Jun 17, 2019

சங்க காலக் காதலும் எங்கள் காலக் காதலும் - கவியரங்கம்

கவியரங்கத் தலைமை 
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்த்தாய் வேண்டல்

தெங்கிள நீராய்த் தித்தித் திருக்கும் 
    தண்ணிய செம்மொழியே
திங்களாய்ப் பாரில் தண்மை யொளியைத் 
    திகழ்ந்திடச் செய்பவளே
அங்கைக ளெடுக்குஞ் செயல்கள் விளங்க 
    அருள்மழை தான்பொழிவாய்
பொங்குநல் லுள்ளம் போகும் வழியின் 
    பொருளெனத் தான்வருவாய்!

முனைவர் அர. விவேகானந்தனார் வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை பொலிவாய் நாளும் 
   பல்வகை வளம்பரப்பச்
செய்தமி ழாலே சிந்தை மகிழத் 
   தீங்கனி தாமீய
உய்வழி காட்டும் உயர்ந்த நெறியால் 
   உளங்கவர் உத்தமராம்
மெய்வழி விவேகா னந்தர் வாழ்க 
   மேவிய புகழோடே!

அவையடக்கம்

தேமொழி பாடத் தேடி வந்தேன் 
   தேர்வில் தூங்கிவிழும்
ஆமொழுங் கில்லா அறியா தவனாய் 
   அவையை நாடிவந்தேன்
தூமொழி யாக விளங்க வேண்டித் 
    தோய்ந்த சொல்லாலே
யாமொழி வேனோ? குற்றம் பொறுப்பீர் 
    யாதென் றெனக்குரைப்பீர்!

தொடக்கக் கவிதை

எங்கும் இயற்கை வளங்கொஞ்ச 
   எதிலும் இயற்கை மணம்வீசப்
பொங்கும் உளத்தால் தான்மகிழ்ந்து 
   புதுமை புகுத்தி அறிவியலும்
அங்கங் கேதான் புதைத்துவைத்தார் 
   அழகிய தமிழால் அவையியற்றி
எங்கும் தமிழைத் தான்பரப்பி 
   இனிமை யோடு வாழ்ந்திருந்தார்

சங்க காலத் தமிழர்கள் 
   சார்ந்த இயற்கை தனைப்போற்றிப்
பங்கு பிரித்தார் நிலமைந்தா
ம்
  பழகிய பூவைத் திணையென்றார்
அங்கங் கேகாண் பொருட்களினை 
   அழகாய் அவற்றுக்(கு) அடுக்கிவைத்தார்
இங்ங னந்தான் இயற்கையினோ(டு) 
   இயைந்த வாழ்வு வாழ்ந்தாரே

குறிஞ்சி என்றார் புணர்ந்திருந்தார் 
   கூட்ட மாக நிரைமேய்க்கும்
குறியாம் முல்லை காத்திருந்தார் 
   குலத்தாள் குடியி ருக்கையிலே
நெறியி லாது திரிந்தவனால் 
   நெருடும் ஊடல் மருதந்தான்
அறிவீர் இரங்கல் நெய்தலிலே 
   அவலம் பிரிதல் பாலையிலே

எங்கள் காலம் இணையத்தில் 
   எளிதாய்க் காதல் வளர்க்கிறதே
இங்கே எண்ணும் வேகத்தில் 
   எடுத்துச் சொல்ல முடிகிறதே
மங்காக் காதல் காலத்தால் 
   மாற்றம் கொண்ட வையெண்ணி
இங்கே உரைக்க ஈரிருவர் 
   எழுந்தார் அவர்சொல் கேட்போமே

1. ஜெய்சங்கர் ஐயா

செம்மொழித் தாயைப் போற்றித் 
   தென்னகப் பெருமை யாவும்
மும்மழை போலே வந்து 
   முகிழ்த்திரு சொல்லால் பெய்து
செம்மையாய்த் தமிழைப் பாடும் 
   ஜெய்சங்கர் ஐயா வருக
இம்மையில் இன்பம் கூட்டும் 
   இன்கவி தருக தருக

பெருமை தமிழ்க்குத் தேடியளி 
   பெரிய ஆசா னாய்த்திகழும்
திருவா ளர்க்கு வாழ்த்துரைப்பேன் 
   திறமை யாவும் தான்திரட்டி
அருமை யான நடையினிலே 
   அழகாய்க் கவிதை தான்செய்தார்
இருமை யுலகும் இவர்புகழை 
   எண்ணி வியக்கும் வாழியவே!

2. இரேவதி முருகதாசு ஐயா

படைக்கும் கவிதை ஒவ்வொன்றும் 
   பச்சை மரத்துப் பட்டாணி
தடைக்கல் தகர்த்துத் தடமாகத் 
   தாங்கும் சொற்கள் தேர்வாழ்க்கை
இடைஞ்சல் எதுவும் நெருங்கிடுமா? 
   இரேவதி முருக தாசையா
மடையைத் திறக்க வாருங்கள் 
   வாய்பார்த் திருப்போம் ஆசையா

அடடா அடடா இதுகவிதை 
   அறியா தவர்க்கும் இதுபுரியும்
தொடடா எல்லை என்றுள்ளம் 
   தொட்டுப் பார்க்கும் செங்கவிதை
அடையான் வீட்டுப் பேற்றின்பம் 
   அடைவான் அழகாய்க் கவிதந்தீர்
மடையைத் திறந்த சொற்களுக்கு 
   மகுடம் சூட்டி வாழ்த்துவமே

