Jul 5, 2020

மணிக்குறள் - 1. இறை வணக்கம்

வேலனை வேண்டலும் வாழ்த்தலும்

அப்பனே! ஆறு முகனே! அடியனாம்
சுப்பனைக் காத்தருள் வாய்                                   1

அந்தமிழ்ச் சேயே! அருகிருந் துன்னருளைச்
சிந்தையில் சேர்த்துச் செதுக்கு                             2

அணிபூங் கடம்பா! அழகிய வேலா!
கணிப்பாய் உளத்தைக் கனிந்து                           3

அண்டமெலாம் ஆற்றலாய் ஆனாது நின்றாயைத்
தொண்டன் தொழுதேத்து வேன்                            4

ஆவென்றி யான்மலைக்கும் அம்மலையின் செங்கோவே!
பாவென்றி கொள்ளப் பய                                         5

ஆஅடி வந்தேன் அகமகிழ்ந்(து) உம்மையே
தேஎடி வந்தேன் தெளிந்து                                         6 

ஆற்றலே ஆற்றலின் ஆற்றலே ஆற்றினில்
ஆற்றுப் படுத்தி அகழ்                                                 7

இன்றமிழ்ச் செம்மையை ஈந்தருள்வாய் எம்முருகா
நன்றாய்ச் செயலாற்ற நான்                                    8

இனிக்க இனிக்க இசைந்திசைக்க ஏற்றுப்
பனிக்கப் பனிக்கப் பழக்கு                                       9

இயலா தெனமருங்(கு) இன்னாமை தோயச்
செயலாக்கச் செவ்வேள் துணை                          10

Jun 18, 2020

துணையென வருவாய் அன்பே! - அறுசீர் விருத்தம்

நெஞ்சிலே தைத்த சொற்கள் 
    நேரிலே கண்ட கண்கள் 
பஞ்சிலே வைத்த தீயாய்ப் 
   பற்றிய தென்னே! கண்ணே!
அஞ்சிலே ஒன்றை வைத்த
   அனுமனின் செயலே அன்றோ?
துஞ்சியே வீழு முன்னே 
    துணையென வருவாய் அன்பே!

Jun 14, 2020

பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்


செந்தமிழ்ச் சீரே உன்றன்
   சீரடி போற்று கின்றேன்!
முந்திடும் பாவில் நிற்பாய்
   முன்வினை யோடச் செய்வாய்!
அந்தமில் அமுத வூற்றே
   அறிவினுள் இனிக்குந் தேனே!
வந்திடும் இன்னல் நீக்கி
   வண்டமிழ் விதைப்பாய் தாயே!

என எப்போதும் தமிழன்னையின் நினைவாகவே இருப்பவர், பள்ளியில் மாணவர்களுக்குக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறு கொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர், மிகச் சிறந்த மரபு பாவலர், பாவலர் மா.வரதராசனார் மீதும் பைந்தமிழ்ச் சோலையின் மீதும் அளவில்லாப் பற்றுடையவர், பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் திரு அர.விவேகானந்தன் அவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தைச் சேர்ந்த அவர் 1982-ஆம் ஆண்டு நா.ரங்கநாதன் – முனியம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். கல்வியின் மீது தீராத காதல் கொண்ட இவர் முதுகலைத் தமிழும் (M.A.), ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.Phil), முனைவர் பட்டமும் (Ph.D) பெற்றார். அவருடைய துணைவியார் சுதாசினி அவர்கள். இவர்களுக்குச் செழியன், சுடர்விழி என இருமக்கள்.

இவருடைய தமிழ்ப் பணிகள்:

1. உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் மாநிலத் துணைப் பொதுச்செயலராகப் பணியாற்றி வருகிறார்.

2. திருவண்ணாமலை உலகத் தொல்காப்பிய மன்றப் பொருளராகப் பணியாற்றி வருகிறார்.

3. தேவிகாபுரம் திருக்குறள் மன்றச் செயலராகப் பணியாற்றி வருகிறார்

4. டி.என்.எஸ்.பி.டி.ஏ ஆசிரிய அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டச் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

5. பைந்தமிழ்ச் சோலை தொடங்கப்பட்ட நாள் முதல் அதனுடன் இணைந்து பல்வகைப் பாக்கள் படைத்து வருகிறார். பைந்தமிழ்ச் சோலையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு. பைந்தமிழ்ச்சோலை எண்பேராயத்தினரில் ஒருவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும், திங்கள்தோறும் பைந்தமிழ்ச்சோலையின் அகவலரசர் போட்டி நடத்துவதிலும் பொறுப்பேற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

6. 2018ஆம் ஆண்டு பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலை மாவட்டக் கிளையை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றி வருகிறார். திங்கள்தோறும் இலக்கியக் கூடலை நடத்துகிறார். அதன் வழியிலும் என்னாப்பு (Whatsapp) வழியிலும் அருந்தமிழ் யாப்பிலக்கணத்தைப் பயிற்றுவித்து ஆண்டு முடிவில் தேர்வு நடத்தி ஆண்டு விழாவில் பட்டம் வழங்கி மரபு கவிஞர்களை உருவாக்குகிறார். அவ்வாறு கவிஞர்கள் பாடிய பாக்களின் தொகுப்பைப் ‘பாவினம் பாடுவோம்’ எனும் நூலாக 2019ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

7. பன்னாட்டுக் கருத்தரங்கங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்.

8. சிற்றிதழ்களிலும் இணையத் தளங்களிலும் மரபு கவிதை மற்றும் எழுத்துப்பணி ஆற்றி வருகிறார். மரபு கவியரங்கங்களுக்குத் தலைமையேற்று நடத்துகிறார்.

