Mar 15, 2014

சிந்து பைரவி

கலிவிருத்தம்

சிரித்துச் சிரித்தே சோகத்தை உள்ளடக்கி
மரித்துப் போவென மனத்தைக் கிடத்திச்
சின்னஞ் சிறிதாம் சிரம மென்னும்
உன்னதக் களமே! உனக்கா ருளரோ?

                          - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

செய்யுளும் வசனகவியும்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அப்பதிகம் இப்பதிகம் ஆகு மவைதான்
    ஆழ்கடலுக் குள்ளாழ்ந்தே மீண்டு வாரேன்
 உப்பதிகம் எப்பதிகம் தோண்டிப் பார்க்கச்
     சப்பதிகம் தப்பதிகம் புதுக்க விதையே
 சொற்பதிகை சொற்பமென நெஞ்சம் சொல்லும்.
     தொற்பதிகச் சொற்களெலாம் தோற்று விடுமோ?
 உப்பதிகம் இனிப்பதிகம் உலகம் கண்ட
      உயர்செய்யுள் உள்ளகமே உவகை எனக்கே!!!

                                       - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

நினைவகல்

தரவு கொச்சகக் கலிப்பா

நினைவகலாள் நினைவகலாய் நினைவலையாய் நிலைநிறுத்தி
நினைவகற்று நினைமுகத்தும் எனப்பகர்ந்தாள்! நினைவகற்ற
முனைவேனோ? முனையானோ? முதலாக மாட்டாளோ?
எனையானே எனையாகான் எனயேனோ ஏனாவேன்?

                                                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

கார்முகில் (Garry Mugil) (பிறந்தநாள் வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

தண்ணமு தத்தமிழ்த் தேன்றேர் செல்வி
எண்ணமு துள்ளநி றைந்தார் கல்வி
முத்துப் பொற்குடந் தைப்பூச் சொற்கோ
கத்து கடலார் கவினொலி யோசை
நேர்ந்திடு யாவையும் சீரறிந் தொழுகி
நேர்படப் பேசிடு நேரிழை யாள்நீ
அரிவை இனிநீ தெரிவை அறிவை
அரிசிவன் ஆதியர் ஆசியும் பெறுவை
நலாஅத் தொடுவாழ் நங்காய் நாளும்
நிலாஅ தொடுமுயர் சீர்பெறு கோளும்

                                 -  தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பிரித்தறிய:
தண் அமுதத் தமிழ்த்தேன் தேர்செல்வி
எண் அமுது உள்ளம் நிறைந்து ஆர்கல்வி
முத்து, பொன்குடம், தைப்பூ, சொற்கோ

(அல்லது பொன், குடந்தைப்பூ)
கத்து கடல் ஆர் கவின் ஒலியோசை
நேர்ந்திடும் யாவையும் சீர் அறிந்து ஒழுகி
நேர்படப் பேசிடும் நேரிழையாள் நீ
அரிவை இனி நீ தெரிவை அறிவை
அரி சிவன் ஆதியர் ஆசியும் பெறுவை
நலாஅத்தொடு வாழ் நங்காய்! நாளும்
நிலாஅ தொடும் உயர்சீர் பெறு கோளும்


பொருள்:
குளிர்ந்த அமுதமாகிய, தேனாகிய தமிழில் தேர்ந்த தமிழ்மகளே! இனிய எண்ணங்கள் நிறைந்த உள்ளம் கொண்டவளே! கல்வியில் சிறந்தவளே! முத்தே! பொன்குடமே! தை மாதப் பூவே! பொன்னே! குடந்தையில் பூக்கும் சிறந்த குறிஞ்சிப் பூவே! பேச்சில் சிறந்தவளே! அலைகடலினின்று எழும் அழகிய இசையானவளே! ஓசையானவளே! எந்த ஒரு செயலையும் பல கோணங்களில் சிந்தித்து - சீர்தூக்கி - ஆராய்ந்து பேசுபவளே! இன்றுமுதல் தெரிவை என்னும் பருவப் பெண்ணாகிறாய்! எந்நாளும் நலத்தொடு வாழ்வாயாக! திருமால், சிவன் முதலானவர்களின்         ஆசியையும், எல்லாக் கோள்களின் நற்பலன்களையும் பெற்று, மிகுந்த புகழோடு வாழ்வாயாக!