3. அமலா அம்மா

தமிழால்தான் தழைப்போம் என்று 
   தகுமாற்றை எடுத்துக் காட்டும்
தமிழ்த்தேனீ! தமிழே மூச்சாய்த் 
   தாங்குதலை எண்ணி எண்ணி
அமிழ்தனைய கவிதை செய்யும் 
   அமலாம்மா வருக வருக
குமிழுடைத்துக் குவல யத்துக் 
   கொடுப்பீரே கவிதை முத்தே

முத்துக் கவிதை நயத்தோடு 
   முகிழ்ந்த கவிதை பன்மடங்கு
சத்துக் கவிதை சரித்திரத்தைச் 
   சாற்றும் கவிதை தமிழுள்ளச்
சொத்துக் கவிதை சுகமளிக்கும் 
   சொக்க வைக்கும் கவிதையிது
வித்துக் கவிதை தனைத்தந்தீர் 
   வியந்தே உலகம் வாழ்த்திடுமே

4. மோகன் ஐயா
எண்ணத் தெழுந்த முத்துகளை 
   எளிய தமிழில் ஏற்றிவைத்துப்
பண்ணுக் கேற்பப் பெய்ததற்குப் 
   பட்டங் கட்டிப் பார்ப்பதுடன்
வண்ணம் தந்து வடிவமைத்து 
   வனப்புக் கொஞ்சத் தருவாரே
அண்ணல் மோகனத் தமிழ்நெஞ்சர் 
   ஐயா வருக கவிதருக

மின்னும் கவிதை மோகனத்தால் 
   மிரட்டும் கவிதை சொல்நயத்தால்
கன்னல் கவிதை கருத்துகளைக் 
   கருவாய்த் தாங்கும் கனிக்கவிதை
பொன்னும் பொருளும் ஈடாகாப் 
   போற்றற் குரிய நற்கவவிதை
இன்னல் நீக்கும் கவிதந்தீர் 
    இனிமை யோடு வாழியவே!

முடிவு கவிதை
காலை மாலையென் றறியாது 
   காதல் மொழியினில் உளகாள்வர்
சோலை போலவர் மனமகிழ்ந்து 
   சொக்கிக் காதலிப் பார்பாரீர்
காலம் மாறியும் மாறாத 
   காதல் மொழியினைக் கேளுங்கள்
கோலம் மாறியும் மாறாது 
   கொள்ளும் காதலைப் பாருங்கள்

சார்த லுக்காய்க் காத்திருப்பார் 
   சங்க காலக் காதலர்கள்
ஊரென் சொல்லும் உறவுகளும் 
   உரைப்ப தென்னை எனநினைக்கும்
பேரறி யேனே என்பாளே 
   பேதை யவனுக் காயேங்கி
ஊரறி யாமல் உடனேகி 
   ஒன்றி வாழ்வார் காதலரே

கடிதினில் காதல் வந்திடுமே 
   கருதி யவனை யுளங்கொள்வாள்
அடிசுடும் பாதம் அதுகாணாது 
   அவனோடு ஏகினள் அவளெங்கே
அடிசுட நடந்து தாயேங்கி 
   அவளைத் தேடிச் செல்வாளே
மடிச்சுமந் தாளின் மனக்கலக்கம் 
   மயக்கும் துயரம் தனைத்தருமே

காதல் நிகழும் களமெண்ணிக் 
   கணக்காய் வாழ்ந்தார் அக்காலம்
ஏதம் இல்லாக் காதலுக்காய் 
   ஏங்கி நிற்பார் எக்காலும்
காதங் காத மாய்ப்போகும் 
   கணக்கும் உள்ள(து) எக்காலும்
காதல் மட்டும் மாறாதே 
   காலம் மாறிப் போனாலும்

Jun 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… – 4

பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

தமிழ்ப்பற்றுடையோரே! வணக்கம்!

இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளில் மொழி முதலில் அமையும் எழுத்துகள், மொழியிடையில் அமையும் மெய்யெழுத்துகள் (மெய்ம்மயக்கம்), மொழியீற்றில் அமையும் எழுத்துகள் பற்றிப் பார்த்தோம். இவற்றால் ஒருவாறு சொற்கள் தமிழில் எவ்வாறு அமையும் என்பதையும் எவையெல்லாம் பிழையாகும் என்பதையும் அறிந்தோம்.

இப்பகுதியில் வடசொற்கள் தமிழில் வந்து அமையும் போது எவ்வாறெல்லாம் திரியும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வடசொற்கள் தமிழில் எப்போது வரும்? வடமொழிக் காப்பியங்களைத் தமிழுக்குப் பெயர்க்கும்போது அம்மொழிப் பெயர்களைத் தமிழில் எழுத, வடசொல்லாக்கம் உதவும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் இக்காப்பியங்களின் தாக்கம் ஏற்படும்போது அவற்றைத் தமிழ்ப்படுத்திச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது தமிழுக்குப் பெருந்தொண்டாகும்.

