Jul 26, 2020

ஆத்தீகமும் நாத்தீகமும்

பைந்தமிழ்ச் செம்மல் 
தமிழகழ்வன் சுப்பிரமணி


1.       ஆன்மீகமா? அறிவியலா? 
ஆன்மீகமே அறிவியலா? கலப்படமா?

படிக்காத பாமர மனிதனுக்குக் கடவுளின் பெயரால் திணிக்கப்பட்ட அறிவியலே ஆன்மீகம். அறிவியல் என்று அறியப்படாமலேயே முன்னோர்கள் காலங்காலமாய்க் கடைப்பிடித்து வந்த வழியே ஆன்மீக வழி. அவ்வழியில், சிலர் எல்லாம் அறிந்தவராய், “அது அப்படித்தான், இது இப்படித்தான்” என்று தனக்குத்தானே வரையறுத்துக்கொண்டு வழிகாட்டிகளாய் மாறியதன் விளைவு, அறிவியலாகிய ஆன்மீகமும் கலப்படமானது. இக்காலத்தில் கலப்படம் இல்லாத பொருளேது? கலப்படம் செய்வதனால் நன்மையா விளைகிறது? கலப்படம் என்று தெரிந்து, அதன் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற கருத்து மேலெழுந்து தூய நிலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களே மனிதர்கள். அவர்களது எண்ணங்கள் செயல்களாக மாறினவா, மாறவில்லையா என்பது அவரவர்தம் மனத்தைப் பொறுத்தது. இவ்வாறு, ஆன்மீகத்தினுள் உண்மையிலேயே பொதிந்துள்ள அறிவியல் எது? பொய்யாகப் புகுத்தப்பட்டவை எவை என்பது அறிய மிகவும் அரிதானது.

சில எடுத்துக்காட்டுகள்:
·        வேப்பிலையில் மந்திரம் போடுதல்
·        அலகு குத்தி வழிபடுதல்
·        காவடி தூக்குதல்
·        தலையில் தேங்காய் உடைத்தல்
·        மாலை அணிந்து நோன்பிருந்து கடவுளைக் காணச் செல்லுதல்

இப்படியே மதத்தின் பெயரால் நடக்கும் எல்லாச் சடங்குகளுக்கும் காரணம் கற்பித்தல் யாவராலும் இயலும். அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவருடைய மனத்தைப் பொறுத்தது.

2.       உண்மையா? பொய்யா? 
அதனால் என்ன பயன்?

இப்படியே மதத்தின் பெயரால் புனையப்பட்ட புராணக் கதைகள் யாவற்றுக்கும் காரணம் கற்பிக்கவும் முடியும். அவை பொய்யாக இருந்தாலும் மெய்யாக இருந்தாலும், அதன்மூலம் நீ பெறுவது என்ன? அதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்றை உண்மையென்று சொல்ல, ஆதாரம் வேண்டுவோர், ஒன்றைப் பொய்யெனச் சொல்ல என்ன ஆதாரம் தருகிறார்? நம்ப முடியாதவை எல்லாம் பொய்யாகி விடுமா? மனிதனின் அறிவுக்கு எட்டியவை மட்டுமே உண்மையாகுமா? பல அறிவியல் ஆய்வுகளின் தொடக்கக் காலத்தில் கைக்கொட்டிச் சிரித்தவர்கள், அந்த அறிவியல் கண்டுபிடிப்பு உண்மையானதைக் கண்டு வாயை மூடிக்கொண்டிருந்த கதைகளையெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்வதற்கு முன்புவரை, அவையெல்லாம் கற்பனையே பொய்யே என்று சொல்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியலில் எப்படிச் சேர்ப்பது?

