Mar 15, 2014

இனியா (,பிறந்தநாள் வாழ்த்து)

நேரிசை ஆசிரியப்பா

சிறுபூங் கனியுன் சிரிப்புண ருங்கால்
சுறுசுறுப் பெறும்பும் சிறிதயர்ந் தெழுமுன்
மழலை மொழியைப் பழகும் கிளியும்
அழ்கிய உன்றன் தத்தை நடைகண்(டு)
ஆடும் பாடும் அகமே மகிழும்
காட்டுச் சிங்கமும் காணத் துடிக்கும்
காட்டுன் முத்துப் பல்லெனக் கேட்கும்
முயலுன் முயற்சி கண்டே இன்னும்
முயன்றிட வாவென் றுன்னைக் கேட்கும்
இனியா நின்ற கவிப்பொழில் போல
இனிமை சேர்ந்து பெரும்பே றெல்லாம்
மனம்பொ ருந்தப் பெற்று வாழ்க!
இனிய பிறந்த நாணல் வாழ்த்து!
கனிமகிழ் நாணல் கவின்மிகு பொழிலாய்ப்
பன்னெடும் புனல்தவழ் நன்னதி யன்ன
இன்னட் போடு சுற்றம் சூழ
பல்லாண் டிவ்வுல காண்டு
எல்லா நலமும் ஏற்று வாழ்க!

                      - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பொருள்:
சிறிய மென்மையான கனியே!
உன்னுடைய சிரிப்பை உணரும்போது, சுறுசுறுப்பாய்ச் சென்று கொண்டிருக்கும் சிற்றெறும்பும் சற்று நின்று எட்டிப் பார்க்கும்.
உன் மழலைப் பேச்சைக் கிளியும் பழகும்; உன்னுடைய கிளியைப்போன்ற நடையைக் கண்டு, அக்கிளியே ஆனந்தத்தில் ஆடிப் பாடும்.
காட்டில் வாழும் சிங்கமும், உன்னுடைய முத்துப் பல் வரிசையக் காணத் துடிக்கும்.
உன்னுடைய சுறுசுறுப்பான செயல்களைக் கண்டு, உன்னோடு விளையாட, முயலே இன்னும்  முயன்றிடவா என்று உன்னைக் கேட்டும்.
இனிமையான கவிச்சோலையப் போல வாழ்வில் எந்நாளும் இனிமை சேர்ந்து, பெரும் செல்வங்களை அடைந்து, மன நிறைவோடு வாழ்க.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் (நாணல் - நாள் நல் ['ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்' என்னும் புணர்ச்சி விதிப்படி]).
நதியோடையில் தவழும் நாணலும், அந்நாணலை 'நாளும் நலமா?' எனக்கேட்கும் நதியும், ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளும் நல்ல நண்பர்கள். அத்தகைய நதியும் நாணலும் போல, இனிய நட்பும் உறவும் சூழ, பல்லாண்டு இவ்வுலத்தை ஆண்டு, எல்லா நலங்களும் பெற்று வாழ்க!

No comments:

Post a Comment