எடுத்துக்காட்டாக, இராமாயணம், மகாபாரதம் முதலிய காப்பியங்கள் தமிழில் பெயர்க்கப்பட்ட போது அவற்றை இயற்றிய புலவர்கள் தமிழெழுத்து ஒலிகளுக்கு ஏற்றவாறு சொற்களை அமைத்துத் தந்தனர். ஆனால், பிற்காலத்தில் வடசொற்களின் தாக்கம் தமிழில் நிறைந்துவிட்டது. அது தவறு என்று உணராதவர்களாலும், சமற்கிருதம் படித்த சிலர் அதைத் தேவபாடை என்று கதை கட்டி விட்டதாலும், மக்களின் பயன்பாட்டில் எளிதாக அச்சொற்கள் புகுந்துவிட்டன. அதுவும் வடசொற்களை எழுதுவதற் கென்றே சில எழுத்துகளை உட்புகுத்தும் செயல்களும் நடந்தேறின. ஆனாலும் நந்தமிழ் இலக்கணம் அவற்றை நீக்கித் தமிழைக் கட்டிக்காக்கப் பெரிதும் உதவுகிறது.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்றார் தொல்காப்பியர். அஃதாவது, செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகி வரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலிகளை நீக்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியோடு புணர்ந்து அமையும் சொற்களாகும்.

நன்னூலார் இன்னும் ஒருபடி மேலே போய் அந்நூற்பாவை விரித்து எந்தெந்த வடவெழுத்துகளை எந்தெந்தத் தமிழெழுத்துகளாக மாற்றலாம் என்று ஒரு பட்டியலே போட்டுவிட்டார். அவர்வழி நின்று இவ்வடசொல்லாக்கத்தைக் கற்போம்.

நன்னூலார் காலத்தில் ஆரிய மொழியில் 16 உயிரெழுத்துகள், 37 மெய்யெழுத்துகள் என மொத்தம் 53 எழுத்துகள் உண்டு. தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொதுவான ஒலிப்பு உடைய எழுத்துகள் தமிழ் எழுத்துருவிலும், ஆரியத்துக்கு மட்டுமே அமைந்த ஒலிப்புடைய எழுத்துகள் இலத்தீன் எழுத்துருவிலும் கீழே குறிக்கப் பெற்றுள்ளன.

உயிரெழுத்துகள்
1
2
3
4
5
6
7
(r/ru)
8
(r/ruu)
9
Lu
10
luu
11
12
13
14
15
Am
16
ah



மெய்யெழுத்துகள்
1

1
2
kha
3
ga
4
gha
5
2

6
7
chha
8
ja
9
jha
10
3

11
12
tta
13
da
14
dda
15
4

16
17
ttha
18
dha
19
ddha
20
5

21
22
pha
23
ba
24
bha
25
6

26
27
28
29
30
sa
7

31
Sha
32
ssa
33
ha
34
35
Ksha
8

36
shka
37
Shpa





உயிரெழுத்துகளில் தமிழுக்கு உரியவையல்லாத எழுத்துகள் ஆறும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப் பெறும்.

அவற்றுள் ஏழாம் உயிரெழுத்து இகரமாகவும் இருவாகவும் திரியும்.

rshabam – இடபம்,
mrgam - மிருகம்.

மெய்யெழுத்துகளில் தமிழுக்கு உரியவை யல்லாத 22 எழுத்துகளும் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்பத் திரிந்து வழங்கப்பெறும்.

முதல் வரிசையில் இடைநின்ற மூன்று எழுத்துகள், அஃதாவது 2, 3, 4 ஆகிய எழுத்துகள் முதலாம் எழுத்தாகத் திரியும்.

Sakhi – சகி
Naaga – நாகம்
Moha - மோகம்

இது போன்றே 2, 3, 4, 5-ஆம் வரிசைகளில் அமைந்த எழுத்துகள் திரியும்.

சலவாதி, விசயம் சருச்சரை
பீடம், சடம், கூடம்
தலம், தினம், தரை
பலம், பந்தம், பாரம்

அவற்றுள் எட்டாம் மெய்யெழுத்து மொழியிடையில் யகரமாகவும் திரியும்.

Pankajam - பங்கயம்.

முப்பதாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் யகரமாகவும் திரியும்.

Sankaran - சங்கரன்,
Pasam - பாசம்,
Desam - தேயம்.

முப்பத்தொன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையிலும் கடையிலும் டகரமாகவும் திரியும்.

Shanmuga - சண்முகன்,
Visham - விடம்,
Bashai - பாடை

முப்பத்திரண்டாம் மெய்யெழுத்து, மொழி முதலில் சகரமாகவும் இடையில் சகரமாகவும் தகரமாகவும் திரியும்.

Ssabha - சபை
Vassam - வாசம்,
Maassam - மாதம்.

முப்பத்து மூன்றாம் மெய்யெழுத்து, மொழி முதலில் அகரமாகவும் இடையிலும் கடையிலும் கரமாகவும் திரியும்.

Haran - அரன்,
Moha - மோகம்,
Mahi - மகி

முப்பத்தைந்தாம் மெய் இரண்டு ககரமாகத் திரியும்.

Paksha - பக்கம்.
Ksheera - கீரம்.

முப்பத்து மூன்றாம் மெய் மொழிக்கு முதலில் அகரமாகத் திரியும் என்றல் பொருந்தாது; கெடும் என்றலே பொருந்தும், அரன், ஆடகம், இமம், ஏரம்பன், ஓமம், ஒளத்திரி என வரும். இவைகளிலே h எனும் மெய் கெட, அம் மெய் மேல் ஏறி நின்ற உயிர் நிற்றல் காண்க.

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது ஆகார ஈற்றுச் சொற்களை ஐகார ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல்: ஆஈறு ஐயும்.

