Jul 23, 2020

நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும்



பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி


“நம்ம கிருட்டிணன் ஆசிரியர் இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று சொல்லுவார். அந்தப் பாட்டின் கடைசி அடி மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ‘பழையதும் பகவானும் ஒன்று’. அந்தப் பாட்டு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் கவிஞர் அர. வெங்கடேசன் அவர்கள். என்னைவிட மூத்தவர். நான் பயின்ற பள்ளியில் எனக்கு முன்னே பயின்று இப்போது ஆசிரியராக இருக்கிறார். அண்மையில் அவரிடம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரே பள்ளியில் வெவ்வேறு காலக் கட்டத்தில் பயின்ற எங்கள் இருவருக்கும் பிடித்த கவிதை என்னும் ஒன்று எங்களுக்குத் தமிழைக் கற்பித்த - தமிழார்வத்தைத் தூண்டிய ஆசிரியரைப் பற்றிச் சிந்திக்க வைத்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள். தமிழ்ப்பற்றின் காரணமாகக் கிருட்டிணன் என்றே அவருடைய பெயரை அவர் எழுதுவதைக் கண்டிருக்கின்றேன். பாடம் நடத்துவதில் அவர் தனி வகை. சுமாராகப் படிக்கும் மாணவர்களைவிட நன்றாகப் படிக்கும் மாணவர்களே அவரிடம் நிறைய அடி வாங்குவர். அவருக்கு வரும் சினத்தை ஆற்ற முடியாமல் எண்ணியெண்ணித் திரும்பத் திரும்ப அடித்தே அவருடைய அரத்தத்து அழுத்த (BP) அளவை ஏற்றிக் கொண்டவர். “உன்னை எல்லாம் போய்வந்து போய்வந்து அடிக்கணும்” என எங்கள் ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.

பள்ளி மாணவர்களுக்குப் பாடம் புரிதல் ஓர் அளவில்தான் இருக்கும். ஆனால் அந்த அளவையும் விஞ்சிப் புரிய வைக்கப் பெருமுயற்சி செய்தவர். எனக்கு ஏழாம் வகுப்பில் தமிழும், எட்டாம் வகுப்பில் கணிதமும் நடத்தியவர். கையெழுத்து முத்துமுத்தாய் இருக்க வேண்டும் என்பார். நன்றாகப் படிக்கும் மாணவனே தவறிழைத்தால் தரையில் தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவுக்கு அவருக்குப் பெருஞ்சினம் வரும். அவருடனான ஒவ்வொரு வகுப்பிலும் அவ்வளவு அச்சத்துடன் அமர்ந்திருப்போம்.



தெய்வத்திரு க.கிருட்டிணன் ஆசிரியர்
  
ஏழாம் வகுப்பில் ஏன்தான் அரிச்சந்திரப் புராணத்தைப் பாடமாக வைத்தார்கள் என்று தெரியவில்லை. காசிக் காண்டத்திலிருந்து பதின்மூன்று பாடல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் அவர் இலக்கணக் குறிப்புச் சொல்லி, விளக்கம் சொல்லிக் கதைசொல்லிப் புரிய வைப்பதற்குள் வகுப்பே முடிந்துவிடும். ஒரு நாளில் ஒரு பாடல் மட்டுமே நடத்த முடியும்.

புத்தகத்தில் பாவகையே குறிப்பிடப்படவில்லை. சேர்த்துச் சேர்த்தெழுதிய கலிவிருத்தங்கள், சந்தக் கலி விருத்தங்கள். பிரித்துப் படித்துப் பொருள் புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதில் இரண்டு பாடல்கள் மனப்பாடப்பகுதி வேறு. முதல் பாடலை நடத்தி முடித்தார். அதன் கடினத் தன்மையைக் கண்டு கவலையுற்ற எங்களை ஆற்ற, ‘இதெல்லாம் கடினமில்லை, நாளை இதைவிடக் கடினமான பாடலைக் கற்பிக்கிறேன்’ என்றார். அடுத்த நாள் அவர் கற்பித்த பாடல் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' – திருப்புகழ்ப் பாடல். அடுத்த இரண்டு நாள்கள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மனப்பாடம் செய்து திங்கட்கிழமை வந்து சொல்ல வேண்டும் என்றார். ‘புத்தகத்தில் இருப்பதையே படிக்க முடியவில்லை. இதெல்லாம் எங்களுக்குத் தேவையா?’ என்று எண்ணிய மாணவப் பருவம் அது.