9. பள்ளி மாணவர்களுக்கும் மரபு கவிதை எழுதும் ஆவலுடைய கவிஞர்களுக்கும் யாப்பு வடிவங்களை எளிமையான முறையில் அறிமுகப்படுத்துகிறார். சான்றாகப், பள்ளி மாணவர்களுக்கு வெண்பா எழுதக் கற்பித்து, அம்மாணவர்களே எழுதிய வெண்பாக்களைத் தொகுத்து “மொட்டுகள் தூவிய மகரந்தம்” எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.

10. நூல்கள் பலவற்றுக்கு அணிந்துரை, முகவுரை போன்றன வழங்கியும் பலருடைய நூல்கள் தயாரிப்பு, வெளியீட்டுப் பணிகளில் உதவியும் பிறரை ஊக்குவிக்கிறார்.

இவர் எழுதிய நூல்கள்:
இவருடைய கவிதைகள் இனிமையும் எளிமையும் தெளிவும் கருத்துச்செறிவும் வாய்ந்தவை. "இவர் படைக்கும் பாடல்கள் பனி விரட்டும் சூரியனாய் இக்குமுகச் சிக்கல்களைக் களையும் தீர்வாக அமைகின்றன" என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் இவருடைய படைப்புகளைப் பாராட்டுவார்.

1. அஞ்சிறைத்தும்பி (முத்துமீரான் விருது பெற்ற நூல்)

2. தூரிகைப் பூக்கள் (சிகரம் விருது பெற்ற நூல்)

3. பட்டுக்கிளியே வா வா! (சிறார் இலக்கிய விருது)

4. விரல்நுனி விளக்குகள் (பொதிகை மின்னல் இலக்கிய விருது)

5. ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள்

6. குபேர ஈஸ்வரர் அம்மானை

7. கதிர்முருகு

8. பாட்டு வழியில் பாவலர் வையவன்

9. இணையத் தமிழறிஞர் மு.இளங்கோவனார்

10. மொட்டுகள் தூவிய மகரந்தம்

11. பாவலர் பரம்பரைக் கவிஞர்கள்

12. பாவினம் பாடுவோம்

13. தமிழ்க்கணை

14. மாலவன் நூற்றந்தாதி

15. தெய்வப் புலவன் மும்மணிமாலை

பட்டங்களும் விருதுகளும்:

1. தமிழக அரசின் இளந்தமிழாய்வாளர் விருது.

2. தி.மலை மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறந்த படைப்பாளிக்கான விருது.

3. நல்லாசிரிய ரத்னா விருது.

4. பைந்தமிழ்ச் சோலை நடத்திய உலகளாவிய பாவலர் பட்டத்தேர்வில் உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சி, பைந்தமிழ்ச்செம்மல் பட்டம்.

5. பைந்தமிழ்ச்சோலை மாணவர்களுக்குப் பாவகைகளைச் சிறப்புறக் கற்பித்தமைக் காக நற்றமிழாசான் விருது.

6. விரைந்து கவிபாடும் திறனை ஆராய்ந்து அறிந்து பாராட்டித் தரப்படும் பைந்தமிழ்ச் சோலையின் சிறப்பான ஆசுகவி விருது.

7. பைந்தமிழ்ச்சோலையின் சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான யாப்புகளைப் படைக்கும் விதமாக நடந்த தேர்வில் வெற்றிபெற்று சந்தக்கவிமணி விருது.

8. இளமையிலேயே தமிழின்பால் நாட்டமும் பேரார்வமும் கொண்டு அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியாகச் சாதிக்கின்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகிய பைந்தமிழ்க் குருத்து எனும் விருது.

9. வீறுகவியரசர் முடியரசன் நூற்றாண்டு விழாவில் மரபு கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசன் விருது

10. தன்னம்பிக்கைச்சுடர், பைந்தமிழ்ப் பாவலர், கவிஞர் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள்

இவ்வாறு பல்வேறு தமிழ்ப்பணிகளைத் தலைமேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வரும், தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகானந்தர் வாழ்க மேவிய புகழோடே!
                                   -  பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்

Mar 17, 2020

மலையன்ன துன்ப வகைத்து (பஃறாழிசைக் கலிப்பா)

பொன்னன்ன வண்டே!நீ பூமோதி விளையாடி
என்னவளை எப்போதும் என்னினைவில் ஏற்றுகிறாய்!
இன்னகையள் எனைத்துயரில் ஏன்விட்டாள்? உரையாயோ?

ஈர்க்குச்சி போலுடலம் இளைத்தவளின் இன்னிதயம்
போர்க்குணத்த தாயிருக்கப் பொடியானேன் கணப்பொழுதில்

நோக்குகையில் நோக்கியெனை நோக்கமுள பார்வையினால்
தாக்கியழித் தாளவளே! தாங்குவனோ? நோய்கொண்டேன்

படுத்துறங்கப் போனாலும் பாய்விரிக்க மறந்தேனே
விடுத்தெழுந்து போனாலும் வீதிநிலா விரட்டுவதேன்?

உண்டுயிர்க்கும் எண்ணமிலா உடல்கிடக்கச் செய்தனளே
பெண்டுயிரை எண்ணியெண்ணிப் பேதையனாய் அலைவேனே

மூளையிலே எண்ணங்கள் மூளையிலான் என்றென்னை
வேளைதொறும் வைகிறதே! வேலையிலான் வேறென்றே!

முனிந்துலகம் மறந்தேனே முன்னின்ற காரிகையாள்
கனிந்துலகம் எனநின்றாள் எனநினைந்தேன் பொய்யாமோ?

எனவிங்குப்

புலம்பும் படியெனைப் புல்லனாய் ஆக்கிக்
கலங்கும் உளமொடு கைவிட் டனளே
மலையன்ன துன்ப வகைத்து.