அகல்யா - அகலிகை
அம்பா - அம்பை
அம்பாலிகா - அம்பாலிகை
அம்பிகா - அம்பிகை
ஆருத்ரா - ஆதிரை
ஊர்மிளா - ஊர்மிளை
குணமாலா - குணமாலை
கோசலா - கோசலை
சபா - சபை
சீதா - சீதை
சுபத்ரா - சுபத்திரை
சுமித்ரா - சுமித்திரை
சூர்ப்பனகா - சூர்ப்பனகை
தாடகா - தாடகை
தேவசேனா - தேவசேனை
ப்ரியா - பிரியை
மாலா - மாலை
மிதிலா - மிதிலை
மேனகா - மேனகை
யசோதா - யசோதை
ரம்பா - அரம்பை
ராதா - இராதை
லங்கா - இலங்கை
விசயா – விசயை

வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும்போது, ஈகார ஈற்றுச் சொற்களை இகர ஈற்றுச் சொற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்னூல் : ஈஈறு இகரமும்.

மாதுரீ - மாதுரி
மாலதீ - மாலதி
த்ரௌபதீ - திரௌபதி
தில்லீ - தில்லி
பாஞ்சாலீ - பாஞ்சாலி
மைதிலீ - மைதிலி

(தொடரும்)

May 15, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி - 3

தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழி இறுதி எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழி இறுதி எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

சொற்களின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.

1.            உயிரெழுத்துகள்

             ஒளகாரம் தவிர மற்ற 11 உயிர்களும் மொழி ஈறாக அமையும். அவற்றுள்

•             நெடில் எழுத்துகள் தனித்து (ஓரெழுத்து ஒருமொழியாய்) ஈறாகும். எ.கா: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ.

•             குறில் எழுத்துகள் அளபெடையில் ஈறாகும். எ.கா: கடாஅ, குரீஇ, ஆடூஉ, நசைஇ, என்னேஎ, அதோஒ.

             ஒளகாரம் பெயராகவும், வினையாகவும் வாராது குறிப்பிடைச் சொல்லாக மொழி ஈறாக அமையும். எ.கா: ஒள.

2.            மெய்யெழுத்துகள்

             மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துகள் மொழி ஈறாய் அமையும். எ.கா: கண், அறம், மன்னன், சேய், சேர், செல், ஆழ், ஆள்.

             ஞகரப் புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாக வரும்.  எ.கா. உரிஞ் (உரியும் தோல்).

             நகரப் புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும். எ.கா. பொருந் (பொருத்திக்காட்டு), வெரிந் (முதுகு).

             வகரப் புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும். எ.கா. அவ், இவ், உவ், தெவ் (பகை).

             னகரப் புள்ளியை ஈறாக உடைய (ஈரெழுத்தொரு மொழியல்லாத) தொடர் மொழிகளுள், மகர ஈற்றுத் தொடர்மொழிகளாக மயங்குதலினின்று வரையறுக்கப் பெற்றவை அஃறிணைப் பொருள்மேல் கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் ஆகும். அவை எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என்பன.

             மெய்யெழுத்துகளில் க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய ஏழு எழுத்துகள் சொற்களில் ஈற்றெழுத்தாக அமையா. எனவே இவ்வெழுத்துகளை ஈறாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது திருத்தி எழுத வேண்டும். எ.கா. தீபக் - தீபன், தீபகன்; நாயக் – நாயகன்; மார்க் – மார்க்கு; மார்ச் – மார்ச்சு; ஆகஸ்ட் – ஆகத்து; நாத் – நாதன்; வினோத் - விநோதன்; பிரதீப் – பிரதீபன்.

3.            உயிர்மெய்யெழுத்துகள்

             ஒளகாரம் ககர, வகர மெய்களோடு மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: கௌ, வெள.

             எகரம், மெய்யுடன் கூடி ஈறாகாது. கன்னடம் தமிழோடு இவ்விதியில் வேறுபடுகிறது எனலாம். கன்னடத்தில் பல சொற்களில் எகரம் மெய்யோடு கூடி மொழி ஈறாய் அமையும். எ.கா: தாவரெ கெரெ (ತಾವರೆ ಕೆರೆ) - தாமரை ஏரி; ஹலெ (ಹಳೆ)  - பழைய; ஹொகெ (ಹೊಗೆ) – புகை.

             ஒகரம் நகர மெய்யுடன் மட்டும் கூடி மொழி ஈறாகும். எ.கா: நொ, நொக்கொற்றா.

             ஏகார ஓகாரங்கள் ஞகர மெய்யோடு கூடி ஈறாதல் இல்லை. எ.கா. உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ - இவை எச்சமும், தொழிற்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன.  உரிஞோ  என்பது  'கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க.

             உகர ஊகாரங்கள் நகர, வகர மெய்களோடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களோடு கூடி ஈறாகும். எ.கா. நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு. நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ.
எனில் கதவு, வரவு, செலவு என்பவை எவ்வாறு வரும்? அவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். எனில் இவை வகர ஈறா? அன்று. அங்கே நிற்கும் வகரமெய், உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் ஆகும்.

             திரிபின்றி முற்றியலுகரமாக வரும் சகர உகரம் (சு) இரண்டு ஆகும். அவை உசு, முசு என்பன. பசு, வசு முதலியவை ஆரியச் சொற்கள். அரசு, முரசு என்றாற்போல வரும்  ஏனையவை,  புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற் கேற்பன.

             முற்றியலுகரமாக வரும் பகர உகரச் சொல் ஒன்றே. அஃது தொழிற்பெயர், ஏவல்வினை ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மையுடையதாகும். எ.கா: 
•             தபு - நீதபு! எனவரும். த = கெடுவாயாக! 
•             பெயராயின் தவறு என்பது பொருளாம். அது இக்காலத்துத் ‘தப்பு’ என வழங்கும்.