ஆசிரியர் யாரும் என்னைத் திட்டிவிடக்கூடாது, அடித்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன் நான். அவருடைய அடிக்கு அஞ்சி, அந்த இரு நாள்களும் அப்பாடலை மனப்பாடம் செய்வதற்கே சரியாய்ப் போய்விட்டது.  திங்கட் கிழமை நன்றாக மனப்பாடம் செய்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றேன். ஒவ்வொருவராய் எழுப்பிச் சொல்லச் சொல்லுவார் என்று அஞ்சியே நின்றிருந்தோம். உள்ளே வந்தார். 'மனப்பாடம் செய்தீர்களா?' என்றார். 'ஆம் ஐயா' என்றோம். ‘எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அந்தப் பாடலைச் சொல்லுங்கள்’ என்றார். கும்பலில் கோவிந்தா போட்டோம். எத்தனை பேர் அதை மனப்பாடம் செய்திருந்தனர் என்று தெரியாது. ஆனாலும் சொல்லி முடித்துவிட்டோம்.

சனி, ஞாயிறுகளில் மற்ற பாடங்களைத் தவிர்த்துவிட்டுத் தமிழை மட்டுமே படித்துக் கொண்டிருக்கும் பழக்கம் இப்படித்தான் வந்ததோ? என எண்ணுகிறேன். அந்தத் திருப்புகழ்ப் பாடலையும் சந்தக் கலிவிருத்தப் பாடல்களையும் படிக்கப் படிக்க, அவற்றை மனத்துக்குப் பழக்கப் பழக்கச் செய்யுள்களின் இனிமையை உணர்ந்தேன். ஏழாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட அத்தனை செய்யுள்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன். அது மட்டுமன்றி 'இலக்கணக் குறிப்பு' எனக்கு மிகவும் விருப்பமான பகுதியாக மாறிவிட்டது.

அந்த அரிச்சந்திரப் புராணப் பாடல்களைப் புரிந்துகொண்டு படித்ததிலிருந்து எனக்கும் அதுபோல் பாட்டெழுத வேண்டும் என்று ஆசை வந்தது. எதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வேறு என்ன? பாட்டி வடை சுட்ட கதைதான். இலக்கணம் தெரியாத காலத்தில் நான் எழுதிய முதல் பாடல் அது.

பாட்டியின் வடையைக் காகம் பற்றிக் கொள்ளக்
காட்டுநரி காகத்தைப் பாடச் சொல்லச்
சிந்தித்த காகம் வடையைக் காலிலிட்டுக் கரையத்
தந்திரம் பலிக்கா நரி ஏமாந்தோட.

பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்வது எனக்குப் பிடிக்காத செயல். ஆனாலும் படிக்க வேண்டியிருக்கிறதே என்று கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். அதிலும் செய்யுள் பகுதிக்கான வினா விடைகளை நான் மனப்பாடம் செய்ததில்லை. புத்தகத்தில் கொடுக்கப்படாத வினாக்கள் தேர்வில் கேட்கப்பட்டாலும் என்னால் விடை எழுத முடியும். செய்யுள்களைப் பொருள்புரிந்து மனப்பாடம் செய்வது எக்காலும் மறக்காது என்பது எவ்வளவு உண்மை!