பைந்தமிழ்ச்செம்மல் கவிஞர் மன்னை வெங்கடேசன்


அன்னைத் தமிழின் அரும்பாடல் யாவையும்
மின்னி யொளிர வியப்புடன் - ஒன்றியே
ஆயிர மாயிரமாய் அள்ளிக் கொடுத்துநீ
பாயிரமாய் வாழ்க பணைத்து!

மன்னை யளித்தநன் மாக்கவியே பண்பினா
லென்னைக் கவர்ந்திழுத்த வேந்தலே - என்றுமுள
நற்றமிழின் சீராய் நலஞ்சேர விப்புவியி
லெற்றைக்கும் வாழ்க வினி(த்)து!

என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் பாராட்டப் பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், மடக்கணி வேந்தர், பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்த் தும்பி, தமிழ்ப்பா வித்தகர், பைந்தமிழ்ச்செம்மல் திரு மன்னை வெங்கடேசன் அவர்கள்.

அவர் மன்னார்குடியில் 02-06-1970 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் வீ.சீனிவாச கோபாலன் – வேதவல்லி அம்மையார் அவர்கள். அவர் மன்னார்குடி தேசிய மேநிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புவரை கல்வி பயின்றார். பின்னர் சென்னை குருநானக் கல்லூரியில் இளங்கணிதம் பயின்றார்.

அவர் 1990 முதல் 1996 மார்ச் வரை தென்னக ரயில்வேயில் பணி புரிந்தார். 1996 மார்ச் முதல் இன்றுவரை மத்திய சுங்க, கலால் மற்றும் சேவை வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது வெண்பா எழுதும் அவருடைய நண்பர் இரவீந்திரன் அவர்கள் மூலம் சிலவற்றைக் கற்றுக்கொண்டு வெண்பாக்கள படைக்கத் தொடங்கினார்.

பைந்தமிழ்ச் சோலை தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே (2015) அதனுடன் இணைந்து பல்வகைப் பாக்கள் எழுதப் பழகினார். அவ்வாண்டின் இறுதியில் (2015-2016) உலக அளவில் பைந்தமிழ்ச் சோலை நடத்திய பாவலர் பட்டத் தேர்வில் உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சியும், பைந்தமிழ்ச் செம்மல் பட்டமும் பெற்றார். இவரே பைந்தமிழ்ச்சோலையின் முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்' என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை இரண்டாம் ஆண்டு விழாவில் சிறப்பு வாய்ந்த ஆசுகவிப் பட்டம் பெற்றார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை மூன்றாம் ஆண்டு விழாவில் ஆசுகவிப் போட்டியைத் தலைமையேற்று நடத்தினார். அது மட்டுமன்றிப் பைந்தமிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சிகளைத் திறம்படத் தந்து நற்றமிழாசான் என்னும் பட்டம் பெற்றார்.

2019ஆம் ஆண்டு நடந்த ஆசுகவிச்சுழல் போட்டியில் அமர்வின் தலைமைப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயலாற்றியும், விரைந்து கவிதையியற்றியும் வெற்றி பெற்று விரைகவி வேந்தர் என்னும் சான்றிதழ் பெற்றார். சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடின யாப்புகளைப் படைக்கும் விதமாக நடந்த தேர்வில் வெற்றிபெற்றுச் சந்தக் கவிமணிப் பட்டம் பெற்றார். ஈரோடு தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் பாவலர் மா.வரதராசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவிதைப் பட்டிமன்றத்தில் “கவிதையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம் - சொற்சுவையே” - அணிக்குத் தலைமையேற்று வழிநடத்திக் கவியொளி விருது பெற்றார். காரைக்குடியில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் வீறுகவியரசர் முடியரசன் விருது பெற்றார்.

பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிகாட்டலில் ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, இரட்டை மணி மாலை, மும்மணி மாலை, பல்சந்த மாலை, தூது எனப் பலவகைச் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

பைந்தமிழ்ச்சோலையைச் சுறுசுறுப்பாக இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.

பட்டறிவும் பகுத்தறிவும் இணைந்த தாலே
பக்குவமாய்ப் பழகுகின்ற இனிய நண்பர்
எட்டாத கவியென்பார் தமிழின் யாப்பை
எளிதாகக் கற்றதுடன் எல்லோ ருக்கும்
கிட்டுவிதஞ் செய்கின்ற அறிவு பேழை
கேளிரென அனைவரையும் அணைக்கும் செம்மல்
மட்டில்லா அன்புகொண்ட வெங்க டேசன்
மன்றத்தில் கவிபாட அழைக்கின் றேனே!

என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் இவரைக் கவிபாட அழைப்பார்.

மடக்கணி அமைந்த பாடல்களும், இரட்டுற மொழிதல் வெண்பாக்களும் இவருக்கு உகந்த பாவகைகளாகும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்குச் சான்றாக அவருடைய மடக்கணி கலந்த இரட்டுற மொழிதல் பாடல் ஒன்றை இங்கே காண்போம்.

(பெண்ணும் கட்டளைக் கலித்துறையும்)
காரிகை தன்னோ டிலங்குவதால் நாமமும்
காரிகை தன்னோ டிலங்குவதால் – ஈரெட்டில்
நேர்வந்து நிற்கு மழகினால் இவ்விரண்டும்
நேர்வந்து நிற்கு மழகு.

பெண்: அழகுடன் இருப்பாள், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு வயதில் எந்தப் பெண்ணும் அழகாய் விளங்குவாள்.

கட்டளைகலித்துறை: அழகுடன் விளங்கும், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு எழுத்துக்கள் வந்தால் நேரசை அழகாய் முன்வந்து நிற்கும்.

இவ்வாறாய இவருடைய ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த பாவலர் மா.வரதராசனார் அவர்கள் இவருடைய தமிழ்ப்பணிக்குப் படையலாகச் செய்த இரட்டுற மொழிதல் இதோ.