             இதுகாறும் விதந்து கூறப்பட்ட ஒள, எ, ஓ, ஏ, ஒ, உ, ஊ என்பவை தவிர்ந்த அ, ஆ, இ, ஈ, ஐ ஆகிய ஐந்து உயிர்களும் ஙகரம் தவிர்ந்த எல்லா மெய்களோடும் கூடி ஈறாதற்குக் குறைவில.

             மொழிக்கு ஈறாகா உயிர்மெய்களும், ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண் ஈறாக நின்று புணரும். எ.கா. நுப்பெரிது, வுச்சிறிது, ஙக்களைந்தார்.

சகர உகரச் சொற்கள் இரண்டே, பகர உகரச்சொல் ஒன்றே, நகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல்  இரண்டே, ஞகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் ஒன்றே, வகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் நான்கே என எண்ணிக்கையோடு காட்டப்பட்டதன் நோக்கம் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற்கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச்சொற்கள் இவையே என அறிதற் பொருட்டு ஆகும்.

4.            குற்றியலுகரம் - குறுகிய உகரம் மொழி இறுதியில் அமையும். எ.கா. பாகு, காசு, பட்டு, பத்து, காப்பு, ஒன்று.

இவ்வாறு பன்னிரு உயிர்கள், பதினொரு மெய்கள், குற்றுகரம் ஆகிய 24 எழுத்துகள் சொற்களின் இறுதியில் அமையும். மெய் முன்னும், உயிர் பின்னுமாய் ஒலித்து நிற்பது போலவே உயிர்மெய்க்கு மெய் முதலாகும்; உயிர் இறுதியாகும்.
                                                      (தொடரும்)

கண்ணே பாப்பா தமிழ்பேசு

எண்ணம் தமிழில் இயங்கட்டும்
பண்ணில் இன்பம் பெருகட்டும்
கண்ணாய்த் தமிழைக் காத்திடவே
கண்ணே பாப்பா தமிழ்பேசு

Apr 10, 2019

முதலைத் தருவான் முருகன்

நேரிசை வெண்பா

1. ஆற்றுப்படை

முதலைத் தருவான் முருகன்அம் மூவர்
முதலுக் குரியன் முருகன் - முதற்கண்                      
நுதற்கண் ணுதித்தோன் நுதலைப் பதித்தோன்                      
நுதற்கண் ணிருத்தி நுவல்.

நாடி நரம்பெலாம் நங்குமரன் நாமங்கள்
நாடி விரைந்து நலம்பயக்கும் - நாடியே
தேடு பொருளெனும் தெள்ளறி வாளர்க்கு
நாடுபொருள் எல்லாம் நவில்

2. வாழ்த்து

குமரனே! ஞானக் குகனே! அடியார்
தமரனே! துன்பந்தீர்த் திட்ட - விமலனே!
வாழை தனிற்பந்தல் வாய்த்திடச் செய்தோனே!

வாழி!நீ நின்னடியன் வாழ்த்து                                                   

3. புகழ்

தேனாய தீந்தமிழின் தேவமக னேநீதான்
வானாகிக் காலாகி வையத்தார் - கோனே!
மனம்நிறைந்த மாணிக்க மே!மகிழ்வே! என்றே
மனம்பொருந்தக் கூறிடும் மான்                                               

சுரபூ பதியேயென் றேத்துபுகழ் கொண்ட 
சரவண னே!தமிழ்ச் சாறே! - அரவந்
தரித்த வரன்மைந் தனே!கூர் வடிவேல்
உரித்தாய் உடையவ னே!                                                            

விண்டவழ் மீனறுவர் ஊட்டமுதப் பாலகனே!
எண்டிசை போற்றிடும் எந்தையே! - தண்டமிழ்ச் 
சொல்லாய் விளங்கிடுஞ் சோலையனே! நானிலத்தே
எல்லாய் இயங்குமிறை யோய்!

தன்னம்பிக் கையாயென் னெஞ்சுலவு நாதனவன்
தன்னவரைக் காக்கும் குகையாவான் - அன்னவன்
தான்குக னாவான் தரணியும் ஆவானே
வான்கூடத் தானே அவன்                                                 

4. வேண்டல்

முருகனே! கந்தனே! கார்மேக வண்ணன்
மருகனே! செந்தமிழ்ப் பாட்டுக்(கு) - உருகனே!
எந்தையே! நின்னருளை வேண்டுகிறேன் நல்லறிவுச்
சிந்தையை நீஎனக்குத் தா                                                            

செந்தூர் எழிற்குமரா! தேர்க நினதருளால்
கந்தா!கார் மேகத் தருளெனவே - எந்தம்
அகங்குளிர ஆற்றுக ஆற்றத் தகுந்த!
குக!குகை என்னைக்கா கா                    

திருமுருக! நின்னருளை என்னிழற்குச் சேர்க்க!
உருவதுவாய் அந்நிழலை மாற்றித் - திருக்கருணை
மாரி எமைச்சேர மாட்சிமை யோங்கிட
வாரீர் வளந்தரு வீர்

என்னிறைவா என்றழைத் துள்ளம் மகிழ்கின்றேன்
தன்னிறைவாம் செல்வத்தைப் பெற்றிடவே - முன்னின்று
வாழ்த்திடுவாய் வாழ்க்கை முறையில் வளம்மேலும்
சேர்த்திடுவாய் நின்னடி யில்.