இன்றைய வானூர்திகளைக் காணாதவரை, சீவக சிந்தாமணியில் வரும் புஷ்பக விமானத்தைப் பற்றிய செய்தியே கட்டுக்கதை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் பகுத்தறிவுவாதிகளா? அவர்கள் பகுத்தறிந்தது அவ்வளவுதான். தனக்குத் தெரியாத எந்த ஒன்றையும் குறைசொல்வதற்கு யாருக்கும் எவ்வகையிலும் உரிமையில்லை.

நாம் வாழும் தற்காலத்தில் எது அறம், எது சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ளதுபோல், முற்காலத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்த அறம், சட்டம் யாவும் இப்போது இருப்பதைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பகுத்தறிவாகுமா? இதைத்தான் இன்றைய பகுத்தறிவுவாதிகள் குற்றம் கூறி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டில் ஓர் ஆண், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்று சட்டம் இருக்கிறது, இன்னொரு நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தியென்று மட்டுமே வாழ வேண்டும் என்று சட்டம் இருக்கிறது அல்லது மனக் கட்டுப்பாடு இருக்கிறது என்றால், இதில் எது சரி? எது தவறு? சட்டங்கள் எக்காலத்தும், எல்லாவிடத்தும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவரவருக்கு விருப்பமான சட்டத்தை அவரவர்தம் மனமே ஏற்படுத்திக் கொள்கிறது. இங்கும் அப்படித்தான். “நான் நாத்திக வாதி; நான் இப்படித்தான் பேச வேண்டும். இப்படித்தான் பேசுவேன். நான் ஆத்திக வாதி. ஆன்மீகம் என்று சொல்லப்பட்ட எல்லாம் உண்மையென்று சாதிப்பேன்” என்ற கருத்துகள் மேலோங்கிவிட்டன.

3.       சரியும் தவறும்

தான் கொண்ட கொள்கை தவறு என்று தெரிந்த பின்பும், அது தான் கொண்ட கொள்கையாயிற்றே; அதனால் கடைசிவரையில் அப்படித்தான் இருப்பேன் என்ற எண்ணம் தவறானது. அவரவர்தம் கருத்தை வெளியிடுவதில் தவறில்லை. அவரவர்தம் கருத்தே சரியானது. மற்றவர் கருத்தோ தவறானது என்று வாதிடுபவர்களுக்கு, அடுத்தவர் கருத்து எப்போதும் புரியாது. முதலில் காது கொடுத்துக் கேட்க வேண்டும்; பின்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாம் ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது. அது தவறே; இது சரியே என்று எந்த நம்பிக்கையைக் கொண்டு வாதிடுகிறீர்கள்?

4.       பகுத்தறிவு என்றால் என்ன?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு – திருக்குறள்.

பகுத்துப் பார்த்து அறியாமலேயே பகுத்தறிவாளன் என்ற பெயரை யாரும் பெற்றுவிட முடியாது. சில வினாக்களைத் தொடுத்துவிட்டு ஆன்மீக வாதிகளால் பதிலுரைக்க முடியவில்லையே என்பதனால், ஆன்மீகம் பொய்யானது என்று சொல்லிவிட முடியாது. அத்தகைய வினாக்களுக்கான விடைகளை அறிய முயலாதவர்கள் என்று அவர்களைக் குறைசொல்ல முடியாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. ஆன்மீகத்தின் பெயரால் பல பொய்யான கதைகளைச் சொல்லி நம்ப வைப்பதில் அவர்களுக்கு என்ன நிகழ்கிறது என எண்ணிப் பார்க்க வேண்டும். பகுத்தறிந்து வாழ்வது மட்டுமே வாழ்க்கையா? பகுத்தறியும் திறன் இல்லாமல் மனித இனம் இருந்திருந்தால் இந்தச் சண்டைகளுக்கே இடமில்லை.

