Apr 17, 2021

சின்ன கலைவாணர் விவேக்

மீட்சி யொளியாய் விவேக மனங்கொண்டார்
மாட்சிமை போற்றும் உலகு                                    1

சின்ன கலைவாணர் சிந்திக்க வைத்தினிக்கும்
கன்னலாய்ச் சேர்த்தார் சிரிப்பு                             2

சான்றாய்த் திகழ்ந்தார் சமுதாயம் முன்னேறத்
தோன்றுகோள் கொண்டார் தொடர்ந்து            3

பொதுநோக்கு நோக்கிப் புதையலைத் தோண்டி
இதுநோக்கென்(று) இட்டார் மரம்                         4

சிந்திக்க வைத்துச் சிரிக்கவும் வைத்தார்நம்
சிந்தைக்குத் தந்தார் வரம்                                       5

நகைவகை நான்கும் நயமாய் நிறுத்தித்
திகைக்கச் செயல்பட்ட தேன்                                6

காட்சியின் மாட்சியில் மீட்சிகொள் நெஞ்சமே
ஆட்சியில் நின்றார் அணைத்து                            7

அடாதன பேச அடாதன ஆகும்
விடாதெடுத்துக் காட்டி யவர்                                  8

உள்ள மிருந்தால் உயர்ந்தன செய்யலாம்
தெள்ளத் தெளிவாக்கி னார்                                    9

பொன்னுடல் நீங்கிப் புகழுடல் தாங்கினார்
தன்னுட லாய்மரங்கள் சான்று                                10

Apr 11, 2021

மணிக்குறள் - 41. நாமிருவர் நமக்கிருவர்

வளமான வாழ்வுக்(கு) அடிப்படை யாவ(து)
அளவான நற்குடும்ப மே                                     401

பன்னிரண்டு பெற்ற தலைமுறை செல்வமின்றி
இன்னலில் வாழ்ந்தது காண்                              402

மக்கள் தொகைபெருக மாவளங்கள் போமிங்குத்
தக்கவாழ் வில்லை தடு                                        403

நமக்கிருவர் போதுமென நாம்கட்டுக் கொள்வோம்
நமக்கதுவே நன்மையாம் நாடு                        404

பொறுப்பின்றிப் பெற்றுப் பொருளின்றி வாழ்தல்
வெறுப்புக் கிடனாம் விலக்கு                             405

நற்குடும்பக் கட்டுப்பா(டு) ஓர்ந்து நலங்கொள்க
பொற்குடும்ப மாய்வாழ்க பூத்து                     406

பெருகிய மக்கள் தொகையால் வளமும்
பொருளும் சுருங்குதல் காண்                            407

இன்பமிகு வாழ்வுக்(கு) இரண்டே பெறல்நன்று
துன்பம் விடாமுயற்சி இங்கு                               408

அளவின்றிப் பெற்றெடுத்தல் ஆய வளமன்(று)
உளத்திருத்தி வாழ்க உயர்ந்து                           409

ஆண்டாண்டு கூட்டுவார் ஆண்வேண்டும் என்றிருப்பார்
ஆண்டவா அவ்வுளத்தை மாற்று                       410

Apr 4, 2021

மணிக்குறள் - 40. நாட்டு மருத்துவத்தை நாடு

நாடுக நாட்டு மருத்துவம் நோயின்றிப்
பாடுக பண்பாட்டைக் காத்து                               391

மூலிகை கண்டாய்ந்து முத்தாகச் சேகரிப்போம்
வேலியாய்க் காக்கும் உயிர்                                  392

புத்துணர்வு பூக்கப்பூ மாதேவி தானீந்த
அத்தனையும் நாடல் அறிவு                                  393

உணவே மருந்தாம் உணரப் பயக்கும்
பணம்வேண்டா வேண்டு நலம்                           394

வருமுன்னர்க் காக்கும் வகைமை வகுத்தார்
அருமை யுணரல் அறிவு                                         395

இயற்கையோ டொன்ற இனிதாக வாழ்வாம்
துயர்நீக்கும் நாட்டு மருந்து                                 396

பச்சிலை நாடிப் பயன்கொள்வோம் ஆய்ந்தீந்தார்
மெச்சுவோம் மேன்மை யறிந்து                       397

நாட்டு மருத்துவம் வீட்டு மருத்துவமாம்
பாட்டியின் கையில் பலன்                                  398

தாவரங்கள் தாமீயும் தாவா வரங்கொள்ளச்
சாவருமோ? வாழ்வாய் தழைத்து.                   399

திருமுருகத் தெய்வம் திருந்தியவாழ் வீயும்
மருத்துவ மாமணியாம் வாழ்த்து.                   400

Mar 28, 2021

மணிக்குறள் - 39. மூடப் பழக்கம் முடக்கு

உண்மை யுணரா உயரறி வில்லாரைக்
கண்கட்டி ஏமாற்று வார்                             381