வெங்கடேசனுக்கும் - மீனுக்கும் (இன்னிசை வெண்பா)
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத்
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு

வெங்கடேசனார்: உண்ணுதல் மறந்து பா வடிப்பார், அவருடைய பாக்கள் (தோலெனின் பாட்டு) மிளிரும், கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார். மடக்குப் பா, இரட்டுற மொழிதல் எழுதுவார், தமிழ்க் கடலில் (அவருள்ளம்) நீந்தும்.

மீன்: உணவில் உண்ணுமாறு அடங்கும், மேல்தோலாகிய செதிள் மிளிரும், கண்கள் மூடாது. (எப்போதும்), மடங்கி, வளைந்து நீந்தும், துணையுடன் இணைந்து இரண்டாகக் காட்சி தரும், குளிச்சியான கடலில் வாழும்.

பைந்தமிழ்ச் சோலையின் இணையாசிரியராகவும் எண்பேராயத்தின் தலைவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும் பொறுப்பு ஏற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் இவர்.

இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

பண்பினி லோங்கிய பைந்தமிழ்ச் செம்மலிவர்
பண்ணையார் நற்றமிழ் மன்னையார் - அண்ணுதற்
கென்று மினிய தமிழ்போல் எளியவர்க்கு
நன்றாய் நடக்கும் மடக்கு
                              - தமிழகழ்வன் சுப்பிரமணி

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10 (ஏருக்குச் சீர் செய்வோம்)

கவிஞர் அழைப்பு

கணினிப் பணியில் இருந்தாலும்
   கன்னல் மொழியில் பாவனையத்
தணியா ஆர்வத் துடன்கற்றுத்
   சந்தங் கொஞ்சும் மரபினிலே
மணியாய்ப் பாக்கள் தீட்டுமன்ப!
   மன்றம் நின்று கவிபாட
வணக்கம் சொல்லி அழைக்கின்றேன்
  வருக வெங்கள் தமிழ்மகனே!!

அரங்க மதிர அருங்கவி தருக!!

தமிழ் வாழ்த்து

எண்ணும் போதே என்னுள்ளம்
   ஏற்கும் இன்பம் இன்றமிழே!
பண்ணும் போதே பாதைகளைப்
  பரப்பி நிரப்பும் பைந்தமிழே!
கண்ணும் கருத்தும் உன்மீதே
  கவிதை செய்யப் பணிக்கிறதே!
மண்ணும் விண்ணும் நீயென்பேன்
  வளர்க்கும் தமிழே வாழியவே!

தலைவர் வணக்கம், அவையடக்கம்

செவியரங்கை மகிழ்விக்கும் செந்தமிழைப் பாடுகின்ற
கவியரங்கத் தலைமைக்குக் கனிவான வணக்கங்கள்!
புவியரங்கம் முழுதுள்ள பொற்கவிஞர் தாள்போற்றிக்
கவியரங்கம் வந்துள்ளேன் கருணையோடு வாழ்த்துகவே!

ஏருக்குச் சீர் செய்வோம்

கார்தூக்கி வளம்பரப்பக் காணரிய நிலையினிலும்
ஏர்தூக்கிப் பார்தூக்கும் எழிலாளன் ஏழையெனல்
வேர்தூக்க நீரூற்றா வெங்கொடுமை யாமன்றோ?
சீர்துக்கிப் பார்ப்பதற்காய்ச் சீர்துக்கிப் பாடுவமே!1

பாடுபடும் உழவனுக்குப் பருவங்க ளேமுதலாம்
ஊடுபனி எந்நாளோ? உயந்தகதிர் எந்நாளோ?
நாடுங்கண் நாள்பார்க்கும் நல்லமழைக் காலமெது?
தேடுவது கிடைப்பதற்குத் தெளிவான மனம்வேண்டும் 2

வேண்டுமவன் உள்ளத்தில் விலகாத உறுதி;மழை
வேண்டுமள விருக்கவேண்டும் விழியாகக் காத்திருக்க
வேண்டுமவன் விழிப்போடு காத்திருக்க வேண்டுமன்றோ?
தூண்டுமுளத் தெண்ணத்தாற் றுளியேனும் சுரக்காதா? 3

சுரக்காதா அமுதமெனச் சோர்ந்திருத்தல் சரியாமோ?
கரவாது கலப்பையினைக் கைப்பிடித்து நேர்நிறுத்திப்
பரப்புக!மண் படரட்டும் பலப்பலவாய் விளைச்சலினை
வரமாக வழங்கட்டும் வையத்தார் வாழ்வதற்கே! 4

வாழ்வின்றி அழிவதுவோ? வளமாக்க வேண்டியன
தாழ்வின்றிச் செயல்வேண்டும் தடையாக வந்தபெரும்
பாழ்படுத்தும் செயற்கையினைப் பதரெனவே துணிந்தெறிவோம்
வீழ்த்துகின்ற வீண்செயலர் வினையொடித்து நாம்நடுவோம்! 5

நடுவதியார் நடுவதியார் நாளெல்லலாம் திரிந்தலைந்து
கெடுவதியார் எனும்நிலைமை கெட்டழிந்து போகட்டும்
தொடுவதியார் சேற்றினையே தொடத்தயங்கு வோர்தம்மைத்
தொடுவதியார் சோற்றினையே எனத்தடுத்துப் புரியவைப்போம் 6

புரியவைக்கச் சிறுவயதே புதையலென வயல்வெளியில்
திரியவைக்க வேண்டுவது தேவையெனக் குரல்கொடுப்போம்
அரியவகை எனவாக ஆகுமுனே உணவெதுவென்(று)
உரியவகை எடுத்துரைப்போம் உழுவதுவே உயர்வென்போம் 7

உயரத்தில் இருந்(து)ஆளும் ஒண்கதிரோன் வாழியவே!
இயற்றுங்கை ஏற்கின்ற ஏர்க்கலப்பை வாழியவே!
உயர்வடைந்த உள்ளத்தான் உழவன்தாள் வாழியவே!
துயர்தீர்க்க வருகின்ற தூநீர்கார் வாழியவே! 8

வாழ்த்துப்பா !