கவினொலி யோசை - காண்பார்தம் எண்ணத்திற்கேற்ப, அலைகடல் புலப்படும், சிலர் அந்த அலையில் ஓம் என்னும் பிரணவப் பொருளை உணர்வர், இசையை அறிவர், சிலர் அந்த அலையை இரைச்சல் ஓசையாக
உணர்வர். அதுபோல, உன்னோடு பழகுபவர்தம் மனநிலைக்கு ஏற்றவாறு இனிமை அல்லது இன்னா உறுவர். 


நேரிழை - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண் (இங்குச் சிறப்புகளை அணிகலன்களாக அணிந்த பெண் எனக் கொள்ளலாம்)

சொற்பொருள்:
தண் - குளிர்ந்த,
எண் - எண்ணம்,
ஆர் - நிறைந்த,
கவின் - அழகு
நேரிழையாள் - பெண்,
அரிவை - 24 வயதுவரை உள்ள பருவம்,
தெரிவை - 29 வயதுவரை உள்ள பருவம்,
அறிவை - அறிவாயாக,
அரி - ஹரி - திருமால்,
ஆதிய - முதலான,
பெறுவை - பெறுவாயாக,
நிலா தொடும் - வானுயர்ந்த,
சீர் - புகழ்,
உயர்சீர் பெறு கோள் - நற்பலன்களைத் தரும் கிரக அமைப்புகள்.


இலக்கணக் குறிப்பு:
அமுதத் தமிழ் - உவமைத்தொகை
தமிழ்த்தேன் - உருவகம்
தேர்செல்வி - வினைத்தொகை
ஆர்கல்வி - வினைத்தொகை
கத்துகடல் - வினைத்தொகை
ஒலியோசை - ஒருபொருட்பன்மொழி
கவினொலி ஓசை - முரண்
நலாஅத்தொடு - இசைநிறை அளபெடை
நிலாஅதொடு - இசைநிறை அளபெடை, இரண்டாம் வேற்றுமைத்தொகை

சால்மோனெல்லா

கலிவிருத்தம்

சால்மோ னெல்லா சாமோ?` வென்று
காலெதிர் பார்த்துக் காத்திருக் கின்றாள்
பால்போ லுள்ளப் பான்மை கொண்டவள்
தாள்பணிந் தோடிப் பிழைத்துக் கொள்க.

                                    - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள் :
சால்மோனெல்லா - ஒரு வகை நுண்கிருமி (பாக்டீரியம்)
சாமோ - சாகுமோ
கால் - காலம்
தாள் - பாதம்

தாவரத்தின் தவிப்பு

ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இதயத்து உயிர்க்காற்றுக்கு
ஏங்குவீர்
என்றறிந்தும்
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?

இவ்வுலகத்து இயன்றிடும்
மிதவெப்பம் கூடிட
அதிஅவதிப் படுவது
அறிவீர் ஆயினும்'
ஏனெனை அழிக்கின்றீர் ஏழைகாள்?


எல்லாவற்றுக்கும்
ஏதோ ஒரு வழிகாணும்
எண்ணம் கொண்டிருப்பினும்
எனைமட்டும் கண்டுகொள்ள
ஏன் உங்கள் எண்ணம்
இடம் கொடுக்கவில்லை?


பச்சைப் பசேலெனப்
பார்க்க மட்டும்
பாரில் நான் வேண்டும்
பாவி மக்காள்!

