க்கை?

கலிவிருத்தம்

ஒன்றி னுள்ளே வொன்றிய காலே
பின்னொன் றுள்ளே யுள்ளஞ் செல்லே
னென்ற மிழ்ந்த டம்பி டிக்கக்
கன்றுள் ளத்தன் கருத்தா யாமே


அக்க ருத்த ழிந்த பின்னே
அக்க ரந்தான் மாறிச் செல்ல
அக்க ரையாற் றுச்செல் வந்தான்
அக்க றைநெஞ் சுள்ளே செல்லும்


இங்ஙன மாகக் கணத்திற் கொன்றாய்க்
கங்கணங் கட்டிக் கொண்டே றெண்ணம்
தங்கவி டாதே யொன்றிலு மொன்றாய்
எங்ஙன மறிவே னிஃதென் வாழ்க்கை?
                   - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Aug 3, 2014

ஒன்றா? சுழியா? ஒன்றாச் சுழியா ?

நேரிசை ஆசிரியப்பா

விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய                         5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்

எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின்                10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே

ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே                                      15

தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும்                                                    20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 19, 2014

என்ன சொல்ல வந்தாய்?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்ன சொல்ல வந்தாயென்
  நெஞ்சே நீயஃ தறிவாயோ?
ஒன்று மில்லை என்றாளே
   ஒன்று மிலதோ யாதறிவேன்?
சொன்னால் தானே தெரியுமது
    சொல்லா மற்சொலி வைத்தனையே
என்னென் றறியா தெங்ஙனமோ
    யானுறக் கந்தான் கொள்வதுவே?

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

Jul 17, 2014

மனப்போக்கு

      எனக்கென்ன பாட்டெழுதத் தோன்றிடினு மாங்குமுன் வந்தமையு மருஞ்சந்தமு மதற்கேற்றாற்போ லமையுஞ் சொற்களு மச்சொற்களின் பிரிதன்மைப் பொருளுஞ் சேர்தன்மைப் பொருளு மாங்காங்கே விரவி யகத்தின்மகிழ்வைச் சேர்த்தழகு பார்க்கு மருந்தமிழே வுனையல்லால் வேறுயாரை யென்னுள்ளே யெப்போது மெண்ணிக் கொண்டிருப்பேன்?
    எக்காலு முன்னையே யெண்ணி யெண்ணி மகிழ்வுகொண்டிருக்கு மிவ்வுயிர் செய்த தவப்பயன்றா னென்ன? ஏதுமிவ்வுலகில் வேண்டாமென யெண்ணு மளவுக்கென் னுள்ளத்தை வயப்படுத்தி யேதோ வுளறுகிறே னென்றுபிற ரெண்ணு மளவுக்காளாக்கி விட்டனை. இதற்கியா னின்பங் கொளவா துயர்கொளவா யென்பதைப் பற்றியு மெண்ணுதற் கென்மன மொப்பவில்லை.

Jul 15, 2014

சீர்குலைவு

முதல்வரி மட்டுமே நினைவில் நிற்க, மற்ற வரிகளையும்தேடி மகிழ்வோம் என்று இணையத்தளத்தில் தேடிக் கடுப்பாகிவிட்டேன்.

ஒருபாடலைத் தேவைக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் மாற்றி எழுதிக் கொள்(ல்)கிறார்கள். இன்னும் விரிவாக அதனை எழுதி, அதைப் பெருமைப்படுத்துகிறார்களாம். ஒருபாடலை, அதனுடைய சந்தத்திலேயே எழுதுதலும் படித்தலும் எவ்வளவு இனிமை என்று அறியாத அறிவுக்கொழுந்துகளின் கண்ணியமான செயல் இது. ஒருபாடலை - அதனுடைய கட்டமை
ப்பை - அதனுடைய இலக்கணத்தைக் குலைக்காமல் இருப்பதற்குச் சீரும் தளையும் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவுச்சுடர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனை இது.

பாரதியின் பாட்டையே கொஞ்சம் மாற்றி எழுதி, அவருக்கே வாழ்த்து தெரிவிக்கிறார்களாம்.

போற்றி போற்றி ஓராயிரம் போற்றி - நின்
பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி காண்
சேற்றிலே புதிதாக முளைத்ததோர் செய்
தாமரைத் தேமலர் போலொளி தோற்றி
நின்றனை பாரதத் திருநாட்டிலே!
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை பாரதீ! எங்கள் தமிழ்ச்
சாதிசெய்த தவப்பயன் வாழி நீ!

பாரதி உயிரோடு இருந்தால் மீண்டும் இறந்திருப்பார். என்னடா இது, சீர்களும் அவற்றோடு ஒட்டி உறவாடும் சந்தமும் சரியாக இல்லையே எனத் தோன்றியது. மீண்டும் மீண்டும் படித்துச் சந்தத்தில் கொண்டுவர முயன்று கடுப்பாகிவிட்டேன்.

சரியான பாடல் எது என்பதில் எனக்கு இப்போது ஐயம் தோன்றுகிறது.

போற்றி போற்றியோ ராயிரம் போற்றிநின்
   பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
   செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
   துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதர சேயெங்கள்
   சாதி செய்த தவப்பயன் வாழிநீ!

இந்த வரிகளும் சரிதானா?

இன்னொரு பாடலும் இங்ஙனம் சீர்குலைந்தது எனக்கு நினைவிலிருக்கிறது.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஒருவெண்பாவின் ஈற்றடியில் எத்தனை சீர்கள் இருக்கவேண்டும் என்பதைக்கூட உணராமல், எப்படி மாற்றி இருக்கிறார்கள்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

Jul 10, 2014

சேர்த்தெழுதுதலி னினிமை

நீடாழி யுலகத்து மறைநாலோ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ ழுத்தாணிதன்
கோடாக யெழுதும்பி ரானைப்ப ணிந்தன்பு கூர்வாமரோ

                                                  - மகாபாரதம்

இங்ஙனஞ் செய்யுற்றமிழிலு முரைநடையிலுஞ் சேர்த்தெழுதிப் பழகுதல் மனத்திற் கெவ்வள வினிமை நல்குகிறதென்பதை யாரிடம்போய் யான்சொல்வேன்.

என்றோழி யெனக்கென்றன் பிள்ளைக்கால் பயில்தமிழை
நன்றாக நினைவுறுத்தி நலமின்பங் கொளச்செய்தா - ளவள்
நன்றாக யிவ்வுலகம் போற்றிடவே வாழ்கவென
நெஞ்சார வாழ்த்துகிறேன் வேறென்ன யினிதுலகில்

                         - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்