ஏர்தூக்கும் எழிலோனைச் சீர்தூக்கிப் பாவடித்த
இக்கவிக்கு நன்றிசொல்வோம் வாங்க வாங்க !
ஊரறிய உறவறிய பாரறிய இவ்வரங்கில்
உள்ளன்பாய் வாழ்த்துகளைத் தாங்க தாங்க !!

Nov 19, 2019

கவிதைப் பட்டிமன்றம்

ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் புதுமையான முறையில் பாவலர் மா.வரதராசனார் அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர் குழுவினரின் கவிதைப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கவிதையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம்...

சொற்சுவையே...

கவிஞர் மன்னை வெங்கடேசன்
கவிஞர் வள்ளிமுத்து
கவிஞர் தமிழகழ்வன்

பொருட்சுவையே...

கவிஞர் விவேக்பாரதி
கவிஞர் சாமிசுரேசு
கவிஞர் சுந்தரராசன்

சொற்சுவையே... கவிஞர் தமிழகழ்வன்

அந்தமிழ்த் தாயைப் போற்றி
   அடிமலர் வணங்கு கின்றேன்
இந்தநல் அவையி ருக்கும்
   இன்சொலர் யாவ ரையும்
வந்தனம் என்று கூறி
   வணங்குகின் றேனே தேனின்
சந்தமார் கவிதை செய்யும்
   கவிஞரை வணங்கு கின்றேன் 1

ஈரோடு தமிழச் சங்கம்
   என்றென்றும் வாழ்க வென்று
சீராட்டிச் சீர்கள் கூட்டிச்
   சிந்தைசேர் இன்பம் எல்லாம்
வேராக்கி விளைக்கும் பாக்கள்
   வியன்றமிழ்ப் பெருமை பேசப்
பாராட்டிப் போற்று கின்றேன்
   பாலனைய பால னையா 2

புன்னகையைப் பொன்னகையாய்ப் புனைந்தி ருக்கும்
   பொழிலாசான் எழிலாசான் வரத ராசர்
பொன்னடியைப் போற்றுகிறேன் உண்மை பாடிப்
   புத்துலகம் படைக்கின்ற வெங்க டேசர்
நன்கவிந்த கவியாலே நலஞ்சேர்க்கின்ற
   நன்முத்துச் சொன்முத்து வள்ளி முத்து
மன்னர்கள் இங்கிருக்க மனம கிழ்ந்தேன்
   மங்காத தமிழாலே கவிதை செய்தேன் 3

எதிரணியில் நின்றெம்மை ஏய்க்கத் தானே
   எடுப்பாரே பொருட்சுவையென் றெண்ணி யெண்ணி
அதிரடியாய்க் கவிபாடும் விவேகங் கொண்ட
   அருளாள்வான் பாரதியே வாழ்க வாழ்க
புதிதாகச் சுவைகூட்டும் பாங்கில் பாடும்
   புதுமைமொழி சாமிசுரேசு வாழ்க வாழ்க
விதவிதமாய்க் கவிசெய்யும் அழகு வேந்தன்
   வித்தகரே சுந்தரரே வாழ்க வாழ்க 4

******
புவியில் மனிதன் போற்றிச் செய்யும்
கவிதை சிறக்கக் காரணம் எதுவோ?

சொல்லா? பொருளா? சுவைமிகுந் ததுவே
சொல்வீர் புலவீர்! சிந்தனை செய்தே!

சுவைபடச் சொல்க என்பதே வழக்கு!
சுவைபடப் பொருளுரை என்பதா வழக்கு?

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
அத்தகு சொல்லின் அருஞ்சிறப் புகளை
இத்தகு மவையில் இனிதாய் உரைப்பேன்

பெயரே வினையே இடையே உரியே
எனநால் வகைமை உடைய தாகும்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
எனவும் நான்கு வகைமைய தாகும்
ஒருசொல் கூறிப் பலபொருள் செய்தலும்
பலசொல் கூறி ஒருபொருள் செய்தலும்
திணைபால் இடமொடு காலம் உணர்த்தலும்
ஆகு பெயரும் வேற்றுமைப் படுத்தலும்
தோகை விரிக்கும் மயிலைப் போலத்
தொகைவிரி எனஇரண் டாக நிற்றலும்
சொல்லாண் மையின் சொக்கும் அழகே!

ஐயன் வள்ளுவன் அழகாய் உரைப்பார்
கேட்டார்ப் பிணிக்கும் தகைமை உடையதும்
கேளாரும் விரும்ப மொழிவதும் சொல்லே

சொல்லுதல் எங்ஙனம் சிறக்கும் என்றால்
சொல்லலின் குற்றம் நீக்கும்போதே
நின்று விளக்கம் வேண்ட விடுத்துக்
குன்றக் கூறலும் குன்றக் கூற
வேண்டிய பொருளை விரித்துக் கூறலும்
தாண்டிய பின்னும் தடுத்து மீண்டும்
கூறிய கூறலும் கொண்டன விடுத்து
மாறு கொள்ளலும் வழுவுடைச் சொல்லை
ஏற்றிக் கூறலும் இடந்தடு மாறலும்
போற்றத் தகாதன பொதித்து வைத்தலும்
ஒன்றை விடுத்து வேறொன்று கூறலும்
தொடங்கும் போது சரியே முடிவைத்
தொடும்போ(து) அழிந்து போதலும் தோன்றும்
சொல்லோ பயக்கா திருத்தலும் ஆகிய
பத்துக் குற்றம் பார்த்து நீக்கிச்
சுவைபடச் சொல்வர் சொல்லேர் உழவர்