அவ்வளவு தமிழார்வத்தை வளர்க்க அவர் அரும்பாடுபட்டார். பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டுற மொழிதல் பாடலை நடத்தும்போது தானெழுதிய இரட்டுற மொழிதல் பாடலையும் கற்பித்தார். அவர் எழுதிய பாடலின் கடைசி அடியான 'பழையதும் பகவானும் ஒன்று' என்பதைச் சொல்லிக் கவிஞர் அண்ணன் அவர்கள் கேட்டதும் முழுப்பாடலையும் அப்படியே சொன்னேன். அவர் ஒரு கணம் மகிழ்ந்து நின்றார்.

நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும்
பாரில் காலை கரம்தூக்கும் - சோர்வில்
உழன்றிட்டால் தூக்கித் துணைசெய்யும் சோறு
பழையதும் பகவானும் ஒன்று.

சிலவிடங்களில் வெண்டளை பயின்று வரவில்லை.  எனவே இதை நேரிசை வெண்பாவாகக் கொள்ள முடியவில்லை எனினும் வெண்கலிப்பாவாகக் கொள்ளலாம். கவிஞர் அண்ணன் அவர்கள் இதை என்னிடம் கேட்க வேண்டும் என்று எவ்வளவு நாள் எண்ணியிருந்தார் என்று தெரியவில்லை. எனக்கும் இப்பாடல் மறக்கவே இல்லை.

ஏழாம் வகுப்பாவது பரவாயில்லை. எட்டாம் வகுப்பில் கணிதப் பாடம். அடி வாங்காமல் எந்த நாளும் பொழுது போகாது எனச் சொல்லலாம். ஒருமுறை ‘முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்’ என்னவென்று கேட்டார். வகுப்பில் இருந்த யாருக்கும் சரியான விடை தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோண அளவைச் சொல்லி அடிவாங்கி அத்தனை பேரும் வகுப்பிற்கு வெளியில் நின்றது கொடுமை. இதுபோல் பல நிகழ்வுகள் அவ்வாண்டு முழுவதும் அரங்கேறின. முக்கோணத்தைப் பற்றி ஏழாம் வகுப்பில் படித்தோம். ஆனால் எட்டாம் வகுப்பு வருவதற்குள் மறந்துவிட்டோம். முந்தைய வகுப்பில் படித்ததை மறக்காமல் அடுத்த வகுப்புக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எல்லா முந்தைய வகுப்புப் புத்தகங்களையும் எடுத்துப் படிப்பது என் வழக்கமாகிவிட்டது.

கணிதமாகட்டும், தமிழாகட்டும். எந்தப் பாடமாகட்டும். அவர் கையில் எடுத்த்தால் அவற்றை விளக்கிப் புரியவைப்பதில் பெரும் வல்லவர். அவருடைய திறமைக்கு  மிகப்பெரும் புகழை அடைய வேண்டியவர்.

மேலும் நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபோது எனக்கு ஒரு கவிதை எழுத வேண்டி இருந்தது. அதற்காக அவரைப் போய்ப் பார்த்தேன். அதற்குள் நான் ஓரளவுக்குக் கவிதை எழுதக் கற்றிருந்தேன். அவரும் எனக்கு ஒரு கவிதை இயற்றித் தந்தார். அந்தக் கவிதையின் கருத்தையே வைத்து நானும் ஒரு கவிதை இயற்றி அவரிடம் காட்டினேன். உள்ளம் மகிழ்ந்தார்.

எங்கள் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் இப்போது இல்லை. ஆனால் அவருடைய மாணவர்களாகிய நாங்கள் அவருடைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்து வியக்கின்றோம்.

எப்பாட முங்கை எடுத்தாய்ந் தெணமேற்றித்
தப்பா துரைக்கும் தகைமைர்  ஒப்பார்
இலாத பெரியோர்!என் எண்ணம் புகழைச்
சொலாஅ தடங்குமோ? சொல்.

வாழ்க அவர் புகழ்!
  * * *

1 comment:

சரவண வடிவேல்.வே said...

வாழ்க அவர் புகழ்....

Post a Comment