அச்சங் கொளச்செய்வார் ஆயிரந் தான்செய்வார்
நச்சரவம் போல்வார் நசுக்கு                    382

மந்திரங் காலாம் மதிமுக்கா லாமென்று
தந்திரம் செய்வாரைத் தாக்கு                 383

ஒன்றுமிலா ஒன்றனுக்(கு) ஒன்றென்று தான்கூட்டும்
ஒன்றாத வாழ்வை ஒழி                              384

பொச்சாப் புடைமை பயன்படுத்தி நந்தலையில்
பச்சையங் குத்துவார் பார்                      385

கேடழிக்கும் கேள்வி யறிவால் வினாவெழுப்பி
மூடப் பழக்கம் முடக்கு                              386

வாடச் செயுமந்த வாழ்வுக் குதவாத
மூடப் பழக்கம் முடக்கு                              387

செறிப்பச் செயுமறிவால் செவ்வினை ஆற்றி
முறிப்பாயம் மூடத் தனம்                        388

காலத்திற் கேற்ற கருத்தாய்ந்து கட்போமே
ஆலமெனும் மூடத் தனம்                         389

நலனில்லா மூடப் பழக்கம் நசுக்கப்
புலன்றெளிந்து வாழும் புவி                   390

Mar 27, 2021

பெருங்கவிக்கோ கவினப்பன் தமிழன்

விரித்துரை செய்த யாவும்
   வியந்துளம் கொள்க வென்று
திரித்துறைந் தனவும் சொல்லித்
   திரிபடா வெண்ண மேற்றிப்
பிரித்துநான் கியலைத் தந்து
   பிரித்துமேய் வழியுங் காட்டிப்
பரிசெனப் பாட்டே தந்த
   பண்புடை நெஞ்சம் போற்றி!

Mar 21, 2021

மணிக்குறள் - 38. உன்னை உணர்

உன்னையே நீயறிவாய் உண்மையறி வாயென்று
சொன்னாரே சாக்கிரட் டீசு                                371

உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று           372

என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும்                                          373

கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து                 374

கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம்                               375

அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும்                              376

ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும்                                        377

ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு                                         378

எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து                                     379

மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து                  380

Mar 18, 2021

பாலச்சந்தர் (திருமண வாழ்த்து)

இளஞ்சந் திரனே! இளஞ்சந் திரனே!
உளஞ்சார்ந் தொருநாள் உறவென நிற்பாள்
எங்கே நிற்பாள்? எழிற்கனாக் கண்டு
பொங்கும் மகிழ்வு பொருந்து நாட்காய்க்
காத்திருந் தாயே! காத்திருந் தாயே!
பூத்திருந் தாளைப் புன்னகை யாளை
ஏற்ற நாளிஃ(து) இரம்மிய மிக்க
ஊற்றாஞ் சிந்தைக் குரிய பொன்னைப்
போற்று வாயே! 
போற்று வாயே! 

Mar 14, 2021

முருகாதலம் காரிகை - பகுதி 1

 பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


 அருவினை யாவும் அழிக்கும் வலனே அறுமுகனே!

வருவினை யாவும் வடிவேல் செலுத்தி வருத்துகவீங்(கு)

ஒருவினை என்னை உழலும் துயரில் உறுத்துவதோ?

மருவினை நீக்கு மருத்துவ மாமணி மாமுருகே!                                                      1


முருகைய! முத்தமிழ் முத்தைய! என்றும் முடிவிலனே!

உருவு மருவுமென் றோருதற் கேலா ஒருதனியே!

பெருவெளி எங்கிலும் பேரொளி யாயுள பேரிறையே!

அருவெளி என்றன் அகத்தினுக் குன்றன் அருளொளியே!                                             2


ஒளிர்ந்தெழுந் தோங்கி உலகினை ஊக்கும் ஒருதனியே!

தெளித்தருள் வாயே சிலைநாள் உறக்கத் திருந்தெழுந்து

தெளிந்த மனத்தொடு தேர்ந்தன செய்யத் துணையிருப்பாய்

துளிர்த்தநற் சூழ்ச்சி செயல்வழி நன்றாய்த் துலங்குகவே!                                  3


துலங்கு கதிர்வேல் துணைசெயுந் தொட்டுத் தொடங்குவன

இலங்கும் வழிதரும் எங்கும் நிறைந்த எழிலவனைக்

கலங்கா திருந்து களிப்பொடு காண்பாய் கடம்பமலர்

அலங்குநல் லாரமும் ஆற்றுப் படையும் அகத்தாற்றவே                                  4


ஆற்றுப் படுத்தென் னகத்தைக் குளிர்வித் தருமணியே!

