Mar 16, 2014

இரேவதி சேகர் (பிறந்தநாள் வாழ்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா

திங்களொளிச் செங்கைதனில் மங்கலக்க லகலவளை
தங்குபதம் கொஞ்சுசிறு தஞ்சமடை கொலுசலைகள்
தங்கைதனக் கண்ணனவன் தருஞ்சீத னங்களவை
நங்குகனார் செங்கையருள் நற்பிறந்த நாள்காண்க!

'கொய்யால' என்றேதான் கொடுஞ்சொல்லைச் சொன்னாலும்
மெய்யாக அன்புடைமை செவ்வாயால் புலப்படுதே!
"அய்யய்யோ அபச்சாரம் ஆத்துக்கா ரரையானும்
ஐயாவே என்பேனே" என்றாளே தமிழச்சி!
--------------------------------------
சந்தக் கலிவிருத்தம்

செந்தாமரை மலரே!வதி யறிவாளினி! யகிலம்
அந்தார்மழை பொழிவாரக மகிழ்வாலதில் வியப்போ?
செந்தேன்மொழித் தமிழாலுளம் கனிந்தேமொழி பகர்வோர்
செந்தூரெழிற் செங்கோவருள் பெறுவாருயர் வாழ்வார்
----------------------------------------
நேரிசை வெண்பா

உன்னேர் இலாத மலருண்(டு) உலகெலாம்
உன்னேர் இலாத மலருண்டு - பொன்னேர்
இலாத மலரே இனும்பல வாண்டு
நலாஅத் தொடுவாழ்க வே!
-----------------------------------------

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆவதன் பாலைப் போல வகமது தூய்மை; செய்யும்
பாவதைப் போலச் சிறப்புப் பெற்றிடும் செயல்கள் யாவும்
காவதன் தண்மை போலக் கனிமொழி நவிலும் தங்கை
ரேவதி வாழ்க நாளும் நலத்தொடு வளத்தி னோடே         1

வீரமி குந்த கண்கள் வீரிய மிக்க வெண்ணப்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணென வாழி தங்காய்
சீரதில் சேரும் சந்தம் சிறப்பினைத் தரூஉம் அதுபோல்
நீரதி வாழ்க வாழ்க நித்தமும் மகிழ்ச்சி யோடே                2

---------------------------------------------
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தளிர்நெஞ்சத் தங்கைநீ தண்ணு ளத்தில்
  தனித்தன்மை எண்ணங்கள் தழைத்தே ஓங்க
வெளியீட்டு மேலாண்மைத் துறையி னின்று
  மேன்மையுள தகவல்சேர் கிடங்கு சென்று
களிப்போடு பணியாற்றிக் கற்றுத் தேர்ந்து
  களமிறங்கி யுனைநிறுத்தி நலமாய் வாழ்க!
உளிசெய்யும் சிற்பத்தின் எழிலே போல
  உலகமுனைப் போற்றட்டும் நலமாய் வாழ்க!

------------------------------------------------------
கலிவிருத்தம்

ரேவதிசே கரரே ரேரகமே விவரே  
ரேவவிலை துயரே ரேயதுணை யவரே
ரேவயமே வதிரே ரேதிவர ரவரே
ரேவரர மலரே ரேலமஃ திவரே

                        - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

பாடலைப் பிரித்தறிய:
ரேவதி சேகரர் ஏர் ஏரகமே இவர்
ஏர் ஏவ இலை துயர் ஏர் ஏய துணை யவர்
ஏர் ஏ வயமே அதிர் ஏர் ஏது இவர் அரவர்
ஏர் ஏவ வர மலர் ஏர் ஏலம் அஃது இவரே

சொற்பொருள்:
ரேவதி சேகர் - தோழியின் பெயர் ( முன்னிலையாய்க் கொண்டு முருகனைப் பற்றி எடுத்துச் சொல்லும் பொருளில்)
ஏர் ஏரகமே - அழகிய சுவாமிமலை
ஏர் ஏவ - நன்மையின்பொருட்டு ஆணையிட
இலை துயர் - துன்பம் இல்லை
ஏர் ஏய துணையவர் - கருத்து ஒருமித்த துணைவன்
ஏர் ஏ வயமே - ஊக்கமும் பெருமையும் வயப்படும்
அதிர் ஏர் ஏது - முழங்கும் ஊக்கமுடையவன் அவனைப் போல யாரும் இல்லை
இவர் அரவர் - முழங்கும் ஓசையை எழுப்பும் படையைக் கொண்டவன்
ஏர் ஏ வரர் அமலர் - நன்மை பெருகும் வரந்தருபவன், தூயவன்
ஏர் ஏல் அம் - வளர்ச்சியைக் கூட்டும் அழகு


பாம்பன் சுவாமிகளின் கமலபந்தப் பாடலொன்றைப் படித்து, அதைப்போலவே எழுத முயன்றதன் விளைவு இது. என்னுடைய அலுவலகத் தோழியின் பிறந்த நாளுக்கு வாழ்த்தாக இப்பாடலைப் படைக்க எண்ணித் தொடங்கினேன்.. ஆனால், முருகாற்றுப்படையாய்த் தோழியிடம் உரைப்பதுபோல் முடிந்துவிட்டது. இப்பாடலில் 'ர'கரத்தை மொழிமுதலாய்ப் பயன்படுத்த நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும்.
--------------------------------------------------

அரே அரே அரே
வதி வதி வதி

ரேவதி ரேவதி ரேவதி

ரங்கம்மா - மழைக்
கங்கம்மா - பெரும்
தங்கம்மா - சொக்கத்
தங்கம்மா - என்
தங்கையம்மா 

பிறந்து சிறந்த நாளது 
பத்தோ டொன்று வேறெது
நாளும் திங்களும் நேருது
நலமும் வளமும் சேருது

அறிவு கல்வி சேகரம்
அன்பும் பண்பும் மேகலை
அள்ளித் தந்த ஓர்வரம்
ஆற்றல் உள்ளம் நேர்தவம்

தருணம் நன்று நல்கியே
தழைக்கும் அறங்கள் பல்கியே
கருணை பொழியும் கார்முகில்
கருத்தும் கனிவும் சேர்முகில்

அறிவீர் அறிவன் தன்மீனே
வளப்பம் பொருந்திய நன்மீனே
பிறந்த நாணல் வாழ்த்துகள்
சிறந்து வாழ்க பல்லாண்டே!
                  - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

1 comment:

baskaran said...

நீங்கள் இக்கால வியாசர் நன்றிகள் பல. நீர் படித்த பள்ளியில் நான் கற்றது பெருமை கொள்ள வைக்கிறது என்மனம்..

Post a Comment