பின்னும்

வெல்லும் சொல்லே உலகில் இலையெனச்
சொல்லும் அழகைத் தொகுப்பர் பத்தாம்
சுருங்கக் கூறலும் விளங்க வைத்தலும்
அருஞ்சொல் அறைய இன்பம் பயத்தலும்
நல்ல சொல்லை நாட்டலும் ஓசை
வெல்லம் போலே வேட்கை மிகுத்தலும்
நுண்மையும் நுவலும் முறைமையும் உலகம்
அண்ணுதற் கெளிதாய் அமைதலும் சிறந்த
பொருளைத் தருதலும் பொருள்பொதி சான்றோர்
அருள்வழி வைத்தலும் ஆகிய பத்தே

அவ்வழிச் சொல்லின் அழகை ஆய்ந்து
செவ்வழி செய்வார் செந்தமிழ்ப் புலவோர்
சொற்கள் பலவாய்க் கிளைத்துக் கிளைத்துச்
சொக்க வைக்கும் அழகைக் காண்பீர்
பொருளோ பலவாய்க் கிளைக்கக் கிளைக்கப்
பொருண்மை சிதைந்து புதைந்தே போகும்

சொல்ல வந்த கருத்தை மட்டும்
சொல்ல மெல்ல மறையும் அதனை
அழகை ஏற்றி அலங்கரித் தாலோ
பழகுதற் கினிமை பன்னெடுங் காலம்
அழியா திருக்கும் அதனை எண்ணி
எதனுள் புகுத்தி எப்படிச் சொல்ல
விதமாய் விளையும் உலகில் நிலைக்கும்
என்றாய்ந்(து) உரைத்தவை எழிலார் சொற்கள் 5

வில்லி னின்று பறக்கின்ற
   வீரி யங்கொள் அம்பைப்போல்
சொல்லைத் தேர்ந்து சொக்கிப்போய்ச்
   சுவையாய் உரைக்கும் புலவர்தம்
சொல்லால் இன்பம் கொண்டாடச்
   சுடராய் விளங்கும் உளக்கோயில்
எல்லை இல்லாப் பேரின்பம்
   எல்லாம் சொல்லால் அறிவீரே 6

பொருளில் எங்கே சுவையுளது?
   பொதிந்த பொருளை எடுத்துரைக்க
அருளும் சொல்லே! அஃதன்றி
   ஆக்கம் இல்லை அறிவீரே
மருளும் அருளும் யாவையுமிம்
   மனங்கொள் சொல்லின் துணையாலே
பொருளைத் தேடிச் செல்வோர்க்குப்
   பொருள்இல் பாட்டே முன்தோன்றும் 7

எழுத்தும் சொல்லும் இன்றி
   எப்படிப் பொருளு ரைப்பார்
எழுந்த சுவையா தென்றே
   எண்ணிப் பொருளைப் பார்த்தேன்
எழுந்த யாவும் சொல்லை
   எதிர்க்க வியலா துறையும்
அழுத்திச் சொல்வேன் ஐயா
   அழகு சொல்லே சொல்லே! 8

சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
எப்படி?
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
இப்படிச்
சொல்லை இடமாற்றிப் போட்டுச்
   சுற்றி விடச்செய்தால் போதும்
இல்லை பொருளெங்கே என்பார்
   இறப்பார் பொருள்தேடி நாளும்
சொல்லைச் சீரமைத்து வைத்துப்
   சொக்கும் பொருள்கோளை வைத்துச்
சொல்லின் அரும்பெருமை ஏற்கும்
   சுழலும் புவிநாளும் ஐயா 9

பொருளில் விளங்கும் நயங்களினைப்
   பொதித்தல் சொல்லால் இயன்றிடுமா?
அருள்கூர்ந்(து) இந்தக் கதைகேளீர்
   அடர்ந்த காட்டில் இராமன்தான்
அருளும் குகனின் உள்புகுந்தான்
   அவனைத் தொடர்ந்த பரதன்மேல்
பொருந்தா திருந்து சினங்கொண்டு
   பொங்கும் குகன்சொல் கேட்பீரே 10

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றுஅவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உய்ஞ்சிவர் போய்விடி னாய்க்குக னென்றெனை ஓதாரோ

தகரப் பாட்டுக் கோர்தலைவன்
   தமிழைத் தாங்கி மகிழ்ந்தானே
அகர முதலாய் அவன்வாங்கி
   அகத்தில் ஏற்றி அழகாகப்
புகழும் வண்ணம் கவிசெய்தான்
   புலவன் சொல்லைக் கேட்போமா?
இகழ்தல் அவன்றன் போக்காமே
   இனிமை சேர்க்கும் சொல்லாலே 11

கருக்கூடி அப்பொழுதே பொழியும் மேகம்
   காளமேகம் மதுமேக மயக்கந் தானே
ஒரு கூத்தைக் கேட்டீரோ நச்சுப் பாம்பை
   ஒருகயிறாய் ஆக்கித்தான் பூண்ட நாதன்
தெருத்தெருவாய்ப் பிச்சையெடுத்து உண்ணச் சென்றும்
   தேர்ந்தெடுத்த காளம்மேளம் குஞ்ச ரத்தோ(டு)
இருந்தானே எனவஞ்சப் புகழ்ச்சி செய்தான்
   இதுவன்றோ சொல்வன்மை இன்பம் இன்பம் 12

தாதி தூதோ தீதென்றும்
   தத்தை தூ(து)ஓ தாதென்றும்
தூதி தூதும் ஒன்றென்றும்
   துத்தி தத்தாதே யென்றும்
ஆதி வரதன் அறைந்(து)ஆனார்
   அழகு காள மேகமென
நீதி உரைப்பீர் ஐயாவோ
   நிறைந்த சொல்லே சிறப்பென்று 13