தாம் வினவும் வினாக்களுக்கு, மற்றவர் பதிலளிக்கவில்லையென்றால், தான் அதற்கான விடையைத் தர வேண்டும். உடனே அது பொய் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒருவன் செய்வது உனக்குப் பிடிக்கவில்லையா? அவன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டும் அவசியம் உனக்கு இல்லை. நீ உன் வேலையைப் பார்க்கலாம். அவன் செய்வதால் ஏற்படும் நன்மையும் தீமையும் அவனாலேயே நிகழும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று பகுத்துப் பார்க்காமலா கணியன் பூங்குன்றனார் சொன்னார்?

இவ்வாறு பகுத்தறிவாளர்கள் என்று சொல்பவர்கள் எல்லாவற்றையும் பகுத்துப் பார்த்துத் தெரிந்துகொண்டவர்களும் அல்லர். ஆன்மீக வாதிகள் என்று சொல்பவர்கள் பகுத்துப் பார்க்காமல் வாழ்பவர்களும் அல்லர்.

5.       தொழில்நுட்ப வழியாக ஒரு செய்தி

இப்போது ஒரு programming language (நிரல்)ஐ எடுத்துக் கொள்வோம். ஒரு சிலருக்கு அந்த நிரலின் வெளியீடு (output) மட்டுமே தெரியும். ஒரு சிலருக்கு அந்த வெளியீடு எப்படி வருகிறது என்று தெரியும். இன்னும் சிலருக்கு அந்த வெளியீட்டைக் கொண்டு வருவதற்கான நிரலும் தெரியும். இன்னும் சிலருக்கு அந்த நிரலை எழுதுவதற்கான மூல நிரலும் தெரியும். இன்னும் சிலருக்கு அந்த மூல நிரலை வரையறுத்த நிரலின் ஆணி வேரும் தெரியும். மனிதன் கண்டுபிடித்த ஒரு பொருளுக்குள்ளேயே இவ்வளவு நுட்பங்களைக் கொணர முடியுமென்றால், இவ்வாறு இயற்கையின் தன்மையை – நுட்பத்தை உணர்ந்தவர்களின் பல்வேறு நிலைகளைப் பகுத்தறியாமலேயே குறைசொல்வது தவறேயாகும்.

6.       கிணற்றுத் தவளை

கிணற்றில் இருக்கும் தவளைக்குக் கடலைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது; அது கடலைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அதனால் தன் கிணற்றைவிடப் பெரியது என்று இருக்கவே முடியாது என்ற கருத்தை உடையதாயிருக்கும். கடலைக் கண்ட தவளை, அந்தக் கிணற்றுத் தவளையிடம், கடலை வந்து பார் என்று சொல்ல முடியும்; ஆனால், அந்தக் கிணற்றுத் தவளை மனது வைத்தால் மட்டுமே, தன் கிணற்றைவிட்டு வெளியே வர, மனது வைத்தால் மட்டுமே, அது அடுத்தடுத்து நிலங்களைத் தாவித் தாவிப் பலவித நிலப்பரப்புகளையும் பற்றிய எண்ணங்களையும் மனத்திலேற்றிக் கடந்துவந்து கடலையும் காண முடியும். 

ஆன்மீகம் எல்லாம் பொய் என்று சொல்வது பகுத்தறிவா? இல்லை. பகுத்து அறிந்து இருந்தால், அதிலுள்ள உண்மைகளையும் மறுக்க முடியாது; பொய்களையும் மறுக்க முடியாது. ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளாததாலேயே ஒருவன் பகுத்தறிவாளன் ஆகிவிட முடியாது.

7.       கடவுள் என்றால் என்ன?

கடவுளைப் பற்றி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அஃது அவனது அறிவின் அளவைப் பொறுத்தது அல்லது அவனது அறியாமையைப் பொறுத்தது.

ஆதியில் மனிதர்கள் இயற்கையைக் கடவுளாக வழிபட்டனர். அதிலிருந்தே வழிபடுவதற்குரிய தெய்வங்கள் காலங்காலமாக மருவிக் குலதெய்வங்களில் வந்து நின்றது. உண்மையில் சொல்லப் போனால், இந்தக் குல தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாய் வாழ்ந்து கடவுளாய் வணங்கப்படுபவர்கள்.

