Jul 26, 2020

மணிக்குறள் - 4. வறுமை ஒழிக

வறுமை ஒழிக்கும் வகைசெய வாழ்வில்
வெறுமை தவிர்த்து விடு                                  31

வெற்றுப் பயலென வேகுஞ்சொல் கேளாதே
உற்ற வறுமை ஒழி                                              32

ஓடி உழைத்த உயர்செல்வம் ஓடுமுன்
நாடி நரம்பில் மது                                               33

எதுவரினும் இல்லையென் றாகும் அழிக்கும்
மதுவுக்(கு) அடிமை மனம்                               34

கடன்பட்டுக் கட்டு(ம்)வழி காணான் உடைமை
உடன்படா(து) ஓடும் ஒழிந்து                          35

ஆக்கும் அளவறிந்(து) ஆக்கியன துய்த்தலே
நீக்கும் வறுமை நிலை                                       36

சிக்கனம் வேண்டும் சிறுதொகை கைக்கொளினும்
சிக்கலே இல்லை சிறப்பு                                   37

படைத்த பெருஞ்செல்வம் பார்ப்ப(து) அறியாய்!
மடையுடை வெள்ள மழை                                38

குன்றன்ன செல்வமும் குன்றும் பொறுப்பின்றி
நின்றழிக்க நீபிறந் தாய்?                                  39

கல்வி பெருஞ்செல்வம் காணா வறுமைக்கு
நல்விதையை நெஞ்சில் நடு                            40

No comments:

Post a Comment