உண்மைப் பெயருடையார் போலுடலுள் ளந்தருவாய்
அண்மை இருந்தெம்மை ஆட்கொள்வாய் - திண்ணமுடன்
கொண்ட செயல்முழுமைக் கோன்மை யுடனதனால்
கொண்டிடச் செய்குவை கோன்
                                      
                      - தமிழகழ்வன்

Mar 20, 2019

பிறமொழிச்சொல் களைந்து காணீர் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

பேசுவதும் எழுதுவதும் தமிழென் றாலும்
       பெயரினிலே தமிழில்லை இலக்க ணந்தான்
பேசுவதே இல்லையில்லை பின்னர் எங்கே
       பெருமைமிகு தமிழுக்குத் தொண்டு செய்வான்
ஆசுகவி வீசுகவி ஆயி ரந்தான் 
       அடுக்கடுக்காய்ப் பட்டங்கள் சுமந்த போதும் 
வீசுமணம் பிறமொழியின் தாக்கத் தாலே
        வீணாகிப் போய்விடுமே எண்ணிப் பாரீர்

பிறமொழிச்சொல் புகும்போது தமிழில் ஓசை
       பிறழாமல் காப்பதுநம் கடமை யன்றோ
பிறமொழிச்சொல் பிறமொழிச்சொல் போதும் போதும் 
        பிறந்தமொழி அழிக்காமல் காப்பீர் அந்தோ!
அறமின்றி அவைபுகழைக் கூட்டும் என்பான்
        அழிக்கின்ற செயலினையே நாளும் செய்வான்
உறுதமிழின் உருவத்தை மறைத்து நிற்கும் 
        உணர்வற்ற பிறமொழிச்சொல் களைந்து காணீர்

Feb 28, 2019

உண்டாக்கினேன் புதிய கவிதை என்பான் - எண்சீர் விருத்தம்

கண்மூடித் தனமாக மீண்டும் மீண்டும்
    கண்டுபிடிக் கின்றதுள்ளல் என்னென் றாலோ
தொண்டறிந்த சக்கரத்தைக் காணா மூடர்
    தோண்டியகழ்ந் தெடுத்தபினே சொல்வ தைப்போல்
பண்பட்ட இலக்கணத்தைக் காணா மற்றான்
    பாட்டெழுதும் இலக்கணத்தைக் காணா மற்றான்
உண்டாக்கி னேன்புதிய கவிதை என்பான்
    உருப்பட்ட ஒன்றினையே வேண்டா வென்பான்

Feb 16, 2019

ஆசுகவிச்சுழல்

பைந்தமிழ்ச்சோலையில்  ஆசுகவிச்சுழல் என்னும் இணைய ஆசுகவியரங்கம் 10.02.2019 அன்று நடைபெற்றது.

முதல் அமர்வு:
தலைவர்: மரபுமாமணி பாவலர் மா வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே!

கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

பெரும்புகழ் சேர்க்கும் அன்பே
பேதைமை களையும் அன்பே
அரும்பிய குழந்தை காட்டும்
அரும்பெனும் முறுவல் கண்டே
திருந்துதல் வேண்டும் வையம்
செழிப்பினைக் கூட்டும் உள்ளச்
செருக்கினை அடக்கும் வெள்ளப்
பெருக்கெனத் திகழும் அன்பே 1

அன்பிலா உள்ளத் தாலே
அவலமே மிஞ்சும் மிஞ்சும்
இன்பிலா வாழ்க்கை எங்கே
எதனையும் ஈயார் தேடித்
துன்பமே சூழ வாழ்வார்
துணையென யாரு மில்லார்
நன்மைகள் சேர்க்க மாட்டார்
நானிலம் போற்ற வாழார் 2

வாழ்க்கையென் சக்க ரத்தில்
வண்டியை ஓட்டு தற்குக்
காழ்ப்புகள் நீக்க வேண்டும்
காதலைப் பொழிவ தற்குப்
பாழ்படச் செய்விக் கின்ற
பணமது வேண்டா வேண்டா
ஆழ்மனம் சொல்லும் உண்மை
அன்பொடு வாழ நன்மை 3

நன்மைசேர்த் தின்பம் நல்கும்
நயமிகு வாழ்வை நல்கும்
என்பையும் பிறருக் கீவார்
இணையிலா அன்பு கொண்டார்
வன்மைசேர் பாலை தன்னில்
வற்றிய மரந்த ளிர்த்தல்
அன்பகத் தில்லா வாழ்க்கை
அறிகுவீர் அகிலத் தோரே 4
                          ★★★

Jan 15, 2019

சோலைக் கவியரங்கம் - 8 இப்படித்தான் விடியும்.

கவியரங்கத் தலைவர்
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

கவியரங்கத் தொடக்கக் கவிதை

தமிழ் வாழ்த்து

புலவர்க்குத் தனையீந்த பொற்றமிழே! ஊற்றமிழ்தே!
சொலவியலாச் செம்மையினைத் தொண்டுமுதல் கொண்டுள்ள
பலகலைகள் வளர்த்தெடுத்துப் பன்னெடுங்கால் சிறப்பாகத்
தலைமுறையைத் தழைக்கச்செய் தண்டமிழே! வாழியவே!