நன்றி நன்றி எனக்கு இந்த
   நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு
நன்றி நன்றி ஈரோட்டுத்
   தமிழச் சங்கப் பேரவைக்கு
நன்றி நன்றி பாலன்ஐயா
   நன்றி நன்றி வரதன்ஐயா
பொன்றும் வரையில் தமிழ்பேசிப்
   பொத்திப் பொத்திக் காப்போமே 14

Oct 14, 2019

சோலை விழா - திருவண்ணாமலை - கவிப்பொழிவு

கவிஞர் தமிழகழ்வன்

தமிழ் வாழ்த்து

மாறாத பேரின்பம் மனஞ்சேர வெனையாளும்
ஆறாகப் பேரருவித் தேராகத் தேருள்ளப்
பேறாகப் பாவலர்தம் பாவாக நாவாகக்
கூறாக வுயிர்தன்னுள் குடிகொள்ளும் தமிழ்வாழி! 1

அவையடக்கம்

நன்கவி நற்கவி நாடியோர் முன்பென்
புன்கவி புகுமெனப் புகுந்தனன்; புலவோர்
இன்கவி இயற்றுவர்; எளிதினில் இயலா(து)
என்கவி இயற்றுவன்? எனைப்பொறுத் தருள்க 2

பைந்தமிழ்ச் சோலை

தமிழண்டா தமிழண்டா என்று சொல்வார்
தமிழ்மொழியை அண்டாவில் தூக்கிப் போட்டுத்
தமிழ்வளர்ப்போம் தமிழ்வளர்ப்போம் என்று சொல்லும்
தமிழறிஞர் பலருண்டு தமிழ்நன் னாட்டில்
அமிழ்தான தமிழ்மொழியின் வளமை யான
அடுக்கடுக்காய்க் காய்நகர்த்தி ஆடும் ஆட்டம்
இமைப்பதுவும் நொடிப்பதுவும் கணக்கா கும்மே
இதையறியான் எங்ஙனந்தான் தமிழ்வளர்ப்பான் 3

எழுத்தசைந்து சீராகித் தளைந்து நிற்கும்
எண்ணியெண்ணி அடிநிற்கும் தொடுத்த மாலை
கழுத்துக்குப் புகழ்சேர்க்கும் கவினைச் சேர்க்கும்
கணக்கறியா தியற்றுவது கவிதை யாமோ?
பழுத்ததமிழ் பாதைமாறிப் போதல் நன்றோ?
பாக்கள்ளைக் குடிப்பதற்குப் பணம்வேண் டும்மோ?
விழுவதுவோ? வீணரெனத் திரிதல் நன்றோ?
விருப்புற்று மரபினிலே கவிதை செய்வோம் 4

எனவெழுந்த பைந்தமிழச் சோலை இஃதே
எழிலாகப் பாவியற்றப் பயிற்சி தந்து
கனவுகளை நிறைவேற்றும் செம்மை செய்யும்
கடிதினிலே பாட்டியற்ற வைக்கும் சந்தம்
மனத்தினிலே பதிப்பிக்கும் வண்ணப் பாட்டு
மனம்பொருந்தப் பாடவைக்கும் மகிழ்ச்சி கூட்டும்
தனனதன தானான தடங்க லின்றித்
தந்துசுவை கூட்டுமுயிர் வாழ்வி னுக்கே 5

வாய்க்க ரும்பது வாய்தவக் கோளது
வாய்த்தி கழ்ந்திரு மாமழை மாமலை
வாய்க்கொ ழுந்தது மாமணி வாய்த்திரு
வாய்ச்சிந் துந்தமிழ் வானெனுஞ் சோலையே! 6
நின்றது நெஞ்சினில் நேயம்; விட்டெனைச்
சென்றது துயர்வழித் தேங்கல்; புலவரின்
மன்றினில் நிற்குமிம் மாயம் செய்தது
கன்றுளங் காட்டிய காவின் இனிமையே 7

இனியன வாகிய ஈயுஞ் சோலையே
நனிவளர் செம்மையை நல்குஞ் சோலையே
பனிநுனி நெடும்பனை பார்க்கும் சோலையே
தனித்திறம் கொண்டுளஞ் சாரும் சோலையே 8

பைந்தமிழ்ச் சோலைப் பாவலர் மாலை
பார்ப்பவர் யாரையும் ஈர்க்கும்
ஐந்திலக் கணத்தின் அகத்தினை யெளிதில்
அறியநல் உய்வழி காட்டும்
நைந்துவி டாது செய்யுளின் திறத்தை
நானிலத் துக்குணர்த் தும்மே
பைந்தமிழ்ச் சோறு பகிர்ந்துணு மாறு
பண்பொடு படைத்துயர் வோமே! 9

நாடு நெஞ்சினை நாடிவி ரைந்தரு
நாவில் நேர்நிரை நாட்டியம் ஆடுயர்
சூடு பாமலர் சுந்தரத் தேனிலா
சுற்றும் பூமியில் கால்பட வேநிலார்
வீடு பேறளி வித்தக மாமறை
விந்தைப் பேரொளிப் பைந்தமி ழாமறை
காடு; செய்யுளச் செய்யுடம் சோலையே
கன்று போலுளம் கொண்டவன் மாலையே! 10

சோலையை ஆற்றுப்படுத்தல்

நற்றமிழ்ப்பாச் சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
"பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?" எனக்கேட்டேன்
"அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக்
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள் பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ முகிழ்ப்பவெலாம் எங்கிருந்து?" 11

பைந்தமிழ்ச்சோலை வாழ்த்து

நல்லதமிழ்ச் சோலையிது நாவாரப் பாடுமிது
சொல்லில்வளம் சேர்க்குமிது சோர்வின்றி உழைக்குமிது
பல்சுவையில் பாட்டிசைக்கும் பாவல்லோர் கூடலிது
பல்கலையாய்ப் பாவளர்க்கும் பைந்தமிழச் சோலையிதே! 12