                               - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தன்னம்பிக்கை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிறந்திருபத் தாறாண்டு போன பின்பும்
      புரட்டகரா திப்பழக்கம் போக வில்லை
அறந்தழைக்க யென்வாழ்வில் அமைந்த நண்பர்
     அருங்கூட்டம் எனைச்சூழ்ந்தி ருக்கும் போதில்
மறத்தலைவன் எனப்பெருமை யானும் கொள்வேன்
     வருங்காலத் தேநிற்றேர்த் துகணே ரத்தும்
இறங்குமுக மினிவாரா யெண்ணம் கொண்டு
      எல்லாமும் பெற்றுய்ய இறைய ருள்வான்
!

பிரிவாற்றாமை, வலிமிகாமை

கலிவிருத்தம்

உள்ளம் பெய்தனன் வீடுடல் வில்லென
வுள்ளம் புதைதழும் புள்ளம் புதைத்தழும்
உள்ளம் புதைபிணி யுள்ளம் புதைபிணி
யுள்ளம் பொருள்வலி மிகுமா காண்கண்!
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்


பிரித்தறிய:
உள்ளம்பு எய்தனன் வீடு உடல் வில்லென
உள்ளம் புதைதழும்பு, உள்ளம் புதைத்து அழும்
உள்ளம் புதைபிணி, உள்ளம்பு தைபிணி
உள் அம்பொருள் வலி மிகுமா காண் கண்


பொருள்:
உடலானது வில்லாக இங்கிருக்க, உள்ளத்தை அம்பாக எய்தான். உள்ளத்தில் புதைந்திருக்கும் வடு (காதலால் ஏற்பட்ட வலி), தலைவியிடம் சொல்ல முடியாமல், உள்ளத்திலேயே அக்காதலைப் புதைத்து அழச் செய்கிறது.
தலைவியின் உள்ளமாகிய அம்பால் தைக்கப்பட்டு, அஃது அவனுடைய உள்ளத்தில் புதைந்த நோயாக மாறிவிட்டது;  உள்ளத்தில் இருக்கும் அழகிய அப்பொருள் மேலும் துன்பமுறுமா? வலிமை பெறுமா? கண்ணே! அறிவாயாக!

வீடு - விட்ட, தழும்பு - வடு, பிணி - நோய், வலி - துன்பம், வலிமை. உள்ளம்பொருள் - உள்ளத்திற்கு உரித்தான அழகிய பொருள்

இன்னொரு பொருள்:
புதைதழும்பு, புதைபிணி, தைபிணி - வலி (வல்லினம்) மிகாது
உள்ளம்பொருள் - உட்பொதிந்த அழகிய பொருள்.

எனைத்தேட வைத்தாள்

அடி அந்தாதி

எனைத்தேட வைத்தாள் நிதமும்; 
நிதமும் நினையாமல் நின்று;
நின்ற சொல்லேது? நில்லாமல் போகும்; 
போகும் வழிதான் உணரேன்;
உணவும் உறக்கமுமெப் போது?
போது நெஞ்சில் கரைந்து போனதை;
போனது போனதுதா னெனப்போதனை
எப்போதிணை என்னெஞ்சே இப்போதினை;
தினைமாவுந் தேனுமாய்த் தேர்நெஞ்சம்
தேர்நெஞ்சம் அதுதாங்கும் பூங்கொடி
பூங்கொடி தேடாள் எனை.
                                - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

தமிழ்படி

நேரிசை வெண்பா

ஆதி யெதுவென் றகழ்ந்திடிலேன் அந்தமிழே!
பாதியில் வந்தனன் பற்றுக்கொண் – டோதி
நெறியினின் றுன்முறை மையறியப் புக்கும்
வறியன் வழிமுறை சொல்.                                     1


என்றமிழின் ஆதி யெதுவென்று தானெண்ணிச்
சென்றவுளம் சென்றளவும் சேராமல் – நின்றயர்ந்(து)
அன்று முதலறிந்த அத்தனையும் இங்கில்லை
என்றுதொல் காப்பிய மோது.                                   2

                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்