சோலை வாழ்த்து

மலைக்கவைத்த யாப்புகளை வகுத்தெளிதாய்த் தேனாக்கி
உலகமுழு(து) ஒண்டமிழை ஓங்கச்செய் பைந்தமிழின்
பலவிதமாய்ப் பலநாள்கள் காய்காய்கள் கனிகனிகள்
அலகிலவாய் அளிக்கின்ற அருஞ்சோலை வாழியவே

பைந்தமிழரசு மரபு மாமணி 
பாவலர் மா.வரதராசனார் வாழ்த்து

மாவரத மாமணியே மாங்காட்டுத் தமிழ்முனியே
பாவரத்தைத் தருகின்ற பருகுந்தேம் பாவணியே
தா’வரத்தை’ எனக்கேட்க நாவளரும் முன்பேநீர்
ஆவலினைக் கூட்டியுயிர் அரும்பசிக்குச் சோறூட்டி
‘நீவளர்க’ எனவந்து நிற்கின்ற தனிப்பெருமை
யாவளத்தால் யாமுரைப்பேன்? எவ்வாறென் உளமுரைப்பேன்?
பாவளர்க! நிலம்வாழப் பன்னெடுநாள் பைந்தமிழின்
காவளர்க! நலம்வாழ்க! கனியுள்ளம் வாழியவே!

அவையடக்கம்

பேரறி வுடையன் என்றெண்ணிப்
   பேதைமை செய்யும் மூடன்போல்
சீரறி வுடைய பெரியோர்முன்
   சிற்றறி வுடையன் வாய்திறந்தேன்
காரறி வேயென் அறிவாகும்
   கருத்தினில் கவியில் பிழைத்தாலோ
பேரறி வாளர் பொறுத்தருள்க
   பிழைகளைந் தென்னை வளர்த்தருள்க

புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து

அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை
... ஐயன் வள்ளு வன்போற்றி
வழங்குதல் கண்டு வரவேற்போம்
... வருக வருக புத்தாண்டே

இன்பம் பொங்கும் புத்தாண்டோ
... இரண்டா யிரத்தோர் ஐம்பஃது
முன்னோர் போற்றி வாழ்த்துவமே
... முறைமை போற்றி வாழ்த்துவமே

பழகு செய்யுள் அக்காலப்
... பழமை போற்று! பொங்கட்டும்
வழங்கு செய்யுள் இக்காலப்
... புதுமை சாற்று! பொங்கட்டும்

பொங்க லோடு புத்தாண்டு
... போற்றிப் பாடி வாழ்த்துவமே
எங்கும் செய்யுள் நிறையட்டும்
... இன்பப் பொங்கல் பொங்கட்டும்

கவியரங்கத் தலைமைக் கவிதை

புவிநிலவும் நிலைமை சொல்லிப்
... புதுமையினைப் படைக்க வேண்டிக்
கவியரங்கம் வந்தோர் வாழ்க
... கவியின்பம் சுவைப்போர் வாழ்க
குவித்திருக்கும் குப்பை யன்ன
... கொடுந்துயரம் போக்கி வாழத்
தெவிட்டாத தமிழைக் கேட்போம்
... செவியேறத் தமிழைக் கேட்போம்

நல்லெழுச்சி உள்ளத்தில் நிகழ வேண்டும்
... நல்லவொரு குமுகாயம் மலர வேண்டும்
நல்லதமிழ் செந்நாவில் ஏற வேண்டும்
... நாடுநம தென்றெண்ணி வாழ வேண்டும்
வல்லவனாய்ச் செய்செயலில் திகழ வேண்டும்
... மண்காக்கும் வளம்காக்கும் மானம் வேண்டும்
பொல்லாத செயல்யாவும் அழிய வேண்டும்
... பொன்னுலகம் எனுமாறு போற்ற வேண்டும்

அறமில்லாச் செய்கையினைச் செய்ய வேண்டா
... ஆற்றலினை உள்ளொளித்துத் திரிய வேண்டா
சிறைப்பறவை எனும்நிலைமை நமக்கு வேண்டா
... செறுத்துமனம் வெறுத்தொதுக்கித் திரிய வேண்டா
வறண்டிருக்கும் பாலையென வாழ்க்கை வேண்டா
... வன்முறைகள் ஒருநாளும் வேண்டா வேண்டா
கறுத்திருக்கும் உளம்வேண்டா கவிதை செய்வோம்
... கனவெனவே இருப்பவற்றை நனவாய்ச் செய்வோம்

எப்படித்தான் விடியுமென எண்ணி எண்ணி
... எழுந்தவுளத்(து) ஆதங்கம் எடுத்துக் கொட்டி
இப்படித்தான் விடியுமெனின் விடிவெ தற்கோ?
... இப்படித்தான் விடிவதுவோ? தவறே அன்றோ?
இப்படித்தான் விடிவதுவே சரியே ஆகும்
... இப்படித்தான் விடியுமென இடித்து ரைப்பார்
இப்படியாய் இருபதின்மர் எழுச்சி பெற்றிங்(கு)
... எப்படித்தான் உரைக்கின்றார் எழுந்து கேட்போம்

கவியரங்க நிறைவு கவிதை

வாழ்த்து

அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
இன்பம் சூழத் துயர்தீர
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
நன்ன யங்கொள் நங்கவிஞர்
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
... விடியா நிலையும் உண்டு
விடையைத் தேடிப் போவோம்
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
படிக்காது பணியாது பண்படாது பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால்
... கால்வைக் கின்ற செயல்களிலே
வெற்றி பெற்று விடிவதுவும்
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
உற்ற உளத்துத் தன்மையினால்
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

நன்றி!

புவியறி வுறவே போற்றும் அறத்தைச்
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

Jan 14, 2019

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி 2

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழிமுதல் எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மெய்ம்மயக்கம் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த எழுத்தில் தொடங்கலாம் என்பதைப் பற்றிக் கூறும் பகுதியே மொழிமுதல் எழுத்துகளாம்.

தொல்காப்பியம் காட்டும் மொழிமுதல் எழுத்துகள்:

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மொழிமுதலாகும்.