ஊற்றுப் படுத்தென் னுணர்வு பெருகி உயரருவி

காற்றுப் படுத்துங் கடிதெனத் தேடக் கழலிணைகள்

ஆற்றுப் படுத்தி அருள்வாய் முருகா அடியனுக்கே!                                                5


அடியார்க் கடியவர் அன்பருக் கன்பர் அகத்துறையும்

மடியா தனவெனும் மாத்துய ரெல்லாம் மடித்தருளும்

படியாய் விளங்கலின் பாடிப் பரவிப் பணிதலுக்கே

துடிப்பவர் நெஞ்சில் துளைத்தழிக் கின்ற துயரிலையே                                      6


துயரந் தொலைத்தெழுந் தோடத் துணைசெய் தருளுகவென்

றயக்கங் களையுந் தரந்தந் துயர்த்துக தான்விழைந்து

முயல முயல முதலென நின்று முனைதலுடைச்

செயலுக் குருவாய்ச் சிறப்பொடு நின்றருள் செவ்விறையே!                           7


இறைவ னடிதொழு தின்புறு நெஞ்சே இடரெனவொன்

றுறைவ திலையுனை ஊக்குமவ் வாற்றல் உயிர்த்தெழுக!

சிறையென வாழ்வைச் சிதைத்தல் சிறப்போ சிறைவிரிக்க!

குறைபல போக்கும் குமரனைத் தேடுக குன்றினிலே                                       8


குன்றுகள் தோறும் குடியிருக் கின்ற குழக்குமரா!

இன்றெழுந் தேனென் இயற்கை எதிலும் இனிதிருப்பாய்!

பொன்றுந் துணையும் புதுக்குவாய் என்றன் புலன்றெளிய

வென்றுளம் வாழ்குவாய் வெற்றி யளிகொற் றவைமகனே!                                 9


மகனே! களைவாய் மயக்கம் செயலை மகிழ்வுடனே

அகத்தில் பொருத்தி அணுவணு வாக்கி அவைதுணிக!

இகத்தில் செயலே இனிமை பயக்கும் இறுதிவரை

வகைப்படுத் தாற்றலின் மாச்செயல் எல்லாம் வழிப்படுமே                                       10

(தொடரும்)

மணிக்குறள் - 37. பகுத்தறிவு கொள்

உண்மை யெதுவென ஓர்ந்தபின் திண்மைகொள்
ஓரா திலையே உயர்வு                                        361

பகுத்தறியு முன்னே பயனிலை யென்னல்
நகுதற் குடையது நன்கு                                     362

பகுத்தறி யென்றுவாய்ப் பக்கம் கிழிப்பார்
பகுத்தறிய மாட்டா தவர்                                  363

எல்லாம் பொதுவென்க ஏமாற்றந் தாராது
நல்லாராய் வாழ்வித்தல் நாடு                      364

மூடப் பழங்கதையை முன்னின்ற காரணத்தால்
நாடத் தெரியும் நடப்பு                                      365

ஆதியி னின்றே அறிவியல் உண்டென
ஓதி விளங்கிக் கொளல்                                   366

வாழ்விய லுக்கு வகுத்த வழிகளைப்
பாழ்வழி யாக்கல் பகை                                  367

இல்லாத காரணம் இன்னு முரைப்பார்தம்
பொல்லாங்கைத் தூற்றிப் பொசுக்கு        368

பெரியார்தம் கொள்கை பெரிததனைப் பாராச்
சிறியார்க் கறிவாவ தேது?                             369

அறிவினுக் கெட்டாத ஆக்கங்கள் உண்டு
செறிவறி வோடுசீர் தூக்கு                             370

Mar 7, 2021

மணிக்குறள் - 36. ஏறு தழுவுதல்

ஆண்மகன் வீரம் அதிலறிவோம் காக்கின்ற
மாண்புடையன் என்பாள் மகிழ்ந்து                     351

கன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் மணங்கூட
முன்னி முனைவாரிவ் வாட்டு                                352

வேலையே செய்வார்க்கு வேண்டிய ஊக்கமிந்த
காளை விளையாட்டால் காண்                             353

காளை சுறுசுறுப்பாய்க் காட்டும் விளையாட்டால்
காளையரும் காண்பார் நலம்                               354

முல்லை நிலத்தில் முதன்மை பெறுமாட்டம்
இல்லை யெனிலெங்கே இன்பு?                            355

சல்லிக்கட்(டு) ஆட்டம் தமிழரின் பண்பாடு
சொல்லிக்கட்(டு) என்றும் துணிந்து                    356

மஞ்சு விரட்டை மகிழ்வோடு கொண்டாட
நெஞ்சில் நிலைக்கும் நிறைவு                              357

விலங்கு வதையில்லை வீட்டுக்குப் பிள்ளை
துலங்கிக் களங்காண் துணிவு                              358

நங்காளை யோடுநாம் நாடியோ(டு) ஆட்டமிது
பொங்கும் இனிமையொடு போற்று                  359

நலவாழ்வின் தூணாகும் நம்நாட்டு மாடு
கலங்காது காத்தல் கடன்                                        360