கடவுள் இல்லை; ஆனால் கடவுள் ஏன் வேண்டும்? கடவுள் இல்லை என்று வாதிடுவதைவிட, எந்தக் கடவுள் இல்லை என்று வாதிடுவதே பகுத்தறிவு. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை, கடவுளரை இவ்வாறு வரையறுக்க முடியும். அதை யாராலும் மறுக்க முடியாது.

è  உன்னுடைய துன்பத்தை உன்னால் நீக்க முடியாத போது, மற்றொருவன் அதனை நீக்கி உன்னை வாழ வைத்தால் அவன் கடவுள்.
è  தன்னிலை திரிந்து, நிம்மதியற்று, விரக்தியுற்று வாழும் உன்னை ஒருவன் உன்னுடைய நிலையினும் மேன்மையான ஒரு நிலைக்குக் கொண்டுவந்து வாழ வைப்பானேயானால் அவன் கடவுள்.
è  இதுவரை நீ அறியாத ஒன்றை, எளிதில் எண்ணமாக – சொல்லாக - செயலாக ஒருவன் மாற்றி, உன்னை வியப்பில் ஆழ்த்துவானேயானால் அவன் கடவுள்.
è  நீ குழந்தையாக இருக்கும்போது, உன்னுடைய ஒவ்வொரு நிலையிலும் உன்னைப் பாதுகாத்து வளர்த்து வந்து, உன்னைச் சுயமாய் வாழ வைக்க ஒருவனால் முடியும் என்றால் அவன் கடவுள்.
è  ஒன்றைப் பெறுவதனால் உன் நிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு உனக்கு மகிழ்ச்சி பிறக்குமானால், அதைப் பெறுவதற்கான மூலமாக இருந்த ஒவ்வொருவனும் கடவுள்.

‘அவரால்தான் நீ வாழ்கிறாய். அதனால் அவர் உனக்குக் கடவுள் போன்றவர்’ என்று கடவுளோடு ஒருவரை ஒப்பிட்டுச் சொல்லும்போது, கடவுள் என்ற ஒன்றை மனத்தில் மிக உயர்ந்த மதிப்புக் கொடுத்துக் கற்பனை செய்திருந்தால் மட்டுமே, அந்தக் கடவுள் போன்றவருக்கும் அந்த மதிப்பையும் உன்னால் கொடுக்க முடியும். என்னதான் ஒரு மனிதரை மாமனிதர், மாமாமனிதர் என்று எத்தனைச் சொற்களைக் கொண்டு மதித்தாலும், காண முடியாத ஒன்றே மனிதனின் அறிவுக்கு எட்டாத ஒன்றே கடவுளாகும் என்று மனம் அமைதியுறும். அப்போதுதான் கடவுளோடு ஒப்புமை ஏற்படுத்த முடியும்.

இந்தச் சிறிய வாழ்க்கைக் காலத்துக்குள் எத்தனை எத்தனை வாதங்கள்.  கடவுளென்று ஒன்றை வணங்குவதால் மன நிறைவு, மன அமைதி கிடைக்கப்பெற்றால் - இன்னும் பல நன்மைகள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றதென்றால் அதில் தவறில்லை. கற்பனைக்கு எட்டாத அந்தக் கடவுள் கொள்கையெல்லாம் வேண்டாமப்பா என்று சொல்பவர்களும் இருக்கட்டுமே. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து பார்க்க விரும்பினால், அதை ஏன் தடுக்க வேண்டும்? கடவுள் கொள்கையோடு வாழ்ந்தால்தான் எனக்கு மன நிறைவு என்று சொல்பவர்கள் அப்படியே வாழட்டுமே. அதை ஏன் தடுக்க வேண்டும்?

No comments:

Post a Comment