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே 13

காவலர் பூமி வாழ்க கதிரவன் மதியம் வாழ்க
நாவளர் சொற்கள் வாழ்க நகையுளங் கற்க வாழ்க
காவளர் கவிஞர் வாழ்க கனிந்துள கவிஞர் வாழ்க
பாவலர் மாலை வாழ்க பைந்தமிழ்ச் சோலை வாழ்க 14

ஆழ்தமிழ் கற்று வாழ்க

வாழ்க்கையில் வாய்க்கும் யாவும்
   வகைவகை அறிந்து வாழ்க
தாழ்ச்சிகொள் எண்ணம் வேண்டா
   தரணியே உனக்கா கத்தான்
காழ்ப்புணர் வகன்றோ டட்டும்
   காய்ப்பன காய்ந்தோ டட்டும்
ஆழ்தமிழ் கற்று வாழ்க
   அகமகிழ் வோடு வாழ்க

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9 (என்னதவம் செய்தோம்)

கவியரங்கத் தலைமை :
மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
முன்னிலை :
பாவலர் கருமலைத் தமிழாழன்


தமிழ்வாழ்த்து

எழுதி எழுதிக் குவித்தாலும்
என்றன் ஆவல் தீராதே
விழுது பலவாய் விழுந்திருந்து
வீற்றி ருக்கும் ஆல்போலப்
பழுதே இல்லாப் பைந்தமிழே
பாரில் சிறந்து வாழியவே
விழுமம் துடைக்கும் புலவர்கள்
வெற்றி பெற்று வாழியவே

தலைமை வாழ்த்து

பட்டி தொட்டி எவ்விடத்தும்
பாட்டுத் தொட்டி கட்டியதில்
இட்டுக் கட்டி இன்னிசையை
ஈட்டித் தந்தாய் வாழியவே
சொட்டும் பாக்கள் குடிக்கவந்த
சொக்கிப் போகும் சுரும்பானேன்
கட்டித் தேனே வீரியமாங்
காட்டுத் தேனே வாழியவே

முன்னிலை வாழ்த்து

தமிழாழம் காண்கின்ற ஆவ லாலே
தரணிக்குத் தொண்டியற்றும் நல்ல நோக்கத்(து)
அமிழ்தான செந்தமிழை அகத்தில் ஏற்றி
அழகான பாக்களினால் மகிழ்விப் பாரே
தமிழ்க்கடலில் பலகலங்கள் செலுத்து வாரே
தமிழ்முத்தம் தானெடுக்க எண்ணி ஆழ
அமிழ்ந்திருக்கும் தமிழாழன் ஐயா வாழ்க
அகிலத்தில் நின்பெருமை வாழ்க வாழ்க

அவையடக்கம்

காவளர்த்துக் கனியீயும் கண்கண்ட தெய்வமெனும்
மாவரத ராசர்தம் மாண்புடைய தமிழவையில்
பாவடையைச் செய்தளிக்கப் பகுத்துள்ளம் கொணர்ந்தேனே
பாவளங்கொள் அவையோரே பாவாடை பொறுத்தருள்வீர்

என்னதவம் செய்தோம்

யான்பெரியன் யான்கவிஞன் யானே எல்லாம்
யாதொன்றும் என்னாலே இயலும் என்று
மீன்போலே மின்னுகின்ற வீறு கொண்டு
மேதினியில் கவிஞர்கள் பலரும் உண்டு
நானென்னும் ஆணவத்தில் ஆடு கின்ற
நாவினிக்கத் தான்பாடும் கவிஞர் உண்டு
தான்கொண்ட முயலுக்கு மூன்றே கால்தான்
தடுமாறும் வாழ்வினிலே வீழ்ந்தார் அந்தோ

இந்நிலையில் கற்பதனை மறந்தார் கூடி
இறவாத புகழுடைய இன்ற மிழ்க்குச்
செந்நிலையைச் சேர்க்கின்றோம் என்றே எண்ணிச்
செருக்கோடு சீர்குலைத்தார் தளைம றந்தார்
வந்தெழிலைக் கூட்டுகின்ற தொடைம றந்தார்
வழக்கொழித்தார் வகையின்றிப் புதிதாய்ச் செய்தார்
நந்தமிழின் அருமையினை அறியா தாரால்
நலிவுற்ற செய்யுள்கள் வருந்தும் அன்றே

நைந்திருக்கத் தானாநம் செய்யுள் இந்த
நானிலத்தைத் திருத்துவதோ எவ்வா றென்று
செய்வதறி யாதேங்கிச் சிந்தை செய்தார்
செவ்வழியைக் கண்டறிந்தார் வரத ராசர்
கையற்றுக் கதறுகிற நிலையோ மாறிக்
கனிந்திருக்கும் பூத்திருக்கும் காய்த்தி ருக்கும்
பைந்தமிழச் சோலையிது பிறந்த வாறு
பைங்கனியின் சாறுதனைப் பிழிந்து தந்தார்

பல்வகையாய்ப் பாக்களுண்டு பாக்க ளோடு
படர்ந்திருக்கும் கொடியாக இனங்க ளுண்டு
சொல்வகைமைச் சுவையுண்டு சிந்தும் பாக்கள்
சோர்வகற்றி உயிர்த்திருக்க வைக்கும் சந்தத்(து)
இல்லத்தில் புகுத்தியதன் பின்னே வண்ணம்
எழில்சேர்க்கக் கற்பிப்பார் எல்லை இல்லாச்
செல்வங்கள் குவிந்திருக்கும் குதிரும் உண்டு
செழித்திருக்க என்னதவம் செய்தோம் யாமே
              - பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்