மெய்யெழுத்துகள் மொழிமுதலாகா.

உயிர்மெய்யெழுத்துகளில் மொழிமுதலாகும் எழுத்துகளின் பட்டியலைக் கீழே காண்போம்.

க - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

த - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ந - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ப - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ம - வரிசையில் 12 உயிர்மெய்யெழுத்துகள்

ச - வரிசையில் ச, சை, சௌ ஆகிய மூன்று எழுத்துகளைத் தவிர மற்ற ஒன்பது எழுத்துகள்

வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகள்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்று எழுத்துகள்

ய - வரிசையில் யா என்னும் ஒரே எழுத்து

எந்த எழுத்தும் தன்னைக் குறிக்கும் இடத்து மொழிமுதல் ஆகி வரும்

நு - குற்றியலுகரமாகி மொழிமுதலில் வரும்

மேலே கூறப்பட்ட இலக்கண மரபிலிருந்து, வேறுபட்டுச் செய்யுளின்கண் திரிந்து முடிவனவும், இருவகை வழக்கின்கண்ணும் வழங்குமிடத்தான் மருவித் திரிவனவும் ஆகியவற்றை நல்லளவையாகிய ஆராய்ச்சியான் வழக்கு நடக்கும் இடத்தை உணர்ந்து, கூறப் பெற்ற இலக்கண நெறியோடு பொருந்த நடத்த வேண்டும் என்னும் தொல்காப்பியப் புறனடையை வழியாய்க் கொண்டு நன்னூலார் காலத்தில் சில மாற்றங்கள் எழுந்தன. அவையாவன:

ச - வரிசையில் மேலே குறிப்பிட்ட ஒன்பது எழுத்துகளோடு, ச, சை, சௌ ஆகியனவும் (பன்னிரண்டும்)

ய - வரிசையில் ‘யா’வுடன் ய, யு, யூ, யோ, யௌ ஆகியனவும்

ஞ - வரிசையில் ஞா, ஞெ, ஞொ ஆகிய மூன்றோடு 'ஞ'கரமும் மொழிமுதல் ஆகி வரும்.

ங - அ, இ, உ, எ, யா ஆகிய எழுத்துகளின் பின், மொழிமுதல் ஆகி வரும்.

இனி, அவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காண்போம்.

உயிரெழுத்துகள்: அம்மா, ஆடு, இலை, ஈசல், உரல், ஊஞ்சல், எலி, ஏணி, ஐந்து, ஒளி, ஓடம், ஔவியம்

மெய்யெழுத்துகள்: எந்தச் சொல்லும் தனித்த மெய்யெழுத்துகளை மொழிமுதாலாகக் கொள்ளாது. அது வடமொழியிலும் பிறமொழிகளிலும் மட்டுமே வரும். எனவே "க்ருபா, த்ருதி, ப்ரபு, ம்ருணாளினி, வ்யாசா" - போன்ற வட சொற்கள் "கிருபா, திருதி, பிரபு, மிருணாளினி, வியாசர்" என எழுதப்பட வேண்டும்.

உயிர்மெய்யெழுத்துகள்:

க - கடை, காக்கை, கிளி, கீரி, குயில், கூட்டம், கெண்டை, கேழல், கை, கொட்டை, கோட்டம், கௌவை

த - தன்மை, தாழை, திண்மை, தீது, துன்பம், தூக்கம், தென்றல், தேக்கம், தை, தொண்டு, தோண்டு, தௌவை

ந - நங்கை, நாடு, நிலம், நீலம், நுகர்ச்சி, நூல், நெல், நேற்று, நை, நொய், நோய், நௌவி

ப - பட்டம், பாடம், பித்தன், பீடு, புகழ், பூதம், பெண்மை, பேறு, பை, பொன், போட்டி, பௌவம்

ம - மண், மான், மின், மீன், முரண், மூடன், மென்மை, மேன்மை, மை, மொழி, மோதிரம், மௌவல்

ச - சருகு, சான்றோர், சிலை, சீற்றம், சுற்றம், சூழ்ச்சி, செற்றம், சேவல், சைகை, சொல், சோறு, சௌரம்

வ - வண்டு, வான், விடு, வீடு, வெற்று, வேல், வையம், வௌ

ஞ - ஞமலி, ஞாண், ஞெகிழி, ஞொள்கிற்று

ய - யவனர், யாறு, யுகம், யூகி, யோகி, யௌவனம்

நு - நுந்தை

ங - அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

தன்னைக் குறிக்கும் இடத்து எல்லா உயிர்மெய்களும் மொழிமுதல் ஆகி வருதல் - ஙிகரம், டகரம், வுகரம், ரகரம், யீகாரம், வூகாரம், ஞைகாரம்

இவ்வாறு, மேலே குறித்த மொழிமுதல் எழுத்துகளைத் தவிர மற்ற எழுத்துகளில் தொடங்கும் எந்தச் சொல்லையும் ஆராய்ந்து ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, வடமொழியிலும் பிற மொழிகளிலும் பல்கிப் பெருகி வழங்கிவரும் பல சொற்கள் லகரம், ரகரம், டகரம் ஆகியவற்றையும் அவற்றின் வரிசை எழுத்துகளையும் மொழிமுதலாகக் கொண்டுள்ளன. அத்தகைய சொற்கள் தமிழுக்கு வரும்போது எப்படியெல்லாம் மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பேசும்போது, ஔவையாரின் ஆத்திசூடியும், கொன்றை வேந்தனும் நமக்கு நினைவில் வரும். (தொடரும்)